#USA: இயற்கையும் சீற்றங்களும்!

2021 நவம்பர் டிசம்பரில் நான் அமெரிக்காவில் தங்கி இருந்த நாட்களில் சென்னையில் மழை, வெள்ளம். உறவினர்களும் நண்பர்களும் ‘நல்ல வேளை சென்னை மழைல மாட்டிக்காம தப்பிச்சீங்க… நல்லா என்ஞாய் பண்ணுங்க யு.எஸ்ஸில்…’ என்று சொன்னார்கள்.

என்னைப் பொருத்தவரை எங்கிருக்கிறேனோ அந்த இடத்தை நேசிக்கும் பக்குவம் எனக்குண்டு. காரணம் பெற்றோரின் பணி இடமாற்றம் காரணமாக நிறைய ஊர்களில் வசித்ததால் அந்த மனப்பாங்கு வந்திருக்கலாம்.

இந்தியாவில் மழை, வெள்ளம், புயல் என்றால் அமெரிக்காவில் டொர்னேடோ, கடும் பனிப்பொழிவு, பனிக்கட்டி மழை, நிலநடுக்கம், இத்யாதி இத்யாதி. பெயர்களில்தான் மாற்றம். இயற்கைச் சீற்றங்கள் உலகம் முழுவதுக்கும் பொதுவானதுதான்.

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் சீதோஷநிலை வெவ்வேறாக இருக்கும். ஒரு சில மாநிலங்கள் ‘டிப்ரஸ்டு ஸ்டேட்’ என்றே பெயர் பெற்றிருக்கும். வருடத்தில் பெரும்பாலான மாதங்கள்  ‘நச நச’வென மழை பெய்துகொண்டிருந்தாலோ, பனி பொழிந்துகொண்டிருந்தாலோ மக்கள் மனநிலை எப்படி இருக்கும்?

இன்னும் ஒருசில பகுதிகளில் ஒருநாள் மழை, ஒருநாள் கடும் வெயில், ஒருநாள் கொடும் பனிப்பொழிவு,  ஒருநாள் நடுங்கும் குளிர்.  இப்படி மாறி மாறி சீதோஷனநிலை இருந்தால் மனநிலை எப்படி இருக்கும்? யோசித்துப் பாருங்கள். அமெரிக்காவில் பொதுவாக நான் தங்குகின்ற மிசெளரி, ஃபெண்டன் பகுதி இப்படித்தான் இருக்கும். ஏப்ரல் வந்தால்தான் கொளுத்தும் வெயில் ஒருசில மாதங்கள் தொடரும்.

மழை, வெயில், பனி, புயல், நிலநடுக்கம் எல்லாம் இந்தியாவிலும் இருப்பதைப் போல் இருந்தாலும் கொடும் பனியும், பனிக்கட்டி மழையும், டொர்னேடோவும் நமக்கு அதிகம் பழக்கமில்லாதது.

கொடும் பனி பொழியும்போது வீடு, வாசல், தோட்டம், மரம் செடி கொடிகள், வாகனங்கள், சாலைகள் என அத்தனையையும் பனியால் மூடிவிடும். வீடுகளின் வாசல்கள் பனியால் மூடப்பட்டிருக்கும். ஜவ்வரிசி வடிவில் உருண்டையாக விற்கப்படும் உப்பை தூவி பனிக்கட்டிகளை கரைப்பார்கள் / உடைப்பார்கள். கிட்டத்தட்ட பனிச்சாலைகளாவே மாறியிருக்கும் தெருக்களில் உறைந்திருக்கும் பனிமலைகளை இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்துகிறார்கள். கார்களை மூடியிருக்கும் பனிமலையை அப்புறப்படுத்தவும் பிரம்மப்பிரயத்தனப்படுவார்கள்.

எல்லாவற்றையும்விட மிக பயங்கரமானது டொர்னேடோ (Tornado). வானத்துக்கும் பூமிக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புனல் போன்ற வடிவத்தில் உருவாகும் மேகத்தில் இருந்து இடியுடன் கூடிய மழையுடன் மணிக்கு 300 மைல் வேகத்தில் சுழலும் சூறாவெளிக் காற்றுடன் பூமியில் இறங்கும்.

அமெரிக்காவில்  ஃபெண்டன், மிசெளரி பகுதியில் நான் தங்கும்போதெல்லாம்  டொர்னேடோ  அனுபவத்தை சந்திப்பதுண்டு.

டொர்னேடோ உருவாக்கும் சூறாவெளிக் காற்று அது இது என்றில்லாமல் வீடு, கார், டிரக் போன்ற வாகனங்கள், எதிர்படும் மனிதர்கள் எல்லாவற்றையும் தூக்கி அடித்துக்கொண்டு சென்றுவிடும். பூமியில் டொர்னேடோ பார்வையில் எதிர்படும் அத்தனையும் துவம்சம்தான்.

அங்குள்ள வீடுகளும், கட்டிடங்களும் மரத்தினால் ஆனவை. டொர்னேடோ பாதிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் பேஸ்மெண்ட் எனப்படும் அடித்தளத்துடன்தான் கட்டப்பட்டிருக்கும். வீடுகளில் உள்ளுக்குள்ளேயே மாடிப்படிகள் அமைத்து மேல்தளம் கட்டியிருப்பார்கள். ஆக, அடித்தளம்தான் (பேஸ்மெண்ட்) இங்கு கிரவுண்ட் ஃப்ளோர், அதற்கடுத்த பகுதி முதல் தளம், மாடிப்பகுதி இரண்டாம் தளம்.

‘டொர்னேடோ வார்னிங்’ கொடுத்துவிட்டால் மக்கள் வீடுகளின் கீழே அமைத்துள்ள பேஸ்மெண்ட்டுக்கு சென்றுவிடுவார்கள். இங்குள்ள வீடுகள் மரத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளதால் டொர்னேடோ வரும்போது அதன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பறக்கும்.

அப்படிப் பறக்கும்போதும் எங்கேயோ சென்று விழும்போதும் செங்கற்களால் ஆன வீடுகளாக இருந்தால் என்ன ஆகும், எத்தனை சேதத்தை உண்டாக்கும் என நினைத்துப் பாருங்கள். அதனால்தான் நிலநடுக்கம், டொர்னேடோ போன்ற இயற்கைப் பேரழிவுகளில் இருந்து உயிருக்கு சேதம் அதிகம் ஏற்படாமல் இருக்கவே அமெரிக்காவில் மரத்தினால் ஆன வீடுகள்.

எல்லா மாநிலங்களிலும் டொர்னேடோ வருவதில்லை. நிலநடுக்கமும் எல்லா இடங்களிலும் உண்டாவதில்லை. அவை வரும் மாநிலங்களில் அதற்கேற்றாற்போல கட்டமைப்புகளும், சட்ட திட்டங்களும், சீதோஷநிலை எச்சரிக்கைகளும்.

எதையும் தாங்கும் சக்தியும்,
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலும்
இயற்கையாகவே நம் எல்லோருக்கும் இருக்கிறது.
சக்தியையும், ஆற்றலையும் எப்படி கையாள்கிறோம்
என்பதில்தான் சூட்சுமம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 2, 2022 | புதன் | இந்திய நேரம் காலை 6 மணி

(Visited 881 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon