இராமானுஜர் சிலையும், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பும்!
அமெரிக்கர்கள் வாரந்தோறும் தவறாமல் சர்ச்சுக்கு செல்கிறார்கள். நம் இந்தியர்கள் வழக்கம்போல நினைத்துக்கொண்டால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயில்களுக்குச் செல்கிறார்கள். முக்கியமாக வார இறுதி நாட்களில் கோயில்களில் நம் இந்தியர்களை நிறைய பார்க்க முடிகிறது. நிறைய இந்து கோயில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து பட்டப் படிப்பை முடித்த ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் கற்றறிந்த, வேதபாடசாலையில் வேதம் படித்த இளம் அர்ச்சகர்கள் இங்குள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள்.
கோயில்களிலே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் திருமணமே நடத்தக் கூடிய அளவுக்கு கம்யூனிட்டி ஹால்களை பராமரிக்கிறார்கள். இந்தியாவில் நடைபெறுவதைப் போலவே திருமணம், பிறந்த நாள் விழா, அரங்கேற்றம் என விழாக்களும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நம் இந்திய சாஸ்த்திரிகளை வைத்தே சாஸ்த்திர சம்பிரதாயத்துடன் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்கிறார்கள்.
ஐயப்ப பூஜைகளும், நவராத்திரி கொண்டாட்டங்களும் பிரமாண்டமாக நடைபெறுகின்றன. ஐயப்ப ஸ்வாமிக்கு நாற்பத்தியெட்டு நாட்கள் விரதம் இருந்து மாலை போட்டு, இருமுடி கட்டிக்கொண்டு அங்கேயே இதற்காக அமைத்துள்ள 18 படிகளில் ஏறி மலைக்குச் சென்று இந்தியாவில் ஐயப்ப மலைக்குச் சென்று வருவதற்கு ஈடாக மிக பக்திமயாக ஐயப்ப மலைக்குச் செல்வதை சிரத்தையுடன் செய்கிறார்கள்.
கோயில்கள் படு சுத்தம். அமைதியோ அமைதி. சுவர்களில் எண்ணை, குங்குமம், சந்தனம், விபூதி தடவுதல் எதற்கும் அனுமதி கிடையாது. கோயில் வாசலிலேயே செருப்பையும், குளிருக்காக அணிந்து வரும் கோட்டையும் வைப்பதற்காக பிரத்யேகமான இடம் இருக்கும். அங்கு வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்று அமைதியாக தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறார்கள்.
இந்தியாவில் நடைபெற்ற ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த தினக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவில் இருந்து நம் இந்தியர்கள் பலர் வந்துள்ளனர் என்பதுதான் ஹைலைட்.
அயலகத்தில் இருந்தால் பெற்றோரை ‘அம்போ’ என தவிக்க விட்டுவிடுகிறார்கள் என்று பொதுவாக சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதுகூட அவரவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தினால்தான் என்று கூற முடிகிறது. இல்லை என்றால் ஸ்ரீராமனுஜர் சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் வருவது எப்படி சாத்தியம்? சிறு வயதில் இருந்தே கல்வியுடன் நம் இந்தியப் பாரம்பர்யத்தையும் சேர்த்தே கற்று வளர்ந்தவர்கள் உலகில் எங்கிருந்தாலும் இந்திய மண்ணை நேசிக்காமல் இருக்க மாட்டார்கள்.
எந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அமெரிக்கா செல்வதற்காகவே தயார்படுத்தி, அதற்காகவே மெனக்கெட்டு முன்னெடுப்புகள் செய்து, அதையே தங்களுக்குள் ஒரு பெருங்கனவாக்கிக்கொண்டு, அதையே பிள்ளைகளுக்குள்ளும் விதைத்தால் அதுதானே முளைக்கும். விதைப்பதுதானே முளைக்கும்? வேறென்ன முளைக்கும்.
அப்படி விதைக்கப்பட்டு வளர்ப்பவர்கள் நிச்சயமாக அமெரிக்க மண்ணில் நுழைந்ததுமே கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோரை மட்டுமென்ன, உறவுகளையும், நாட்டையுமே விட்டு விலகத்தான் செய்வார்கள்.
சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். அங்குள்ள குழந்தைகள் பகவத்கீதை, விஷ்ணு சகஸ்திரநாமம், திருவாசகம், அபிராமி அந்தாதி போன்றவற்றை அஷ்ரம் பிசகாமல் அத்தனை அழகாக சொல்கிறார்கள். நம் இந்தியப் பெற்றோரில் சிலர் தாங்களே கற்றுக்கொடுக்கிறார்கள். சிலர் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். அதை எடுப்பதும் நம் இந்தியர்களே.
