புதிய பரிணாமமும், வித்தியாசமான பரிமாணமும்!
கடந்த 20 வருடங்களில் பல முறை அமெரிக்கா சென்று திரும்பினாலும் ஒவ்வொரு முறையும் பயண அனுபவங்களை எழுதும்போதும் வித்தியாசமான கோணத்தில் அமைவதுதான் நம் வளர்ச்சியின் சாட்சி, மனமுதிர்ச்சியின் பேரடையாளம். அந்த வகையில் இந்த முறையும் புதிய பரிணாமம், வித்தியாசமான பரிமாணம்.
காம்கேரின் நிர்வாக மேம்பாடுகள், கிளப் ஹவுஸ் மற்றும் ஜூம் மீட்டிங்குகள், மீடியா பங்களிப்புகள், இந்திய முறைப்படி சாஸ்திர சம்பிரதாயத்தில் ஒரு சதவிகிதமும் குறையாமல் பிரமாண்டமாக நடந்த எங்கள் குடும்பத்து அடுத்தத் தலைமுறை திருமண வைபவத்தை முன்னின்று நடத்தியது, கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் மிக சிறப்பாகவும் சுமார் 300 பக்தகோடிகள் முழு ஈடுபாட்டுடனும் தன்னார்வ சேவை குழுவின் ஒத்துழைப்புடனும் நடைபெற்ற பாலாலய நிகழ்வில் கலந்து கொண்டது, சிறுவர் சிறுமியரும் கலந்து கொள்ளும் திருவாசகம் முற்றோதலில் பங்கேற்றது, அவர்களுடனான கலந்துரையாடல், மாதந்தோறும் காஞ்சி மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திர தினத்தில் நடைபெறும் அனுஷ பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டது, கணபதி ஹோமம், சத்திய நாராயணா பூஜை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றது, அமெரிக்கா முழுவதும் JETUSA என்ற பெயரில் இயங்கி வரும் இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஜீயர் கல்வி அறக்கட்டளை நடத்தும் ஆன்மிக கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்தியர்களை சந்தித்தது என…
கடல் கடந்து சுமார் 13,595 கிலோமீட்டர் (சுமார் 8448 மைல்கள்) தொலைவில் அமெரிக்காவில் சில மாதங்கள் தங்க நேர்ந்தாலும் இந்தியாவில் இருப்பதைப் போலவே நம் இந்திய கலாச்சாரத்தில் சிறிதும் வழுவாமல் பாரம்பர்ய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் நம் அறிவாற்றலையும் பண்பாட்டையும் பார்த்து வியக்கும் அமெரிக்கர்களுடனும் பழகி மனம் முழுவதும் பேராற்றலுடன் பாரதம் திரும்பினேன்.
அங்கிருந்து திரும்பும் வேளையில் பிரமாண்டமான ஆன்மிகக் பணிக்கு / ப்ராஜெக்ட்டுக்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளேன். இறை அருளும் இயற்கையின் கருணையும் இருந்தால் அந்தப் பணி காலம் கடந்தும் எங்கள் காம்கேரின் பெயர் சொல்லும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஏப்ரல் 6, 2022 | புதன்