ஃபேஸ்புக் Tagging நாகரிகம்!
ஃபேஸ்புக்கில் மற்றொருவரது போஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்து அவர் பெயரை Tag செய்வதாக இருந்தால் இரண்டு விஷயங்களில் கவனம்.
முதலாவது: உங்கள் பாதுகாப்புக்கு!
காப்பி பேஸ்ட் செய்தால் அவர் பெயரை பதிவின் தொடக்கத்திலேயே Tag செய்யவும். கடைசியில் Tag செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பெரும்பாலும் கடைசி வரி வரை யாரும் படிப்பதில்லை. பதிவைப் படிப்பவர்கள் நீங்கள் எழுதிய பதிவாகவே நினைத்துப் படிப்பார்கள். பதிவு நல்லதாக இருந்துவிட்டால் பதிவை வாசிப்பவர்கள் நீங்களே அதை எழுதியதாக நினைத்து உங்களை பாராட்டுவார்கள். கைகுலுக்குவார்கள். ‘ஆஹா… ஓஹோ’ என்பார்கள். அதுவே அவர்களின் கருத்துக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் போச்சு. காப்பி பேஸ்ட் செய்யும் உங்களுக்குத்தான் ‘பொங்கல்’ வைப்பார்கள்.
எனவே, உங்கள் ஃபேஸ்புக் பேஜில் பிறர் பதிவை காப்பி பேஸ்ட் செய்தால் பதிவின் தொடக்கத்திலேயே எழுதியவரின் பெயரை Tag செய்யுங்கள்.
இரண்டாவது: எழுதியவரை பிரச்சனைக்குள் தள்ளாமல் இருக்க!
அப்படி Tag செய்யும்போதும் மற்றொரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது உங்கள் கருத்தை முகப்பில் டைப் செய்து பிறகு பிறர் பதிவை காப்பி பேஸ்ட் செய்தால் அது கண்டிப்பாக படிப்பவர்களை குழப்பும். ஏனெனில் நீங்கள் டைப் செய்யும் கருத்து உங்கள் பார்வையில் இருக்கும். நீங்கள் காப்பி பேஸ்ட் செய்த பதிவின் சாராம்சம் வேறொரு கோணத்தில் இருக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும்.
இவ்வளவு ஏன்? அவரது பதிவில் இருந்து ஒரு வார்த்தை / ஒரு வரி / ஒரு பத்தியைக் கூட வெட்டி எழுதாதீர்கள். ஏனெனில் அவை அவரது பதிவோடு ஒட்டி வரும்போது வேறு பொருள்படும். வெட்டி தனியாக எழுதும்போது முற்றிலும் வேறொரு பொருளில் புதிய கோணத்தில் இருக்கும். தவறான அர்த்தத்தை படிப்பவர்களுக்கு உண்டாக்கலாம்.
இது நிச்சயம் பதிவை எழுதியவருக்கு பிரச்சனையையே உண்டாக்கும். எனவே, பதிவை எழுதியவரை சங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள்.
அதுவும் பதிவு அரசியல் குறித்த பதிவாக இருந்துவிட்டால் பிரச்சனை பெரிதாகும். உங்களையும் சிக்கலுக்குள் தள்ளும்.
எனவே, பிறர் பதிவை காப்பி பேஸ்ட் செய்யும்போது அந்தப் பதிவின் தொடக்கத்திலோ, கடைசியிலோ உங்கள் கருத்தை டைப் செய்யாதீர்கள்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
December 11, 2021