உக்ரைனில் உள்ள 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்திடம் வந்து ஆயுதங்களை பெற்று சண்டையிட அதிபர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்! – செய்தி.
எங்கோ நடக்கும் போரை பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்க்கவே நமக்கு வேதனையாக இருக்கிறதே, நேரடியாக போரில் கலந்து கொள்பவர்களின் குடும்பம், குழந்தைகள் என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார்கள்?
சம்பாதிப்பதற்காக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வரும் ஆண்களை வழி அனுப்பி விட்டு திரும்பும் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அழுதுகொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சிகளை நாம் நிறைய பார்த்திருப்போம்.
அதுவே மனதுக்கு வேதனையாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காக செல்லும் கணவன் / மகன் அங்கு நல்லபடியாகத்தான் இருக்கப் போகிறார் என தெரிந்தும் பிரிவின் வேதனையில் கண் கலங்குவார்கள்.
ஆனால், போருக்குச் செல்பவர்கள் உயிருடன் திரும்பி வருவார்களா மாட்டார்களா என திகிலுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தும் அவர்களின் குடும்பத்தினரின் மனநிலையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
அது ரஷ்ய நாட்டு வீரரானாலும், உக்ரைன் நாட்டு வீரரானாலும் ரத்தமும், சதையும், உணர்வுகளும் ஒன்றுதானே?
#SayNoToWar
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 27, 2022 | ஞாயிறு








