பிசினஸ்… பிசினஸ்!
மயிலாப்பூர் வரை செல்ல வேண்டிய வேலை. காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு வேலையை முடித்துக்கொண்டு வருவதற்குள் நல்ல மழை. காரில் வெயிலுக்குத் தலைக்குத் தொப்பியும், மழைக்கு குடையும் வைத்திருப்பேன். ஆனால் எடுத்துச் செல்ல மறந்துவிட்டதால் அருகில் இருந்த சரவண பவனுக்குள் அடைக்கலமானேன்.
கூட்டமே இல்லை என்று சொல்வதற்குக்கூட ஒருவித தயக்கமாக உள்ளது. ஆள் நடமாட்டமே குறைவு என்று சொல்லலாம். பார்ட்டி ஹாலில் ஏதோ திருமண நிச்சயதார்த்தமோ அல்லது அது சார்ந்த நிகழ்ச்சியோ நடந்து முடிந்ததால் அவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். சாப்பாட்டு மேஜைகள் வெறிச்சோடி இருந்தன. ஆங்காங்கே அமர்ந்திருந்த ஓரிருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
சர்வர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. நான் உள்ளே சென்று ஒரு டேபிளில் அமர்ந்ததைப் பார்த்தும் அங்கு நின்று கொண்டிருந்த சர்வர்கள் கண்டும் காணாமல் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு காபி சாப்பிட்டுப் பார்க்கலாம் என நினைத்து ஒரு சர்வரை ‘சார்’ என கொஞ்சம் சப்தமாக அழைத்தேன். ‘பெரிய மனது’ செய்து வந்தார். சூடாகவும் இருக்கணும், ஸ்ட்ராங்காகவும் இருக்கணும் என்று சொல்லி ஒரு காபி ஆர்டர் செய்தேன். சுமாருக்கும் சுமாரான சுவையில் அரைச் சூடு, அரை சர்க்கரையில் காபி என்ற பெயரில் ஒரு காபியை பதினைந்து நிமிட காத்திருப்புக்குப் பிறகு கொண்டு வைத்தார்கள்.
ஒரு காலத்தில் சரவண பவன் காபி எப்படி தயாரிக்கிறார்கள் என்று கேட்டறிந்து நாங்கள் தயார் செய்த நாட்கள் எல்லாம் என் மனதுக்குள் வந்து சென்றன. சரவண பவன் காபியை நினைத்தாலே மனதுக்குள் காபி மணம் வீசும்.
இப்போது கலை இழந்து ‘வெறிச்சோ’ என்று இயங்கும் சரவண பவனின் நிலை மனதை என்னவோ செய்தது.
பில் கொடுக்கவும் ஆட்கள் வரவில்லை. நானாக கவுண்டர் சென்று கேட்ட பிறகு பில் வந்தது. பணம் செலுத்தினேன்.
இதற்குள் பார்ட்டி ஹாலில் இருந்து ஒருவர் தள்ளாடியபடி வர அவரை இரண்டு பேர் இரண்டு பக்கமும் தாங்கிக்கொண்டு வந்து ஒரு ஆட்டோவில் ஏற்றினர். என்னதான் நடக்கிறது?
சமீபத்தில் திருச்சி சென்றிருந்த போது ஸ்ரீரங்கம் கோயில் வாசலுக்கு அருகில் ‘முரளி கபே’ என்று காபி கடை. அதற்கருகில் காரை நிறுத்தி காபி சாப்பிடும் பலரை காண முடிந்தது.
எங்கள் குடும்ப நண்பர் எங்களுக்கு அந்தக் கடையில் காபி சூப்பராக இருக்கும் எனச் சொல்லி காபி வாங்கிக் கொடுத்தார். அந்தக் கடையில் தினமும் 2000 காபி விற்பனை ஆகும் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்.
மழை நின்றபாடில்லை. எனக்கு என்னவோ, காலையிலும் மாலையிலும் வாக்கிங் செல்வோர், கோயிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பிரயாணிகள் என நாள் முழுவதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்த காபி கடை நினைவுக்கு வந்தது.
மழை விடும் வரை மனதுக்குள் காபி நினைவுகளே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 3, 2022 | சனிக்கிழமை