#USA: அமெரிக்காவில் மனிதநேயம்!

அமெரிக்காவில் மனிதநேயம்!

விஜய், சிம்ரன் நடித்த ‘ப்ரியமானவளே’ என்ற திரைப்படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.பி.பி அவரை அம்மா இல்லாத குறை தெரியாமல் இருக்க அமெரிக்கா அனுப்பி படிக்க வைப்பார். படித்து முடித்து இந்தியா திரும்பிய விஜய்க்கு திருமணமும் செய்து வைப்பார். திருமணம் ஆன முதல் நாள் விஜய்யின் மனைவி சிம்ரன் காபி கொடுத்தபோது விஜய் அதை குடிக்க மறுத்து ‘நான் காபி குடிக்கும் வழக்கம் எல்லாம் இல்லை. வழக்கமா காலையில் ஷேம்பைன்தான் குடிப்பேன்…’ என்று சொல்வார்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த நினைக்கிறேன். அமெரிக்காவையே பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் கூட காலையில் எழுந்தவுடன் ஷேம்பைனோ அல்லது வேறு எந்த ஒயினையோ குடிப்பதில்லை.

காரணம் அங்கு குடித்துவிட்டு வண்டி ஓட்டக் கூடாது. கஞ்சா போன்ற  போதைப் பொருட்களை பயன்படுத்திய பிறகு வண்டி ஓட்டக் கூடாது. இவ்வளவு ஏன், சற்று மயக்கத்தையும் தூக்கத்தையும் வரச்செய்யும் டானிக்குகளைக் குடித்திருந்தாலும் வண்டி ஓட்டக் கூடாது. சட்டப்படி குற்றம். அபராதம் விதிப்பது, ஜெயில் தண்டனை, லைசன்ஸை ரத்து செய்தல் வரை தண்டனைகள் வேறுபடும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. அங்கு கார் ஓட்டத் தெரியாமல் யாருமே காலம் தள்ள முடியாது. பஸ்களும், இரயில்களும் இருந்தாலும் எண்ணிகையில் குறைவு. அவற்றைவிட கார் பயணத்தைதான் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அங்குள்ளவர்கள் அதிகாலையிலேயே அலுவலகம் கிளம்பி விடுகிறார்கள். ஐந்தரை மணிக்கும் ஆறு மணிக்கும் அலுவலகத்துக்குக் கிளம்புபவர்களை நான் சந்தித்திருக்கிறேன். திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு. ஆறு மணிக்கு அலுவலகம் கிளம்பி 6.30 மணிக்கு பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை கொண்டுவிட்டு பின்னர் அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

ஆறரை மணிக்கு பள்ளியில் யார் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? பள்ளிகளும் ஏழு, ஏழரைக்குத் தொடங்கிவிடுகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முன்னதாகவே பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள்.

இப்படி சீக்கிரம் அலுவலகம் செல்வதற்கு மிக முக்கியமான ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். ‘டிராஃபிக்’. ஒரு நிமிடம் தாமதமானால்  ஒரு மணி நேரம் தாமதமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்கின்ற காரணத்தால் பெரும்பாலும் அதிகாலையிலேயே அலுவலகம் கிளம்பிச் செல்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமல்ல, அமெரிக்கர்களும்தான்.

இப்படி இருக்க, காலையில் எழுந்தவுடன் எப்படி ‘ஷேம்பைன்’ ஒயின் குடிக்க முடியும் சொல்லுங்கள்?

ஏதேனும் பார்ட்டியில் கலந்துகொண்டு குடித்திருந்தால் செல்ஃப் டிரைவ் செய்துகொண்டு செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் தண்டனை நிச்சயம். யாருக்குத் தெரியுமா? குடித்துவிட்டு வண்டி ஓட்டிச் செல்பவருக்கு மட்டுமல்ல, பார்ட்டி நடத்தியவர்களுக்கும் சேர்த்துத்தான்.

அங்குள்ளவர்கள் ஆண், பெண் என இருபாலருமே குடிக்கவும் செய்கிறார்கள். ஆனால், நம் ஊர் போல் குடித்துவிட்டு சாலையில் உருண்டு புரண்டெல்லாம் அசிங்கம் செய்வதில்லை. சாலை விதிமுறைகளை மீறி குடித்துவிட்டு வண்டி ஓட்டி தானும் இறந்து மற்றவர்களின் உயிரையும் எடுப்பதில்லை.

மிக முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். அங்கு யாரும் யாரையும் எதற்காகவும் வற்புறுத்துவதில்லை. பத்து பேர் குடிக்கும் இடத்திலும் நாம் குடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் நாம் தைரியமாக NO சொல்லலாம். யாரும் அதை தவறாக நினைப்பதும் இல்லை, நண்பர்களுக்கு கம்பெனி கொடுங்கள் என்றெல்லாம் சொல்லி நெருக்கடிக் கொடுப்பதும் இல்லை. மொத்தத்தில் நம் ப்ரைவசியில் யாரும் அனாவசியமாக மூக்கை நுழைப்பதில்லை.

நாம் நாமாக இருக்க 100 சதவிகித வாய்ப்பு அமெரிக்காவில் கிடைக்கிறது. அதையும் மீறி நாம் தவறு செய்தாலோ அல்லது மாறினாலோ அதற்காக மற்றவர்களை நோக்கி கைக்காட்ட முடியாது. நம்மை நோக்கி நாமே கைக் காட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

நம்மீது மற்றவர்கள் மூச்சுக் காற்றுகூடபடுவதில்லை. தப்பித் தவறி மேலே கை பட்டுவிட்டாலோ அல்லது இடித்துவிட்டாலோ, ஒருவிதமான குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். பதற்றமாக பல முறை ‘சாரி’ சொல்கிறார்கள்.

ஆண் பெண் என இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். டீன் ஏஜில் உள்ளவர்களுக்கு இணையாக வயதில் முதிர்ந்த பெரியவர்கள்கூட பணிக்குச் சென்று சொந்தமாக சம்பாதித்தே வாழ்கிறார்கள். காபி ஷாப்புகளில், கடைகளில், பெரிய பெரிய மால்களில் உள்ள பில்லிங் செக்ஷன்களில் வயதில் முதிர்ந்தோர்கள் பணியில் இருப்பதைக் காணலாம். கைகளும் உடலும் தள்ளாடினாலும் அவர்கள் முகத்தில் சந்தோஷத்தையும், சிரிப்பையும் காணலாம். ‘ஹாய், மே ஐ ஹெல்ப் யூ’ என புன்னகையுடன் கேட்டபடியே நம் பொருட்களை இதமாக வாங்கி பில் போடுகிறார்கள்.

நாம் வாங்கும் பொருட்கள் அளவோ, கலரோ வேறு என்ன காரணத்தினாலோ பிடிக்கவில்லை என்றாலோ அல்லது மாடல் பிடிக்கவில்லை என்றாலோ பில்லுடன் கொண்டு சென்றால் கேள்வியே கேட்காமல் அவற்றை வாங்கிக்கொள்கிறார்கள். வேறு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். விவாதத்துக்கே இடம் கொடுப்பதில்லை.

காய்கறிகள் எல்லாம் படு சுத்தமாக விற்பனைக்கு வைக்கிறார்கள். நம்மூர் போல தக்காளி, வெங்கயாம், பூண்டு, எலுமிச்சைப் பழம், செள செள, முள்ளங்கி போன்றவை குவித்து வைக்கப்பட்டிருக்கும். தேவையானதை நாமே பொறுக்கிப் போட்டு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் என்ன எல்லாமே மெகா சைஸில் இருக்கின்றன. நறுக்கிப் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளும் உள்ளன. இஞ்சி முதற்கொண்டு பளிச்சென இருக்கும். ஒரு துளி மண் ஒட்டியிருக்காது. கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, கீரை இப்படி எல்லாமே பச்சைப் பசேலென படு சுத்தமாய் வாங்குவதற்கே ஆசையாக இருக்கும்.

அமெரிக்காவில் பைக் வைத்திருப்பவர்களை பெரும்பணம் படைத்தவர்கள் என சொல்கிறார்கள். மெகா சைஸ் பைக்கில் ஓரிருவர் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.

கணவனும் மனைவியும் சேர்ந்தாற்போல தென்படும் இடங்களில் எல்லாம் பெண்களுக்கு இணையாக ஆண்களும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு நடக்கிறார்கள். ஒரே குழந்தையாக இருக்கும்பட்சத்தில் ஆண்கள் தூக்கிக்கொண்டு நடக்கிறார்கள்.

பொது இடங்களில், கடைகளுக்கு, ஷாப்பிங் மால்களுக்கு என எல்லா இடங்களுக்கும் வீல்சேரில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருகிறார்கள். யாரும் நின்று வேடிக்கைப் பார்ப்பதில்லை. ஏன் திரும்பி வித்யாசமாகக் கூட பார்ப்பதில்லை. இயல்பாகக் கடக்கிறார்கள்.

Courtesy: Edited from United India Exporters Video

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 7, 2022 | திங்கள் | இந்திய நேரம் காலை 6 மணி

(Visited 687 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon