#USA: வியக்க வைக்கும் ‘குளுகுளு’ ஐஸ்க்ரீம் நினைவுத் திறன்!

வியக்க வைக்கும் ‘குளுகுளு’ ஐஸ்க்ரீம் நினைவுத் திறன்!

‘டெட் ட்ரூஸ்’ (Ted Drewes) – அமெரிக்காவில் 80 வருடங்களுக்கும் மேல் குடும்ப வணிகமாக செயல்பட்டு வரும் இந்த ஐஸ்க்ரீம் நிறுவனம் 1929 ஆம் ஆண்டு ‘டெட் ட்ரூஸ்’ என்பவரால் தொடங்கப்பட்டது. நான்கு தலைமுறையாக வழிவழியாக இந்த நிறுவனத்தை தொய்வில்லாமல் நடத்தி வருகிறார்கள்.

பலவிதமான ஐஸ்க்ரீம் வகைகள். ஒவ்வொன்றும் தனிச்சுவையுடன். ஏற்கெனவே தயாரித்து பேக் செய்யப்பட்ட ஐஸ்க்ரீம்கள் அல்ல இவர்களுடையது. சுத்தமான சுகாதாரமான முறையில் ஆர்டர் கொடுக்கும்போது உடனுக்குடன் ‘குளுகுளுவென’ தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

எப்போது சென்றாலும் நீண்ட வரிசை இருக்கும். நீண்ட வரிசை என்றாலும் வெகு விரைவாக வரிசை நகர்கிறது. தள்ளு முள்ளு இன்றி பொறுமையாக வரிசையில் நின்று ஐஸ்க்ரீமுக்காக மக்கள் காத்திருந்து ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டுச் செல்கிறார்கள். வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக இருந்தால் முன்பே சொல்லிவிட்டால், ஐஸ்க்ரீம் உருகாதவாறு ஐஸ்கட்டிகள் போட்டு பேக் செய்யப்பட்ட பார்சலில் கொடுக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ள இந்த ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனத்தின் ஐஸ்க்ரீம்கள் தனிச்சுவையுடன் இருப்பதற்குக் காரணம் இவர்களது தயாரிப்பு முறை ஒரு காரணம் என்றால் அங்கு பணிபுரியும் இளைஞர்கள் புத்துணர்வுடன் செயலாற்றும் துடிப்பும், வேகமும், ஈடுபாடும் தான் காரணம்.

“Our Business Is Service” – இதுவே இந்த நிறுவனத்தின் கொள்கை, கோட்பாடு, நோக்கம்… இப்படி எந்த வார்த்தைகளில் வேண்டுமானாலும் சொல்லலாம்.

இந்த நிறுவனத்தின் ஐஸ்க்ரீமின் சுவை நம்மை கட்டிப் போடுகிறது என்றால், அங்கு பணி புரியும் இளைஞர்களின் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. ஆம். ஒரு வீட்டில் இருந்து பத்து பேர் வந்து பத்துவிதமான ஐஸ்க்ரீம் மற்றும் டாப்பிங் சொன்னாலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் எதையுமே பேப்பரிலோ அல்லது ஐபாட் / மொபைலிலோ குறிப்பு எடுத்துக்கொள்வதில்லை. சொன்னது சொன்னபடி ‘ஒரு மாற்றுக் குறையாமல்’ அவரவர்கள் கேட்ட ஐஸ்க்ரீம் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

எப்படி இது சாத்தியம் என நான் வியந்து கேட்டதற்கு அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள், ‘இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் பள்ளி / கல்லூரி டாப்பர்கள். படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் முன்னணியில் இருக்கும் இளைஞர்களையே பெரும்பாலும் இவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள்’. செவிவழி செய்தி இது.

இதைக் கேட்டதும்தான் புரிந்தது, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் வாடிக்கையாளர்கள் சொல்வதை குறிப்பேதும் எடுக்காமல் காதால் கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு அவரவர்கள் ஆர்டர் செய்த ஐஸ்க்ரீமை எந்தக் குழப்பமும் இல்லாமல் தயாரித்துத் தரும் வித்தை.

இதைப் பார்த்தபோது, சென்னை ஓட்டல்களில் எத்தனைதான் தெளிவாக ஆர்டர் செய்தாலும் நான் ‘வெஜிடபிள் போண்டா’ ஆர்டர் செய்தால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத ‘கொத்து பரோட்டா’ கொண்டு வரும் சப்ளையர்களின் முகங்கள் என் மனதில் தோன்றுவதை தவிர்க்கவே முடியவில்லை.

எனை அறியாமல் நான் சிரிக்கும் தருணங்களுக்கு போண்டாவுக்கும், கொத்து பரோட்டாவுக்கும் பங்குண்டு!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மே 3, 2022 | செவ்வாய்

(Visited 606 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon