ஜம்முனு வாழ காம்கேரின் OTP-46: வித்தியாசமாக சிந்திப்பது வேறு, சிந்தனையே வித்தியாசமாக இருப்பது வேறு!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 46
பிப்ரவரி 15, 2021

வித்தியாசமாக சிந்திப்பது வேறு, சிந்தனையே வித்தியாசமாக இருப்பது வேறு!

எல்லா தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக எப்படி எழுத முடிகிறது? பலரும் என்னிடம் கேட்கும் கேள்விகளுள் இதுவும் ஒன்று.

இப்போது மட்டுமில்லை, பள்ளி கல்லூரி காலங்களில் இருந்தே அந்தந்த வயதில் எல்லோரும் செய்வதையே செய்துகொண்டிருக்காமல் நம் கலாச்சாரமும் பண்பாடும் சிதையாமல் எதிலும்  புதுமையைப் புகுத்தி செயல்பட்டுக்கொண்டிருப்பதால் என் எழுத்தும் அந்த அரிதாரத்தை பூசிக்கொண்டு அவதாரங்கள் பல எடுக்கின்றன என நம்புகிறேன்.

எண்ணம் சொல் செயல் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதால் சொல்லுகின்ற விஷயங்களும் எழுதுகின்ற எழுத்தும் போலித்தனம் இல்லாமல் அமைந்துவிடுகின்றன என நினைக்கிறேன்.

புதுமை என்ற பெயரில் அபத்தங்களை செய்வதில்லை. நம் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில்  புதுமைகள் அமைந்திருக்க வேண்டும். பிறர கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக எதையும் புதுமையாக செய்யாமல், எல்லாவற்றையுமே புதுமையான புதுக்கண்ணோட்டத்தில் பார்ப்பதால் செய்கின்ற செயல்கள் அத்தனையும் புதுப்பரிணாமத்தில் வெளிப்படுகின்றன என கருதுகிறேன்.

நம் கால அனுபவங்களை நம் காலத்தில் அமர்ந்துகொண்டு எழுதாமல் நாம் இப்போது வாழுகின்ற காலத்துக்கு ஏற்றாற்போல் சொல்வதால் இருக்கலாம்.

உதாரணத்துக்கு ஒளவைப் பாட்டி சொன்ன ‘அறம் செய விரும்பு’ என்பதை பொதுவாக எப்படி விளக்கம் சொல்வார்கள் என நீங்களே நினைத்துப் பாருங்களேன்.

‘அறம் என்றால் கொடை. தர்மம். இல்லாதவர்களுக்கும் எளியவர்களுக்கும் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும். அதுதான் தர்மம். தர்மம் தலைகாக்கும். நாம் நல்லபடியாக இருக்கிறோம் என்பதற்கு அடையாளமே நம்மைவிட வறியவர்களுக்கு உதவுவதே’ இப்படித்தான் பொதுவாக சொல்வார்கள். இன்னும் புரிய வைக்க கூடுதலாக ஒரு கதையையும் சேர்த்து சொல்வார்கள்.

நான் எப்படி விளக்கம் சொல்வேன் தெரியுமா? ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் சொல்கிறேன்.

ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும். அதை செயல்படுத்தும் வழிமுறைகள் நம் கண்முன்னே வரிசைகட்டி நிற்கும். ஒரு செயலை மனதார விருப்பப்பட்டு செய்யும்போது அந்த செயலை அப்போதைக்கு நல்லபடியாக செய்துமுடிக்க முடிவதோடு தொடர்ச்சியாக அந்த செயலை செய்ய வேண்டும் என்கின்ற நேர்மறை உந்துதலும் நமக்குள் ஏற்படும்.

இந்த லாஜிக்கை அன்றே உணர்ந்த ஒளவை பாட்டி ‘அறம் செய்’ என யாரையும் கட்டாயப்படுத்தாமல் ‘அறம் செய விரும்பு’ என அறம் செய்வதற்கு ஆசைப்பட சொல்லிவிட்டுச் சென்றிள்ளார்.

சாப்பிடுவதற்கு முன் பசியை தூண்டுவதற்காக அல்லது சமன் செய்வதற்காக நாம் சாப்பிடும் பதார்த்தங்களுக்கு அப்பிடைசர் (appetizer) என்று பெயர். பெரும்பாலும் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்னர் நாம் சாப்பிடும் சூப், கருவடாம், பகோடா போன்றவை அப்பிடைசர் பிரிவின் கீழ் வரும்.

அப்பிடைசர் என்பது முழு சப்பாடு அல்ல. சாப்பிடுவதற்கு முன்னர்  ‘கொறிப்பதற்காக’ நாம் எடுத்துக்கொள்ளும் பதார்த்தம். அவ்வளவே. ஆனால் அதுதான் நாம் சாப்பிடும் முழு சாப்பாட்டையும் சுவைத்து சாப்பிட வைக்கும் தூண்டுகோல்.

இதே அப்பிடைசர் லாஜிக்கைத்தான் நம் ஒளவைப் பாட்டியும் பயன்படுத்தி உள்ளார்.

அறம் செய்வதற்கு முன் அறம் செய்ய ஆசைப்பட வேண்டும் என அறம் குறித்த சிந்தனையை ‘அப்பிடைசர்’ போல நமக்கு கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் ஒளவை.

அறம் செய்ய விரும்ப வேண்டும் என்பதை சாப்பாட்டு விஷயமான அப்பிடைசருடன் ஒப்பிட்டு சொல்லும்போது சிறுவர் சிறுமியர்கள் முதற்கொண்டு அத்தனைபேரின் கவனமும் நாம் சொல்லுகின்ற விஷயத்தின் மீது குவியும்தானே.

இந்த விஷயத்துக்கு மட்டுமில்லாமல், எல்லாவிஷயங்களிலும் என் பார்வை  இப்படித்தான் அமைந்திருக்கும். இன்று நேற்றல்ல. எனக்கு நினைவு தெரிந்த நாளாய் இப்படித்தான் வாழ்கிறேன்.

என் பெற்றோரிடம் இருந்து இந்த விஷயம் எனக்குள் இறங்கி இருக்கலாம். பிறர் என்ன நினைப்பார்கள் என சதா அடுத்தவர்களை கருத்தில்கொண்டு நம் வாழ்க்கையை பிறர் போட்டுக்கொடுத்தப் பாதையில் அமைத்துக்கொள்ளாமல்,   நம் வாழ்க்கையில் நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்முடைய செயல்பாடுகளை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக்கிக்கொண்டு வாழ்வதற்கு அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் பயணிக்கிறேன்.

புதுமை என்பது வித்தியாசமாக சிந்திப்பதல்ல, சிந்தனையே வித்தியாசமாக இருப்பதுதான் புதுமை. என் சிந்தனை இந்த ரகம்தான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 53 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon