#கதை: மஞ்சப் பை!

‘மஞ்சப் பை’ 

ராஜிக்கு அழுகை அழுகையாக வந்தது. மிகவும் பிரயத்தனப்பட்டு கண்ணீரை கண்களுக்குள் இழுத்துக்கொள்ளப் போராடினாள். அறை வாசலில் காலடி சப்தம். வேக வேகமாக பக்கத்தில் வைத்திருந்த ஜபமாலையை கையில் எடுத்து கண்களை மூடி வாயால் சப்தம் வராமல் ஸ்லோகம் சொல்லி ஸ்படிகத்தை உருட்டத் தொடங்கினாள்.

‘என்னம்மா, இப்பவெல்லாம் நேரம் காலம் இல்லாமல் ஜபம் செய்யறே…’ என கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அகிலா சென்றுவிட்டாள்.

ராஜி சிறிது நேரம் ஜபத்துக்குப் பிறகு சர்வ ஜாக்கிரதையாய் மகள் சென்றுவிட்டாளா என்பதை உறுதி செய்துகொண்டு கண்விழித்துப் பார்த்தாள்.

எத்தனைப் பிரயத்தனப்பட்டாலும் அறை மூலையில் வைத்திருந்த மஞ்சள் நிற கட்டைப் பையை பார்க்காமல் இருக்க முடியவில்லை. ‘கமலா டெக்ஸ்டைல்ஸ்’ என்று கொட்டையாய் எழுதியிருந்த ஜவுளிக் கடையின் பெயர் அவளைப் பார்த்து கேலியாய் சிரித்தது.

‘கமலா டெக்ஸ்டைல்ஸாம் கமலா டெக்ஸ்டைல்ஸ், நாசமா போக…’ தேவையே இல்லாமல் அந்தத் துணிக்கடை சாபம் வாங்கியது.

அவள் அழுகைக்குக் காரணம் பெரியதாய் ஒன்றுமில்லை. அவளுடைய  புடவைகளை வைத்துக்கொள்ள பீரோவின் ஒரு தட்டை கொடுத்திருந்தாள் மகள். இப்போது பொங்கலுக்கு புத்தாடைகள் வாங்கி இருந்ததால் அவற்றை வைக்க இடம் போதவில்லை என அவளுடைய புடவைகளை மஞ்சள் நிற கட்டைப் பைக்கு மாற்றினாள். அதுதான் ராஜியின் துக்கத்துக்கும் அழுகைக்கும் காரணம்.

இத்தனைக்கும் ராஜியின் குடும்பப் பின்னணி ஒன்றும் பிரமாதமில்லை. குழந்தைகள் வளரும் வரை கணவன் உயிருடன் இருக்கும்போது ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட சாதாரண சிறிய வீட்டில்தான் வசித்து வந்தாள். ஒரே ஒரு மர பீரோ. அதுதான் ஒட்டு மொத்த குடும்பத்தினரின் உடைகளுக்கும் அடைக்கலம். தேவைப்பட்டால் தன் உடைகளை ஒரு பையில் எடுத்து அடைத்துக்கொள்வாள். அப்போதெல்லாம் வராத கோபமும் ஆற்றாமையும் அழுகையும் இப்போது வருகிறது.

ஒரே மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி சென்ற பிறகு கணவனுடன் ஒண்டிக் குடித்தனம். அந்த மர பீரோவில் விஸ்தாரமாக தன் புடவைகளை நீவி நீவி மடித்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். புடவைக்கு மேட்ச் மேட்சாய் பிளவுஸையும் வைத்துக்கொண்டு ரசிக்க ஆரம்பித்தாள். மேட்சாய் பிளவுஸ் போட்டுக்கொள்ள வேண்டிய நாட்களில் புடவை ஓரிடம் பிளவுஸ் ஓரிடமாய் இருக்கும் பீரோவில் இருந்து தேடி எடுக்க நேரம் இல்லாமல் எது கைகளில் கிடைக்கிறதோ அதை உருவி எடுத்து போட்டுக்கொண்டு புடவையையும் கைக்கு தோதாய் வந்த தினுசில் கட்டிக்கொண்டு குழந்தைகளையும் கணவனையும் கவனிக்க ஓடிக்கொண்டே இருப்பாள்.

ஆனால் இப்போது மகள் தன் புடவைகளை கட்டைப் பையில் எடுத்து வைத்துவிட்டாள் என்பதற்கு துக்கம் கொண்டாடுகிறாள்.

வம்படியாய் அழுகை சீண்டிப் பார்க்கத்தான் செய்தது. ‘அழும்போது மூக்கும் சேர்ந்து அழுகிறது, சனியன்… மூக்கை உறுஞ்சினால் சப்தம் கேட்குமே என்ற விவஸ்தை கொஞ்சமாவது இந்த மூக்குக்கு இருக்கிறதா?’ என மூக்கை வஞ்சனை இல்லாமல் திட்டினாள்.

புடவை தலைப்பால் மூக்கையும் கண்களையும் துடைத்துக்கொண்டு அறையில் இருந்த ஜன்னல் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

‘அம்மா, சாப்பிட வரியா?’

மகள் அழைப்பது கேட்டது.

‘வரேன்… வரேன்…’ என்று முனகியடி சாப்பிட உட்கார்ந்தாள்.

இரவில் அவளுக்கு சப்பாத்திதான். இன்று அவளுக்காக தொட்டுக்கொள்ள காரம் போடாத பயந்தப்பருப்பும் தக்காளியும் போட்டு செய்த கொஸ்து. சில நாட்களில் காலையில் செய்த கூட்டு, பொறியல் இப்படி ஏதேனும் இருந்தால் அதையே தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிடுவாள்.

‘என்னம்மா, அழுதா மாறி இருக்கு…’

‘ஒண்ணுமில்லை…’

‘அவன் அடுத்த வாரம் வீக் எண்ட்ல வந்து உன்னை அழைச்சுண்டு போறேன்னு சொல்லி இருக்கான்…’

‘ம்…’

மகளிடம் ஒரு மாதம், மகனிடம் ஒரு மாதம் இப்படித்தான் அவள் காலம் கழிகிறது.

சாப்பிட்டுவிட்டு மகள் சாப்பிடும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினாள். பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க என எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை.

‘இளம் வயதிலேயே கணவனை இழந்த அகிலாவும்தான் என்ன செய்வாள் பாவம்… ஒரே மகன்… இன்ஜினியரிங் படிச்சுண்டு இருக்கான்… ஒரே அறை உள்ள இந்த வீட்டில் தனக்காகவும் மகனுக்காகவும் கூட அந்த அறையை வைத்துக்கொள்ளாமல் எனக்காக கொடுத்திருக்கிறாள்…அவர்கள் இருவரும் ஹாலிலேயே படுத்துக்கொள்கிறார்கள்…’ உள்ளே சென்ற சப்பாத்தியும் கொஸ்த்தும் சாத்வீக சிந்தனைகளால் அவளை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

‘மாத்திரை சாப்பிட்டாயாம்மா…’

‘ம்… சாப்பிடறேன்’.

‘சரி நான் தூங்கறேன். எதாவது வேணும்னா கூப்பிடு…’

‘ம்’

இரவு விளக்கு மட்டும் இளம் சிவப்பில்  எறியத் தொடங்கியது. ராஜி மஞ்சப் பை நினைவுடனேயே நீண்ட நேரம் விழித்திருந்தாள்.

சொன்னபடி வார இறுதியில் ராஜியின் மகன் அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அங்கும் ராஜிக்கு அழுகை அழுகையாய் வந்தது.

அதே துணிமணிகள் வைக்கும் பிரச்சனைதான். மருமகளும் வேலைக்குச் செல்வதால் மகளைவிட மகன் வசதியானவன்.

‘நான் என்ன தொடக் கூடாதவளா, என் துணிமணிகளைத் தொட்டா வியாதியா வந்துடும். எனக்காக தனியா குட்டி பீரோ வாங்கி வச்சுட்டு, அதையும் உனக்கொரு சர்ப்ரைஸ் அப்படின்னு எத்தனை கொழுப்பிருந்தா என்கிட்ட காண்பிச்சிருப்பான்… அவன் வைத்திருக்கும் பீரோவில் என் துணிமணிகளை வைத்தால் என்ன குடியாமுழிகிடும்…’ என முனகியபடி கண்களுடன் ஜோடி சேர்ந்து அழும் மூக்கையும் சேர்த்து துடைத்துவிட்டுக் கொண்டே தனக்காக வாங்கி வைத்திருந்த குட்டி பீரோவை பார்த்துப் பார்த்து பொறுமிக்கொண்டிருந்தாள் ராஜி.

இப்போது அவளைப் பார்த்து சிரித்தது ‘godrej’ என்று பெயரிடப்பட்ட அந்த பீரோ.

‘கோத்ரஜாம் கோத்ரஜ், நாசமா போக…’. இப்போது தேவையே இல்லாமல் அந்த பீரோ சாபம் வாங்கியது.

அவளுடைய பிரச்சனைதான் என்ன? கட்டைப் பையா? பீரோவா?

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,295 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon