சிசேரியனா, சான்ஸே இல்லை!
அமெரிக்காவில் மருத்துவ செலவு மிக அதிகம். மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு தைரியமாகச் செல்ல முடியும். காப்பீடு எடுக்கவில்லை எனில் மருத்துவமனைக்கும், மருத்துவருக்கும் டாலர்களை அள்ளிக் கொடுத்து கட்டுப்படியாகாது.
மருத்துவர்களும் நோயின் தாக்கத்துக்கு ஏற்ப மிகக் குறைந்த வீரியமுள்ள மருந்துகளையே பரிந்துரைக்கிறார்கள். நம் ஊர் போல இருமல் சளி, ஜுரத்துக்கெல்லாம் டாக்டரிடம் சென்றால் அவர்கள் மருந்து எதுவும் கொடுப்பதில்லை. நன்றாக சாப்பிட்டு தூங்கி ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். மிக மிக வீரியம் குறைந்த மருந்தை அல்லது டானிக்கை பரிந்துரைக்கிறார்கள். மூன்று நாட்களில் தானாக ஜுரம் காணாமல் போகிறது. ஏதெனும் எமர்ஜென்சி என்றால் மட்டுமே மருத்துவமனையில் அட்மிட் ஆகச் சொல்கிறார்கள். மருத்துவரின் அனுமதி இன்றி மெடிகல் ஷாப்புகளில் மருந்து விற்பனை செய்வதில்லை.
இங்கு 99.9 சதவிகிதம் சுகப்பிரசவம் தான். சிசேரியன் / சி செக்ஷன் எல்லாம் மிகமிகக் குறைவு. நம் ஊர் போல ராசி நட்சத்திரம் பார்த்து அந்த நேரத்தில் ஆபரேஷன் செய்யச் சொல்லி எல்லாம் பிள்ளை பெற்றெடுக்க முடியாது. குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். பிரசவத்தின்போது கணவனும் மனைவியுடன் இருக்க அனுமதி உண்டு. குழந்தைகள், குழந்தைகள் வளர்ப்பு குறித்து ஏதேனும் கவுன்சிலிங் என்றால் அப்பா அம்மா இருவருக்கும் சேர்த்தே சொல்கிறார்கள். அமெரிக்கர்களின் வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான சூழலை விளையாட்டு பொம்மைகளுடன் சேர்ந்து நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளும் உயிரூட்டுகின்றன. பேசத் தெரிந்த குழந்தைகள் அனைவரும் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ப்ளீஸ், சாரி, தேங்யூ. தடுக்கி விழுந்தாலும் குழந்தைகள் அழாமல் தாங்களாகவே எழுந்திருக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குக் கூட நீச்சல் பயிற்சி கொடுக்கிறார்கள். சுயமாக நிற்கும் திறனை ஊட்டி வளர்க்கிறார்கள்.
காவல்துறையின் எச்சரிக்கை ‘You have all the rights to keep Silent’
காவல்துறை பற்றியும் சொல்லியாக வேண்டும். அமெரிக்காவில் போலீஸ்காரர்கள் ஐயர்ன் செய்யப்பட்ட சீருடை அணிந்து பார்ப்பதற்கே பளிச்சென புத்துணர்வுடன் செயல்படுகிறார்கள். மரியாதையுடன் பழகுகிறார்கள். நமக்கும் பயத்தை மீறி மரியாதை உண்டாகிறது. போலீஸ்காரர்களை ‘காப்ஸ்’ என்று அழைக்கிறார்கள். ஏதேனும் பிரச்சனைக்காக கைது செய்யப்பட்டால் கைதிகளிடம் அவர்கள் சொல்லும் அதிகபட்சக் கடுமையான எச்சரிக்கை என்ன தெரியுமா? ‘You have all the rights to keep Silent’ என்பதாகும். மேலும் கைதானவரை வேனிலோ காரிலோ ஏற்றும்போது அவர்கள் தலை வாகனத்தில் இடிக்காமல் இருக்க தங்கள் கைகளால் அவர்கள் தலையை மென்மையாக அழுத்தி வாகனத்தில் ஏற்றுகிறார்கள். இந்த பொறுமையை எல்லாம் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஏதேனும் பிரச்சனைக்காக அவர்களிடம் பிடிபட்டால் அவர்கள் அபராதம் வசூலிக்க டிக்கெட் கொடுக்கிறார்கள். அதாவது அபராதம் செலுத்துவதற்கான ரெசிப்ட். அதன் பிறகு நமக்கு இமெயில் மூலம் எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என தெரியப்படுத்துவார்கள். அப்போது ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
நம் மீது தவறில்லை என கருதினால் கோர்ட்டுக்குச் செல்லலாம். அங்கு வக்கீல் வைத்து வாதாடலாம் அல்லது நாமே நேரடியாக நமக்காக வாதாடலாம். எந்த ஒரு இடத்திலும் மறைமுக கட்டணமோ வசூலோ கிடையாது. ஒளிவு மறைவில்லா வெளிப்படைத்தன்மைதான் அமெரிக்கர்களின் சிறப்பு.
மக்கள் எந்த இடத்திலும் கூட்டம் கூடுவதில்லை. எங்கு சென்றாலும் தாங்களாகவே வரிசையில் நிற்கிறார்கள். குழந்தைகளும் அப்படியே செய்வதுதான் ஆச்சர்யம்.
பிரதான விளையாட்டுகள்!
அமெரிக்காவில் சாக்கர், பேஸ்கட்பால், பேஸ்பால், ஃபுட்பால், டென்னிஸ், பேட்மிட்டன், கோல்ஃப், ஐஸ் ஹாக்கி போன்ற விளையாட்டுகள் பிரபலம். பள்ளிகளிலும் பயிற்சி அளிக்கிறார்கள். தனியாரிடமும் கற்றுக்கொள்கிறார்கள். போட்டிகளும் நடைபெறுகின்றன. ஏதேனும் ஒரு ஸ்போர்ட்ஸில் அமெரிக்க சிறுவர் சிறுமிகளும் இளைஞர்களும் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்கள். நம் இந்தியர்கள் அவரவர் விருப்பம்போல் தேர்வு செய்கிறார்கள். ஒருசிலர் எதிலும் ஈடுபடாமலும் இருக்கிறார்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 8, 2022 | செவ்வாய் | இந்திய நேரம் காலை 6 மணி