ஸ்ரீராமானுஜரின் ஆயிரம் ஆண்டு பிறந்ததினக் கொண்டாட்டங்கள் பிப்ரவரி 2, 2022 முதல் பிப்ரவரி14, 2022 வரை நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அங்குள்ளவர்கள் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளை இணையதளத்திலும் யு-டியூபிலும் லைவ் ஸ்ட்ரீமில் பார்க்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்காக நன்கொடைகளையும் அளித்துள்ளார்கள்.
ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சிலை தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரத்தில் ஸ்ரீவைஷ்ணவ பீடாதிபதி திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிஜியின் ஆசிரம வளாகத்தில் மிக பிரமாண்டமாக நிறுவப்பட்டு, அதற்கு ‘சமத்துவ சிலை’ (Statue of Equality) என்றும் பெயரிடப்பட்டுள்ளது. நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி 5, 2022 அன்று ஸ்ரீராமனுஜர் சிலையை தன் திருக்கரங்களால் திறந்து வைத்தார்.
இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26-வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்தெல்லாம் துல்லியமான தகவல்களை அமெரிக்க வாழ் இந்தியர்கள் தெரிந்து வைத்துள்ளனர். அத்துடன் தங்கள் பங்களிப்பை ஏதேனும் ஒருவிதத்தில் அளித்தும் வருகிறார்கள்.
இந்தியாவை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ஜீயரின் கல்வி அறக்கட்டளை (JEEYAR Educational Trust – JET) அமெரிக்கா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் JETUSA என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆன்மிக நிகழ்ச்சிகள், கல்வி சம்மந்தமான முன்னெடுப்புகள் என செய்துவருகிறார்கள். JETUSA டாட் Org என்ற இணையதளத்தில் அமெரிக்காவில் இவர்களின் சேவைகளை தெரிந்துகொள்ளலாம். Chinnajeeyar டாட் Org என்ற இணையதளத்தில் இந்தியாவில் இவர்கள் செயல்பாடுகளை அறியலாம்.
அமெரிக்காவில் உள்ள இந்திய மக்களிடையே நம் இந்திய நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்புவதற்காக ஜெட்யுஎஸ்ஏ என்ற அமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகள் வியக்க வைக்கின்றன. பக்தி கதைகள், பாடல்கள், பஜன்கள், யோகா, தியானம், ஆசனங்கள், பக்தி இலக்கியம் என வகுப்பெடுக்கிறார்கள். கொரொனா காலத்திலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. கொரோனாவுக்கு முன்னெல்லாம் நேரடியாக வகுப்புகள் நடைபெறும். வாரம்தோறும் பேற்றோர் பிள்ளைகளை வகுப்புக்கு அழைத்து வருவதை பார்க்கும்போது நம் இந்தியர்கள் எங்கிருந்தாலும் நம் பாரம்பர்யத்தை தூக்கி நிறுத்துவதிலும் கொண்டாடுவதிலும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்றே பெருமைப்பட முடிகிறது.
இந்த அமைப்பில் ஏராளமான இந்தியர்கள் தன்னார்வத் தொண்டர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த தினத்துகாக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
அதுசரி ஸ்ரீராமானுஜருக்கு இத்தனை பிரமாண்டமான சிலை அமைக்கும் அளவுக்கு அவர் என்ன செய்தார்?
தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று கருதப்பட்ட பிரிவினர்களை திருக்குலத்தார் ஆக்கி தெய்வத்தை வழிபடச் செய்தவர். இனம், சாதி, குலம், மொழி வேற்றுமை இல்லாத அன்பு நெறியை வளர்த்தவர். அதனால்தான் இவரது சிலைக்கு ‘சமத்துவ சிலை’ – Statue of Equality என்று பெயரிட்டுள்ளனர்.
இந்து மதத்தின் தத்துவங்கள்
நம் இந்துமதத்தில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என மூன்று தத்துவ இயல்கள் உள்ளன.
இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார் என மூன்று இந்துமத தத்துவ குருமார்கள் இருந்திருக்கின்றனர்.
ஆதிசங்கரர் அத்வைதத்தையும், ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தையும், ஸ்ரீமத்வாச்சாரியார் துவைதத்தையும் நிலைநாட்டிய தத்துவ குருமார்கள்.
இவர்கள் தங்கள் தங்கள் தத்துவங்கள் மூலம் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் பிரம்மமும் ஆன்மாவும் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரம்மமும், ஆன்மாவும்!
இந்து சமயத்தில் பிரம்மம் என்றால் மெய்ப்பொருள். அதாவது எது எதெல்லாம் வெளிப்படையாக உள்ளதோ அவை அத்தனைக்கும் பெயரும், உருவமும் இருந்தே தீரும்.
உதாரணத்துக்கு, மண்பாண்டங்களை எடுத்துக்கொள்வோமே. மண்பாடங்களுக்கு எது ஆதாரம்? மண் தானே ஆதாரம். அந்த ஆதாரத்தையே மெய்ப்பொருள் என்கிறார்கள். இப்படித்தான் இந்த உலகில் பெயருடனும் உருவத்துடனும் காணப்படும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக மெய்ப்பொருள் ஒன்றுள்ளது. அந்த மெய்ப்பொருளை பிரம்மம் என்று சொல்கிறார்கள்.
ஆன்மா என்பது அழியாதது. கண்ணுக்குத் தெரியாதது. எல்லாம் வல்ல பரம்பொருளை பரமாத்மா என்பதுபோல ஜீவிக்கின்ற / உயிர் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களையும் ஜீவாத்மா என்று குறிப்பிடுகிறார்கள்.
அத்வைதம், வசிஷ்டாவைதம், துவைதம்:
முதாலாவதாக அத்வைதம்…
உலகத்தை மாயை போன்ற இல்லாத பொருள் என்று ஆதிசங்கரர் அத்வைத சித்தாந்தம் வழியாக போதித்தார். உதாரணத்துக்கு மங்கலான வெளிச்சத்தில் கயிறை பார்க்கும்போது நம் கண்களுக்கு அது பாம்பாகத் தெரிகிறது. பயமும் படபடப்பும் பதற்றமும் உண்டாகிறது. விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது கயிறு என உணர்ந்ததும் நாம் அமைதியாகிறோம். முதலில் நம் கண்களுக்குப் பாம்பாகத் தெரிந்த கயிறு பின்னர் கயிறாகவே நமக்கு தெரிகிறது. கயிறு பாம்பாகவும் இல்லை, பாம்பு கயிறாக மாறவும் இல்லை. கயிறு தான் நிஜம். அதைப் பாம்பாகப் பார்த்தது நம் அறியாமை. பாம்பு என்பது கற்பனை. கயிறுதான் நிஜம். கயிறை கயிறாக பார்க்கும் ஞானமே அத்வைதம் என்கிறார்.
இரண்டாவதாக விசிஷ்டாத்வைதம்…
நாம் கண்களால் பார்க்கக்கூடிய தொடுஉணர்வால் உணரக்கூடிய இந்த உலகம் பொய்யல்ல நிஜம் என்று ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாவைதம் வழியாக கூறுகிறார். இது ஆதிசங்கரரின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டது.
ஞானம் அதாவது அறிவு மட்டுமே உண்மை. அதுவே பிரம்மம் என்கிறார் சங்கரர் தன் அத்வைதக் கொள்கைகள் மூலம். அறிவுள்ள மனிதன்தான் பிரம்மம் என்கிறார் ஸ்ரீராமானுஜர் தன் விசிஷ்டாத்வைதக் கொள்கைகள் மூலம்.
கயிறை கயிறு அறியும் ஞானமே அத்வைதம் – இது சங்கரர்.
கயிறை கயிறு என அறியும் ஞானம் உள்ள மனிதனே விசிஷ்டாத்வைதம் – இது ஸ்ரீராமானுஜர்.
மூன்றாவதாக…
துவைதம் என்றால் இரண்டு. கண்களுக்குப் புலப்படும் பிரம்மத்தையும், கண்களுக்குப் புலப்படாத ஆன்மாவையும் இரண்டு வெவ்வேறு தத்துவங்களாகப் பிரித்து சொல்வதால் ஸ்ரீமத்வாச்சாரியாரின் தத்துவங்கள் இரண்டு என பொருள்படும் துவைதம் என பெயர் பெற்றது.
ஸ்ரீராமானுஜரின் விசிஷ்டாத்வைதம்!
பொதுவாக தத்துவங்கள் வேறு, மதங்கள் வேறு என்ற கருத்தே நிலவி வருகிறது. அதாவது தத்துவத்தை அறிவு சார்ந்ததாகவும் மதத்தை வழிபாடு சார்ந்ததாகவும் கருதிக்கொண்டிருக்கிறார்கள். தத்துவம் என்பது சிந்தனைக்காக மட்டும் அல்ல, வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும் வழிபாட்டுக்கும் உதவுவது என்று தத்துவத்தையும் மதத்தையும் ஒருங்கிணைத்து எடுத்துரைத்தவர் ஸ்ரீராமானுஜர்.
அறிவு அதிகரிக்க அதிகரிக்க, உணர்வு பூர்வமான செயல்பாடுகள் குறைந்து ஒருவித வாழ்க்கை ஒருவித வறட்சியாகவே வெறுமையாக சென்றுகொண்டிருக்கும். அறிவும் உணர்வும் பின்னிப் பிணையும்போதுதான் வாழ்க்கை சுகமான பயணமாக இருக்கும்.
ஸ்ரீராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தில் அறிவும் உணர்வும் கலந்திருப்பதினால் மக்கள் அதைக் கடைபிடிக்க சுலபமாக இருக்கிறது.
ஸ்ரீராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தைப் பின்பற்றுபவர்கள் வைணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 6, 2022 | ஞாயிறு | இந்திய நேரம் காலை 6 மணி