ஜம்முனு வாழ காம்கேரின் OTP-45: அங்கே இடம் வாங்கிப் போட்டால், தலைமுறைக்கும் பெருமை சேர்க்கலாம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 45
பிப்ரவரி 14, 2021

அங்கே இடம் வாங்கிப் போட்டால், தலைமுறைக்கும் பெருமை சேர்க்கலாம்!

நேற்று என் சகோதரனின் வீடு ஒன்றை விற்பதற்கான ஏற்பாட்டில் அந்த வீட்டை வாங்குபவர்களை என் வீட்டுக்கு அருகிலேயே Work From Home செய்வதற்காக நான் ஏற்பாடு செய்துள்ள அலுவலகத்துக்கு வரச் சொல்லி இருந்தோம். அந்த அலுவலகத்துக்கு அப்பாவும் வந்திருந்தார்.

வீட்டை வாங்க வந்திருந்தவர் தனக்கு ஒரே மகள்தான், சட்டம் படித்துக்கொண்டிருக்கிறாள் எனவும் தன் காலத்துக்குப் பிறகு அவளுக்குத்தான் தன்னுடைய எல்லா சொத்துக்களும் எனவும் சொல்லி வார்த்தைக்கு வார்த்தை பணம், சொத்து என பொருளாதாரம் குறித்த விஷயங்களையே சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் என் அலுவலகத்தில் ஷோ கேஸில் இருந்த புத்தகங்களை பார்த்துவிட்டு ‘ஏம்மா நீங்க புத்தகங்கள் விற்பனை செய்கிறீர்களா? என கேட்டார்.

‘இல்லை சார்… இதெல்லாம் நான் எழுதிய புத்தகங்கள்தான்…’ என்றபோது ஆச்சர்யப்பட்டார்.

‘அப்படியா?’ என்று அதிசயித்தார்.

‘நீங்களே எழுதுகிறீர்களா அல்லது பிறர் எழுதியதை வெளியிடும் பப்ளிஷரா?’ என்று தொடர்ந்தார்.

‘எழுதுவேன், பப்ளிஷ் செய்வேன், எல்லாம் செய்வேன்…’ என சொல்லிவிட்டு என்னுடைய முதன்மைப் பணியான சாஃப்ட்வேர் துறை குறித்தும் காம்கேர் குறித்தும் சொன்னேன்.

நாம் சும்மாவே நடனம் ஆடுவோம். காலில் சலங்கையை வேறு கட்டிவிட்டால் கேட்கவா வேண்டும். காம்கேரின் கதையை சுருக்கமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு விரிவாக சொன்னேன்.

பிறகு என் பர்சனல் விஷயங்கள் குறித்து கேட்டார். பொறுமையாக கேட்டுக்கொண்டவர் இறுதியில், ‘அப்பா அம்மாவை நல்லா பார்த்துக்கறீங்க…’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

நான் அவசரமாக இடைமறித்து ‘இல்லை சார், அப்பா அம்மாதான் என்னைப் பார்த்துக்கறாங்க…’ என்றேன்.

‘ஆஹா…’ என சொன்னவர் என் அப்பாவை பெருமையாகப் பார்த்தார்.

‘என்னுடைய மகளுக்கு நான் என்ன செய்தாலும் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும் அவளுக்கு நான் ஹீரோவா இருக்க முடியலை. அவளுடைய ஹீரோவா சச்சினும், விஜய்யும், ஏ.ஆர்.ரகுமானும்தான் ஹீரோவா இருக்காங்க…’ என்று சொன்னார்.

கொஞ்சம் பெருமூச்சு விட்ட பிறகு தெளிவானார்.

‘எப்படி என் மகளுக்கு ஹீரோவாவது என்று இப்போது நான் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்… எதிர்காலத்தில் என் மகள் என்னைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது என் அப்பாதான் என்னை பார்த்துக்கொள்கிறார் என்று சொல்லும் அளவுக்கு என்னை நான் உயர்த்திக்கொள்ளப் போகிறேன்…’ என்று சொன்னவர் கண்களில் கொஞ்சம் ஈரம்.

