கருணீகர் தெருவும் காம்கேரும்!

கருணீகர் தெருவும் காம்கேரும்!

சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள், டீக்கடைகள், இட்லி தோசை மாவு அரைத்துக்கொடுக்கும் கடைகள், அலோபதி ஹோமியோபதி மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், சித்தா மருத்துவர்கள், ஜோதிடர்கள், வாட்ச் ரிப்பேர் கடை, குடை ரிப்பேர் கடை, மிக்ஸி உட்பட சமையல் அறை சாதனங்கள் ரிப்பேர் கடைகள், சிறிய கேஸ் சிலிண்டரில் கேஸ் நிரப்பும் கடைகள், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், திருமண மண்டபம், வங்கிகள், இனிப்பு காரம் விற்பனையகம், காபிபொடி அரைத்துக்கொடுக்கும் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட், கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனையகம், மொபைல் போன் விற்பனையகம், ஹார்ட்வேர் சர்வீஸ் செண்டர்கள், துணிக்கடைகள், காலணி விற்பனையகம், தையல் கடை, ப்யூட்டி பார்லர்கள், கம்ப்யூட்டர் செண்டர்கள், பாட்டு நடனம் கற்றுக்கொடுக்கும் நிறுவனங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம், நீண்ட இந்தத் தெருவில் உள்ள கடைகளையும், நிறுவனங்களையும் இன்னபிற வசதிகளையும். கிடைக்காததே இல்லை எனும் அளவுக்கு அத்தனை வசதிகளும் ஓரிடத்தில் கிடைக்கும் அதிசய சாலை இது.

ஆதம்பாக்கத்தின் ஒரு முனையில் ஆரம்பிக்கும் இந்தத் தெரு நீண்டு வளர்ந்து ஆலந்தூரைத் தாண்டி ஜிஎஸ்டி சாலையைத் தொடும் அளவுக்கு மிக நீண்ட சாலை.

இந்தத் தெருவுக்கு இன்னொரு முக்கியமான சிறப்பு உள்ளது.

எங்கள் காம்கேர் நிறுவனம் முதல் பத்தாண்டுகள் இந்தத் தெருவில்தான் இயங்கி வந்தது. யாகம் வளர்ப்பதைப் போல வேலை வேலை வேலை. யாகம் செய்வதற்கு இணையான அதிர்வலையை நேர்மையான பணியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் உண்டாக்க முடியும் என கண்டுணர்ந்த அற்புதத் தருணங்கள்.

இந்தத் தெருவில் சைக்கிளில் தொடங்கிய என் பயணம், டிவிஎஸ் 50, கைனடிக் ஹோண்டா, மாருதி கார் என கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் உயர ஆரம்பித்தது.

எத்தனை ஃபாண்ட்டுகள், எத்தனை சாஃப்ட்வேர் தயாரிப்புகள், எத்தனை அனிமேஷன் படைப்புகள், எத்தனை புத்தகத் தயாரிப்புகள்… அப்பப்பா மலைப்பாக உள்ளது இந்தத் தெருவில் இயங்கிய எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை நினைத்தால். இன்று எங்கள் காம்கேர் நிறுவனம், சாஃப்ட்வேர் துறையில் தவிர்க்கவே முடியாத ஒரு கெளரவமான இடத்தை பெற்றுள்ளதற்கு அஸ்திவாரம் போட்டது இந்தத் தெருவில் நாங்கள் ஆரம்பித்த வாடகைக் கட்டிடமே.

அப்போதெல்லாம் காலை 6-9, மாலை 6-9 வகுப்புகளும் எடுத்து வந்தேன். ‘ஜேஜே’வென கூட்டம் அலைமோதும். வகுப்பெடுக்க ஆசிரியர்கள் யாரையும் நியமிக்கவில்லை. நானே எடுத்தேன். என் வகுப்பெடுக்கும் நுணுக்கத்துக்காகவே மாணவர்கள் சேர்க்கையும் அதிகமானது.

எத்தனை கூட்டம் உள்ளே இருந்தாலும் அந்தக் கட்டிடம் பேரமைதியாக இருக்கும். என் குரல் மட்டுமே கேட்கும். சலசலப்பு, கேலி கிண்டல் என எதுவுமே இருக்காது. அத்தனை ஒழுக்கமாக இருக்கும். 23, 24 வயதில் இத்தனை சிறப்பாக ஒரு நிறுவனத்தை நடத்த முடியுமா என அனைவருமே வியக்க ஆரம்பித்தார்கள். நானோ இளம் பெண். சிறிய வயது. என்னிடம் படிக்க வரும் மாணவர்கள் வயது வித்தியாசம் இன்றி 6 முதல் 60 வயது வரை இருப்பார்கள். அத்தனை பேரும் ஒன்றுபோல மரியாதை கொடுப்பார்கள். அந்த அளவுக்கு நான் என்னை கட்டமைத்துக் கொண்டிருந்தேன் என சொல்வதைவிட என் இயல்பே அப்படி இருந்ததால் என்னை ‘குரு’ ஸ்தானத்துக்கு உயர்த்தினார்கள். படிப்பு, வேலை வாய்ப்பு என அத்தனைக்கும் என்னிடம் ஆலோசனை கேட்க பெற்றோர்கள் வர ஆரம்பித்தார்கள். வாழ்க்கை மீது எனக்கு பேரார்வம் உண்டாகத் தொடங்கிய காலங்கள் அவை.

