‘பிரண்டை’ காய்ச்சல்!
நாங்கள் அவ்வப்பொழுது பிரண்டையை சமையலில் சேர்த்துக்கொள்வோம். எங்கள் வீட்டிலேயே பிரண்டை படர்ந்து வளரும். பிரண்டையை பறித்து வெயிலில் காய வைத்து பொடியாகவும் அரைத்து வைத்துக் கொள்வோம். அது என்னவோ தெரியவில்லை, பிரண்டை பொடிக்கும் எங்களுக்கும் ஏழாம் பொருத்தம். எப்போது பிரண்டையை பறித்து சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைத்தாலும் வானம் சட்டென கருக்கும். அதற்கு பயந்துவிடாமல் கண்டும் காணாமல் இருந்துவிட்டால் மொட்டை மாடியில் காய வைத்துவிட்டு கீழிறியங்கிய சில நிமிடங்களில் ‘சொடச் சொடவென’ மழை சின்னதும் பெரியதுமாக தூர ஆரம்பித்துவிடும்.
அவசரம் அவசரமாய் காய வைத்த பிரண்டையை சுருட்டி எடுத்து வந்த பிறகு தூரல் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடும். வானம் மட்டும் கருத்து இருட்டிக்கொண்டு மிரட்டியபடி இருக்கும்.
நாம் நம் வேலையில் கவனமாகும்போது இருட்டிய வானம் வெளுப்பாகி வெயில் அடிக்க ஆரம்பிக்கும். எதேச்சையாக கவனித்து காய வைக்கலாம் என நினைத்தால் போதும் வானம் மீண்டும் கருக்க ஆரம்பித்துவிடும்.
இப்படியாக வானம் கருப்பதும், வெளுப்பதுமாக கண்ணாமூச்சி ஆட்டம்தான் போங்கள்.
இந்தக் கதையெல்லாம் இப்போது ஏன் என கேட்கிறீர்களா?
மழைக்கு பயந்து மொட்டை மாடியில் இருந்து இடம்பெயர்ந்து, பட்டும் படாமல் வரும் பால்கனி வெயிலில் சுருண்டு தாம்பாளத்தில் காய்ந்துகொண்டிருந்த பிரண்டை ‘ஈ’ என எங்களைப் பார்த்து சிரித்ததால் இந்தக் கதை.
வீட்டில் பிரண்டைப் பொடி அரைப்பதற்காக காய வைக்க ஆரம்பித்த நேரம் மழை… தூரல்… பெருமழை… சிறு மழை… என விதவிதமான டிஸைன்களில் மழை!
கூகுளில் ‘வெதர்’ பார்த்தேன். இன்னும் பத்து நாட்களுக்கு மழை என காட்டியது!
ஒரு நொடி ஒரே ஒரு நொடி வானம் பார்த்துப் பார்த்து விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலைமையை நினைத்தேன். அவர்களை மானசீகமாக வணங்கினேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 31, 2022 | புதன் கிழமை