கார் ஹைவேயில் பறந்து கொண்டிருந்தது. நெடுந்தூரப் பயணம்.
கார் டிரைவர் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம், ‘என் பொண்ணுகூட உங்களை மாதிரித்தான் ரொம்ப பாசமா இருக்கும்…’ என நெகிழ்ச்சியாக சொல்கிறார்.
அந்தப் பெண் வியந்து, ‘இந்த முறைதான் என்னை பார்க்கிறீர்கள்… அதற்குள் எப்படி நான் பாசமாக இருப்பதாகச் சொல்கிறீர்கள்?’ என கேட்கிறார்.
அதற்கு அந்த டிரைவர் சொன்ன பதில் பயணத்தின் சில மணி நேரங்களுக்கு முந்தைய சின்ன ஃப்ளாஷ்பேக்கில்.
ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு குடும்பத்துடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்த அந்தக் குடும்பத்தினர் காபி சாப்பிட உயர்தர ஓட்டல் ஒன்றில் இறங்கினார்கள். காபி சாப்பிட்டுத் திரும்பியபோது மகள் முன் சீட்டில் அமர்கிறேன் என சொல்லி அமர்ந்துகொள்ள, அதுவரை அங்கு அமர்ந்து வந்த அந்தப் பெண்ணின் தந்தை பின் சீட்டுக்குச் செல்கிறார். டிரைவர் அவரிடம் ‘லெக் ஸ்பேஸ் கரக்ட்டா இருக்கா சார், அட்ஜஸ்ட் செய்யணுமா?’ என கேட்க ‘சரியா இருக்கு’ என அவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் முன் சீட்டில் அமர்ந்திருந்த மகள் ‘என் அப்பாகிட்ட கேட்டால் ஸ்பேஸ் இல்லை என்றாலும் நான் வசதியாக அமர்வதற்காக ஸ்பேஸ் இருக்கிறது என்றுதான் சொல்வார்… நான் என் சீட்டை முன்னால் அட்ஜஸ்ட் செய்து நகர்த்திக்கொள்கிறேன்’ என்று சொல்லி முன்னால் நகர்த்திக்கொள்கிறார்.
பயணத்தின் போது அந்தக் குடும்பத்தினர் டிரைவரின் குடும்பப் பின்னணி குறித்து பேசிக் கொண்டு வரும்போதுதான் அவர் தன் மகள் பாசம் குறித்து சொல்வதற்கு முன் சீட்டில் அமர்ந்த பெண்ணின் செய்கையுடன் ஒப்பீடு செய்துள்ளார்.
முன் சீட்டில் அமர்ந்திருந்தது அடியேன்தான்!
நம் சின்ன சின்ன அசைவுகள் கூட கூர்ந்து கவனிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யம்தான். பாசமும் அன்பும் கனிவும் எந்த அளவுக்கு பற்றாக்குறையாக இருந்தால் பெற்றோரிடம் மனிதாபிமான அடிப்படையில் காண்பிக்கும் சாதாரண விஷயம்கூட பிரமாண்டத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் வியப்பே.
ராமாயணத்தில் சிரவணன் தனது கண் தெரியாத தனது பெற்றோரை தோளில் சுமந்து வாழ்ந்து வந்த வரலாற்றை எல்லாம் கடந்து வந்துள்ள நம்மால் நம் பெற்றோரிடம் இந்த அளவுக்குக் கூட நம் பாசத்தைக் காட்ட முடியாவிட்டால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 18, 2022 | புதன் | காலை 6 மணி