ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்!
எங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக, திருக்குறள் 1330 -யும் பாண்டிச்சேரி FM -ல் சில வருடங்களுக்கு முன்னர் தினம் ஒரு திருக்குறளாக எடுத்துக்கொண்டு அன்றாட வாழ்வில் நடக்கும் நடைமுறை உதாரணங்களுடன் விளக்கி வெளியிட்டோம். ‘தினம் ஒரு குறள்’ என்ற தலைப்பில் ஒலிபரப்பானது.
தவிர, திருக்குறள் 1330-யும் ஆங்கில மொழிபெயர்ப்புடன், அழகான விளக்கங்களுடன் எங்கள் காம்கேர் மூலம் மல்டி மீடியா படைப்பாகவும் வெளியிட்டோம். பார்வையற்றவர்களும் பயன்படுத்தும் விதத்தில் எளிமையாக கையாளும் விதத்தில் இருந்ததே அதன் சிறப்பு.
அது என்னவோ திருக்குறள் என்றாலே எனக்கு பேரானந்தம்தான். பிரமாண்டமான கருத்துக்களை அழகாக கேப்ஸ்யூல் போல இரண்டே இரண்டு வரிகளில் சொல்லி இருப்பதாலோ என்னவோ அதன் எளிமை என்னைக் கவர்கிறது.
நேற்று பொதிகை டிவியை ஆன் செய்துவிட்டு அலுவலகப் பணியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன். எதேச்சையாக என் கண்களில் பட்டு ‘அட’ போட வைத்தது ஒரு நிகழ்ச்சி. அதன் தலைப்பே பேரழகாய் இருந்தது. ’அய்யன்குறளும் அபிநயமும்’.
திருக்குறளே அழகு. அதுவும் ஆடல் பாடலுடன் வெளிப்படுத்தும்போது அதன் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அத்தனை அழகு.
ஐந்து சிறுமிகள் பரநாட்டியம் ஆடியபடி ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள பத்து குறள்களுக்கும் அபிநயம் பிடித்து ஆடுகிறார்கள்.
தினமும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஒளிப்பரப்பாகிறது. தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் பொதிகை தூர்தர்ஷனின் யு-டியூப் சேனலில் பார்க்கலாம்.
திருக்குறளை எப்படியெல்லாமோ படித்திருப்போம், கேட்டிருப்போம். ஏன் நாங்கள் அனிமேஷனில் கூட செய்திருக்கிறோம்.
ஆனால் இது முற்றிலும் புதுமையாக இருந்தது. வாய்ப்பிருப்பவர்கள் பார்க்கவும். உங்கள் குழந்தைகளுக்கும் பகிரவும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 6, 2022 | சனிக்கிழமை