வாழ்க்கையின் அத்தனை கோணங்களையும், நேர்மறை எண்ணங்களையும், முடியாதது எதுவுமே இல்லை எனும் அளவுக்கு அசாத்திய தைரியத்தையும் என்னுள் ஊட்டிய
இந்தத் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் நிறுவனம் 2000 ஆண்டு சொந்த இடம் வாங்கிக்கொண்டு இடம்பெயர்ந்தபோது இந்த இடத்தைவிட்டு வரவே மனமில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தின் கிளையாக அந்த தெருவில் இருந்த எங்கள் வாடகை இடத்தையும் வைத்திருந்தோம்.

நேற்று ஒரு வேலையாக இந்தத் தெருவழியாக செல்ல வேண்டி இருந்தது. அப்போது கண்ணில் பட்டது தெரு முனையில் இருந்த தெருவின் பெயரைத் தாங்கிய போர்ட். அருகே ஒரு பூக்கடை. பூக்கடையில் ஒரு அம்மாவும் மகளும் பூ தொடுத்துக்கொண்டிருந்தனர். பூக்கடைக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் உண்டு.

சொல்கிறேன். மேலே படியுங்கள்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்துப் படிப்பவர்களே குறைவு. அதிலும் பெண்கள் மிகக் குறைவு. காரணம் அப்போதுதான் நம் நாட்டில் கம்ப்யூட்டர் அடி எடுத்து வைக்கவா வேண்டாமா என ததிங்கினதோம் போட்டுக்கொண்டிருந்தது.

தெருமுனை பூக்கடையில் பூ கட்டிக்கொண்டிருக்கும் இளம் பெண்ணிடம் பூ வாங்கி சுவாமிப் படத்துக்கு தினமும் போடுவோம். அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்து அவர் என்ன படித்திருக்கிறார் என அறிந்து கொண்டேன். +2 முடித்து டைப்பிங் பாஸ் செய்து தொலைதூரக் கல்வியில் ஏதோ ஒரு டிகிரி சேர ஆசைப்பட்டார்.

அவரை அவர் அம்மாவின் அனுமதியுடன் எங்கள் காம்கேருக்கு வரச் செய்து கம்ப்யூட்டரின் அடிப்படைக் கற்றுக்கொடுத்தோம். அப்போதெல்லாம் வங்கிகளில் சாஃப்ட்வேர் பிரிவெல்லாம் கிடையாது. அவர்களின் தினப்படி டேட்டாக்களை தொகுத்து பிரிண்ட் எடுத்துக்கொடுக்க சாஃப்ட்வேர் தயாரித்து வைத்துக்கொண்டு, அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொடுக்கும் பணியை செய்து வந்தோம். அந்தப் பணியில் அந்த பூக்கடைப் பெண்ணை அமர்த்தினோம். பணி செய்துகொண்டே டிகிரியை தொலைதூரக் கல்வியாக படித்து முடித்தார்.

இவர் மட்டுமல்ல. இதுபோல பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருந்த பல பெண்களை வேலைக்கு எடுத்து கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்து தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் நிலையை உயர்த்தினோம்.

தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்று யாருக்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தொழில்நுட்ப உலகில் உதவ முடியும். ஆனால், கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படையே இல்லாத அந்த நாட்களில் நாங்கள் முன்னெடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் புகைப்படமாகவோ வீடியோவாகவோ சாட்சிகள் இல்லை என்றாலும் அதுபோன்ற சேவைகள்தான் வாழ்க்கை மீது எனக்கு பெருத்த நம்பிக்கையை ஊட்டியது. இன்று நான் இயங்கும் சூழலும், என் செயல் திறனுமே தொழில்நுட்பத் துறையில் ‘வெள்ளத்தனைய மலர் நீட்டமாக…’ நானும் உயர்ந்து எனைச் சார்ந்த இந்த சமூகத்தையும் தொழில்நுட்ப ரீதியாக உயர்த்தியமைக்கு சாட்சிகள்.

ஆம். நாம் செய்யும் செயல்கள்தான் நம்மை வடிவமைக்கிறது. நானும் / எனக்கும் அப்படியே.

என் முப்பதாண்டு சர்வீஸில் இந்தத் தெருவுக்கும் பெரும் பங்குண்டு. நினைவுகளை சுமந்துகொண்டு காரை முதல் கியரில் மெதுவாக இயக்கி நாங்கள் இயங்கிய கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு வேகமெடுத்தேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மே 19, 2022 | வியாழன் | காலை 6 மணி

(Visited 1,353 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon