#USA: கல்வி தரும் ஐஸ்வர்ய யோகம்!


கடந்த 15 வருடங்களில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அமெரிக்கா சென்று வருவதுண்டு. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி சார்ந்த ஆவணப்படங்களும் எடுத்ததுண்டு.

அமெரிக்கா சென்று செட்டில் ஆகும் நம் இந்திய குடும்பங்களில் பாத்திரம் தேய்ப்பது, கழிவறை சுத்தம் செய்வது, வீடு பெருக்குவது, சமைப்பது என அனைத்து வீட்டு வேலைகளையும் பாரபட்சமின்றி ஆண் பெண் என இருவருமே பகிர்ந்து செய்கிறார்கள். விதிவிலக்குகள் எங்கும் உண்டல்லவா? அங்கும் அப்படியே.

மாதம் ஒரு முறை வீடு முழுவதையும் சுத்தம் செய்ய ஆட்களை அழைக்கிறார்கள். இதற்காகவே ‘ஹவுஸ் கிளீனிங் சர்வீஸ்’ நிறுவனங்கள் உள்ளன. அவர்களை அணுகினால் ஆட்களை அனுப்புவார்கள். மேலும், நிறுவனம் சார்ந்தில்லாமல் தனியாக சர்வீஸ் செய்பவர்களும் உள்ளனர். ஏ.எம்.சி போட்டுக்கொள்கிறார்கள்.

வழக்கமாக நான் தங்கும் மிசெளரி, ஃபெண்டன் பகுதியில் இதுபோல வீட்டு வேலை செய்வதற்கு பெரும்பாலும் அமெரிக்கர்களே வருகிறார்கள். கலிஃபோர்னியாவில் மெக்சிகன்ஸ் வருகிறார்கள். இது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும்.

ஒருமுறை வீட்டு வேலை செய்வதற்காக வந்திருந்த அமெரிக்கப் பெண் சொன்ன விஷயம் மனதை கனமாக்கியது.

அந்தப் பெண்ணுக்கு வயது முப்பதிருக்கும். அமெரிக்கப் பெண்களுக்கே உரிய வெள்ளை நிறம், வெள்ளை நிற தலைமுடி. நல்ல உயரம். சிரித்த முகம். ஃபார்மல் உடை. சட்டென பார்த்தால் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் என்றே நினைக்கத் தோன்றும்.  துறுதுறுவென கருமமே கண்ணாயினராக சமையல் அறை முதல் கழிவறை வரை அத்தனையையும் சுத்தம் செய்துகொண்டே நடுநடுவே எங்களைப் பார்த்து சிரித்தபடியே வேலையை முடித்தார்.

கிளம்பும் முன் பணம் கொடுக்கும்போது அவரிடம் படிப்பு, பெற்றோர், குடும்பம் பற்றி பேச்சுக்கொடுத்தபோது அவர் ஆங்கிலத்தில் படபடவென கொட்டித் தீர்த்தார்.

‘என்னுடைய பெற்றோர் என்னை படிக்கச் சொல்லி எத்தனையோ அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நான்தான் படிக்கின்ற வயதில் நண்பர்களுடன் அரட்டை அடித்து ஊர் சுற்றிக்கொண்டிருந்து காலத்தை வீணடித்து விட்டேன். அதான் இப்படி வீடு வீடாக சென்று டாய்லெட் சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்…’

கண்ணீருடன் சொல்ல வேண்டிய விஷயத்தை சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு படுவேகமாக கிளம்பிச் சென்றார்.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் வீட்டில் அமெரிக்கர்கள் பணியாட்களாக வருவது இன்றும் எனக்கு வியப்பான விஷயமே. படிப்புதான் எத்தனை செளகர்யங்களை, ஐஸ்வர்யங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறது.

அமெரிக்கா படித்த அறிவாளிகளுக்கான சொர்க்கம். குறிப்பாக இந்தியர்களுக்கு!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 31, 2022 | திங்கள் | இந்திய நேரம் அதிகாலை 6 மணி

(Visited 2,357 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon