அமெரிக்காவில் மாணவர்களின் மனநிலை!
நம் ஊர் குழந்தைகளிடம் சொல்வதைப் போல ‘அவனைப் பார், எப்படி படிக்கிறான்’, ‘இவளைப் பார் எப்படி எல்லாம் எல்லா போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயிக்கறா…’ என்று அமெரிக்கர்களிடம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு சொல்ல முடியாது. சொன்னால் கிடைக்கும் எதிர்வினையை தாங்கும் மனநிலை இருந்தால் சொல்லலாம்.
அப்படி என்ன எதிர்வினை செய்வார்கள்?
‘இருக்கட்டும், அது அவனோட டேலண்ட், அது அவளோட டிஸையர்…’ என்று சொல்லிவிட்டு தங்கள் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுவார்கள்.
கல்லூரியில் முதலாம் ஆண்டின் முதல் செமஸ்ட்டர் தேர்வு எழுதிய ஒரு மாணவரிடம் ‘அவன் பெற்ற மதிப்பெண், கிரேட்’ பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘உன் நண்பர்கள் இதைவிட அதிகம் எடுத்திருக்கிறார்களா?’ என்றதற்கு ‘அவர்கள் பெற்ற மதிப்பெண், கிரேட் எல்லாம் எனக்குத் தெரியாது’ என்றார்.
கல்லூரி மாணவர்கள் என்றல்ல, பள்ளி மாணவ மாணவிகளிடமும் இதே மனப்பாங்குதான்.
நம் இந்தியர்கள் தான் ‘அவன் உன்னைவிட அதிக மதிப்பெண் வாங்கியிருக்கிறானா?’ என்பதுபோன்ற கேள்விகளை அங்கு சென்றாலும் கேட்பார்கள். அங்கு வசிக்கும் இந்தியர்களிடமும் ’விட்ட குறை தொட்ட குறையாக’ இந்த மனப்பாங்கு உள்ளது.
காரணம், என்ன படித்திருந்தாலும் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம், தடைப்பட்ட படிப்பை எப்போதில் இருந்து வேண்டுமானாலும் தொடரலாம் என்பது போன்ற இலகுவான வசதிகளும், சட்டதிட்டங்களும், மனப்பாங்கும் இருப்பதால் அமெரிக்கர்கள் பொதுவாகவே ‘நீங்க என்ன படிச்சிருக்கீங்க, எங்க வேலைப் பார்க்கறீங்க, எந்த பொசிஷன்ல இருக்கீங்க…’ என்பதுபோன்ற கேள்விகளை கேட்பதே இல்லை.
சில வருடங்களுக்கு முன்னர் சென்னை தி.நகரில் ஒரு கிளையிண்ட்டை சந்திக்க பைக்கில் சென்றேன். அப்போது அவர் ‘நீங்க காரில் வருவீங்கன்னு நினைச்சேன்’ என்றார். மற்றொரு கிளையிண்ட் ‘நீங்க பி.எம்.டபில்யூ தானே வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டார்.
என் குடும்ப நண்பர் ஒருவர் தன் குழந்தைகளுக்கு என்னை அறிமுகப்படுத்தும்போது ‘எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படிச்சிருக்காங்க… ஆனால் ஐடி நிறுவனம் ஆரம்பித்து வெற்றிகரமா நடத்தறாங்க…’ என்று என்னை உயர்த்திச் சொல்வதாக நினைத்து நான் ஏதோ குறைவான படிப்பை படித்துள்ளதாக பொருள்படும்படி பேசினார்.
மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸும், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க்கும் கல்லூரி படிப்பைக்கூட முடிக்கவில்லையே என்றெடுத்துச் சொல்லி கம்ப்யூட்டர் சயின்ஸ் நம் நாட்டில் நுழைய பிரம்மப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் பெற்றதுடன் நம் நாட்டின் பட்டிதொட்டி எல்லாம் தொழில்நுட்பம் பரவ நான் எடுத்த பெரு முயற்சிகளை எடுத்துச் சொன்னேன். அதன் பின்னர் எம்.பி.ஏ பட்டம் பெற்றது, நித்தம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அப்டேட் செய்துகொண்டிருப்பது, நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்கள் ஒவ்வொன்றுமே ஒரு பி.எச்.டி பட்டம் பெறுவதற்கு நிகரான ஆய்வுகளை உள்ளடக்கியது என, ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துச் சொல்லி அவருக்கு புரிய வைக்க வேண்டியதாகிவிட்டது.
காரணம், அவருடைய பிள்ளைகளுக்கு இன்ஜினியரிங்கும், மெடிக்கலும் மட்டும்தான் உயர்ந்த கல்வி, மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதினால்.
இதே மனநிலையில் உள்ள இந்தியர்கள்தான் அங்கு சென்றாலும் ஸ்டேட்ஸ், மதிப்பெண் போன்ற சுமைகளை சுமந்துகொண்டு வசிக்கிறார்கள். தாங்களும் குழம்பி தங்கள் பிள்ளைகளையும் குழப்புகிறார்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 23, 2022 | புதன்