‘எப்படி சார் உங்களுக்கு இது சாத்தியமானது?’ என என் அப்பாவைப் பார்த்து கேட்டார்.

அதற்கும் நானே பதில் சொன்னேன்.

“என் அப்பா அம்மா இரண்டு விஷயங்களை எங்களிடம் சொன்னதே இல்லை.

ஒன்று, ‘நாங்கள் அந்த காலத்தில் எப்படி கஷ்டப்பட்டோம் தெரியுமா… உங்களுக்கு இப்போது இருக்கும் வசதிகள் எல்லாம் கிடையாது… அப்படிக் கஷ்டப்பட்டு வளர்ந்தோம்…’

இரண்டாவது, ‘நாங்கள் எப்படி எல்லாம் ராத்திரி பகலாக கஷ்டப்படறோம் உங்களுக்காக, எவ்வளவு பணம் செலவழிக்கிறோம், நாங்கள் பணம் சம்பாதிப்பதே உங்களின் எதிர்காலத்துக்காகவும் சந்தோஷத்துக்காகவும்தான், கொஞ்சமாவது எங்கள்  கஷ்டம் புரிகிறதா…’

மதிப்பெண் குறைந்தாலும் சரி,  தம்பி தங்கைகளுக்குள் சண்டை போட்டுக்கொண்டாலும் சரி, ஏதேனும் சிறு தவறுகள் செய்தாலும் சரி, அறியாமல் அடம் பிடித்தாலும் சரி, புரியாமல் கோபித்துக்கொண்டாலும் சரி.  நேரடியாக நிகழ்வுக்கான தீர்வை கொடுப்பதில்தான் கவனமாக இருப்பார்களே தவிர, நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்போதுவரை ஒருநாளும் மேலே சொன்ன இரண்டு விஷயங்களைச் சொன்னதே இல்லை.

பணத்தைக் காட்டிப் பெற நினைக்கின்ற அன்பு ஆத்மார்த்தமானதாக இருக்காது. உங்களை அவர்களே உணரும் அளவுக்கு உங்களின் செயல்பாடுகள் ஆத்மார்த்தமானதாக இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்கும் அன்பை சம்பாதிக்க முடியும்” என்றபோது அவர் என் பார்த்த பார்வையில் மரியாதை கூடி இருந்தது.

‘நீங்கள் சொன்ன ஒரு கருத்து இதுநாள் வரை நான் சுமந்துகொண்டிருந்த என் எண்ணங்களையும் என்னையும் புரட்டிப் போடும் அளவுக்கு அமைந்துவிட்டது. உங்கள் வீட்டை வாங்குகிறோமோ இல்லையோ என் மகளின் மனதில் எனக்கான ஒரு இடத்தைப் பெறுவதே இனி என் லட்சியம்…’ என்று சொல்லி விடைபெற்றார்.

அப்பா அம்மாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்கள் கவனத்துக்கு!

யாரேனும் உங்களை ‘அப்பா அம்மாவை நல்லா பார்த்துக்கறீங்க… கடைசி காலத்தில் நல்லா காப்பாத்தறீங்க…’ என்று வாழ்த்தினால் அதற்காக பெருமைப்படுவதைவிட்டு ‘அப்பா அம்மாதான் எங்களுக்கு பக்கபலமா இருக்காங்க…’ என்று உங்கள் பெற்றோர் காதுபட சொல்லிப் பாருங்கள். அவர்கள் மனது எத்தனை குளிரும் என்று வார்த்தைகளால் வடிக்க இயலாது.

‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்…’ அளவுக்கு அத்தனை சந்தோஷம் அடைவார்கள். உங்களை வளர்த்து ஆளாக்கி எல்லா நேரங்களிலும் ஆதரவாக இருந்த (இருக்கும்) அவர்களுக்கு இதைவிட வேறென்ன செய்துவிட முடியும்?

‘இடம் வாங்கிப் போட்டு’ சொத்து சேர்ப்பதைவிட பிள்ளைகள் மனதில் ‘இடம் பெற்று’ தலைமுறைக்கும் பெருமை சேர்ப்பதுதானே பெரிய விஷயம்?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 5 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari