மலர்வனம் மே 2022 இதழில் வெளியான கதை
புத்தக வடிவில் படிக்க: மலர்வனம் மே 2022
அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் அவர்கள் இருவரும் ஐடி பிரிவில் தலைமை சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள். ஐந்தாறு வருடங்களாக சேர்ந்து பணிபுரிகிறார்கள். முப்பத்தைந்து வயதைக் கடந்தவர்கள். நல்ல நண்பர்கள்.
அவன் அமெரிக்கன். அவள் இந்தியாவில் இருந்து வந்தவள். அவனுடைய மகள் பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் அடி எடுத்து வைக்கிறாள். அவளுடைய மகன் பள்ளி இறுதியில்.
ஒருநாள் அவன் முகத்தில் வழக்கமான உற்சாகம் மிஸ்ஸிங். அவள் என்ன என்று கேட்கவில்லை. அவனுடைய மகளை சேர்க்க இருக்கும் கல்லூரிக்குச் செல்ல அங்கிருந்து 7 மணி நேர கார் டிரைவிங். கல்லூரி திறக்க இன்னும் ஓரிரு தினங்களே இருந்ததால் மகளைப் பிரிய வேண்டுமே என்கின்ற வருத்தமாக இருக்கும் என நினைத்துகொண்டு அமைதியாக இருந்தாள்.
பொதுவாக அமெரிக்காவில் பிள்ளைகளை குறிப்பிட்ட வயதுக்கு மேல் கண்டுகொள்ள மாட்டார்கள். தனித்துவமாக இயங்கச் செய்வார்கள். அவர்களே உழைத்து சம்பாதித்துத்தான் படிக்க வேண்டும். புது கார், சொந்தமாக வீடு, திருமணம் என எல்லா செளகர்யங்களையும் தாங்களே சுயமாக சம்பாதித்துத்தான் அனுபவிக்க முடியும். அவர்களுக்கு இந்தியப் பெற்றோர்களைப் போல் அத்தனை பாசம் எல்லாம் கிடையாது. குடும்பம், பந்தம், பாசம், நேசம், சென்டிமென்ட் இதற்கெல்லாம் அத்தனை முக்கியத்துவம் கிடையாது என்றெல்லாம் சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். மேம்போக்காகப் பார்த்தால் இதெல்லாம் உண்மை என்றுதான் நம்பவும் முடியும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால் வேறொரு கோணம் புரியும்.
இருவருக்கும் மதிய சாப்பாட்டுக்குப் பிறகு காபி சாப்பிடும் வழக்கம் உண்டு. காபி ஷாப் சென்றார்கள். அப்போதும் அவன் உற்சாகமில்லாமலேயே இருந்ததால் ‘என்ன மகளைப் பிரியப் போகும் வருத்தமா?’ என கேட்டாள். அதற்கு அவன் ‘ஹா… ஹா… ஹா…’ என பெரிதாக சிரித்து ‘என்ன வருத்தமா, அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக்கொள்ளும் நேரம் வந்தாயிற்று, படிக்கக் கிளம்புகிறாள், எனக்கான சுமை இனி இல்லை, நோ சென்டிமென்ட்…’ என சொல்லி வலுகட்டாயமாக உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு காபி குடித்தான்.
இரண்டு தினங்களுக்குப் பிறகு ஒருநாள் மாலை மாலுக்குச் சென்றிருந்தாள் அவள். அப்போது ஒரு கடையில் இருந்து கையில் கிஃப்ட் பேக் செய்யப்பட்ட பார்சலுடன் வெளியில் வந்தான் அவன்.
‘என்ன இந்த நேரத்தில் கடைக்கு?’ என பரஸ்பரம் கேட்டுக்கொண்டார்கள்.
‘என் மகன் பள்ளியில் ஏதோ ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என கேட்டிருந்தான். அதற்கான பொருட்களை வாங்க வந்தேன்’ என சொன்னபோது அவன் ‘ஓகே… நாளை நான் ஆஃபீஸ் வர மாட்டேன். லீவ்’ என சொல்லிவிட்டு நகர முற்பட்ட போது அவள் இடைமறித்து ‘கையில் என்ன கிஃப்ட்…’ என கேட்டாள்.
‘அதுவா, நாளை என் மகளை பார்க்கப் போகிறேன். அவளுக்கு புது மாடலில் ஒரு ஃபோட்டோ ஃப்ரேம் வாங்கி உள்ளேன். அதில் நானும் அவளும் இருக்கும் புகைப்படத்தை வைத்து அவளுக்கு கிஃப்ட் கொடுக்கப் போகிறேன்…’ என சொல்லும்போதே அவன் குரலும், கண்களும், உடல்மொழியும் சந்தோஷத்தில் மிளிர்ந்தது.
இப்போது அவள் ‘ஹா… ஹா’ என சிரித்தாள். ‘யாரோ நோ சென்டிமெண்ட் அதுவே இதுவே என சொன்னதாக நினைவு… கல்லூரிக்கு அனுப்பி இன்னும் ஒரு வீக் எண்ட் கூட வரலை. அதற்குள் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்கின்ற துடிப்பா?’ என கிண்டல் செய்தாள்.
அதற்கு அவன் ‘நோ சென்டிமென்ட் என்றுதான் சொன்னேன், நோ பாசம் என்று சொல்லவில்லையே… ஓகே பை, பார்க்கலாம்…’ என்று சொல்லிவிட்டு காரில் ஏறி பறந்தான். அவனுடைய மனைவி மகளை அவனிடம் விட்டுவிட்டுப் பிரிந்து சென்று ஐந்தாறு வருடங்களாகிறது. மகளுக்கு அப்போது 10 வயதிருக்கும். அன்றில் இருந்து மகள்தான் அவன் உலகம்.
அவன் கைகளில் இருந்த கிஃப்ட்டுக்குள் பாசத்தை பார்சல் செய்து எடுத்துக்கொண்டு செல்வதை சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இது கதை அல்ல. உண்மை சம்பவம்.
இதுபோல பாசமிகு அமெரிக்கப் பெற்றோர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்குள்ளவர்கள் இந்தியர்களைப் பார்த்து வியந்து கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?
‘நீங்கள் எல்லோரும் எப்படி உங்கள் வீடு, நாடு, உறவினர்கள் எல்லோரையும் பிரிந்து இத்தனை தொலைவு வந்து பணி செய்கிறீர்கள்?’
அவர்கள் இப்படி கேட்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவர்களுடைய உறவினர்கள் அனைவருமே ஏதேனும் தேவை, உதவி என்றால் சில மணி நேர கார் டிரைவிங்கில் விரைந்து சென்று பார்க்கக் கூடிய தொலைவில் வசிக்கிறார்கள். வருடத்தில் ஒரு நாள் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். பார்ட்டி வைக்கிறார்கள். சேர்ந்து சாப்பிடுகிறார்கள். உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதனால்தான் அவர்களுக்கு வேலைக்காக வருடக் கணக்கில் ஊரையும், நாட்டையும், உறவினர்களையும் பிரிந்து வசிக்கும் இந்தியர்களைப் பார்த்தால் வியப்பு.
நாம் அவர்களைப் பார்த்து விமர்சிக்கிறோம். அவர்கள் நம்மைப் பார்த்து வியக்கிறார்கள்.
விமர்சிப்பதற்கும், வியப்பதற்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் வாழ்க்கை ‘ஜரூராய்’ வேகமெடுத்துச் சென்றுகொண்டே இருக்கிறது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 1, 2022 | செவ்வாய் | இந்திய நேரம் அதிகாலை 6 மணி