சிவா கிராஃபிக்ஸ் – எஸ். எஸ் கிராஃபிக்ஸ் செந்தில்குமார்!

ஆழ்ந்த இரங்கல்கள்!

இன்று திரு. செந்தில்குமாரின் மனைவியிடம் போனில் பேசியதில் இருந்து மனதே ஆறவில்லை. அவர் நேற்று இரவு 10 மணிக்கு மெசஞ்சரில் தன் கணவர் திரு செந்தில்குமார் 20 நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்று தகவல் கொடுத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.

41 வயதே ஆனவர். கடுமையான உழைப்பாளி. மதியம் சாப்பிட்டு தட்டைக் கழுவி வைத்தவர் அப்படியே சாய்ந்துவிட்டாராம். மாரடைப்பு.

இளம் வயது மரணங்கள் கேள்விப்படுவதற்கே மிகக் கொடுமையாக உள்ளது.

‘சிவா கிராஃபிக்ஸ்’ – 1998 வருடம் டிடிபி நம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப்பட ஆரம்பித்த காலங்களில் சென்னையின் பிரபலமான பதிப்பகங்கள் இந்த பெயரை உச்சரிக்காத நாட்களே கிடையாது என்ற அளவில் பரபரப்பாக இயங்கி வந்தது.

அப்பா, பிள்ளைகள் என குடும்பமாக வீட்டிலேயே ஒரு அறையில் இரண்டு கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு தமிழில் டைப் செய்து லே அவுட் செய்து டிடிபி தொழில் செய்து வந்தார்கள்.

இரவு பகலாக உழைத்தார்கள். இவர்களிடம் வேலையைக் கொடுத்துவிட்டால் நேராக அச்சுக்கு அனுப்பி விடலாம் என்ற அளவில் தொழில் நேர்த்தி இருக்கும்.

அநுராகம் பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வாயிலாக மாதந்தோறும் வெளியாகிக்கொண்டிருந்த என்னுடைய பல தொழில்நுட்பப் புத்தகங்களை இவர்கள்தான் லே அவுட் செய்து வந்தார்கள்.

தொழில்நுட்பப் புத்தகங்கள் எழுதுவதும், வெளிவருவதும் அப்போது தான் ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் என்னுடைய நேரடி கவனிப்பும் அவசியமாக இருந்தது. அதனால் அவர்கள் இடத்துக்கு நானே நேரில் சென்று லே அவுட் செய்வதற்கு வழி காட்டி இருக்கிறேன்.

அதுவும் நான் எழுதும் பாணி ஆராய்ச்சி புத்தகங்கள் போல ஏராளமான செயல்முறை விளக்கப் படங்களுடன் இருக்கும் என்பதால் படங்களை வைத்து லே அவுட் செய்வது என்பது கதை கவிதை புத்தகங்களை லே அவுட் செய்வதைப் போல அத்தனை சுலபம் கிடையாது. கதை என்றால் டைப் செய்தவற்றை அப்படியே எடுத்து பேஜ்மேக்கர் / இன் டிஸைனில் பேஸ்ட் செய்தால் அவை ஜம்மென தானாகவே அலைன் ஆகிவிடும். சிறு சிறு திருத்தங்கள் செய்தால் போதும். ஆனால் நான் எழுதும் தொழில்நுட்பப் புத்தகங்களை லே அவுட் செய்வது நிறைய நேரம் எடுக்கும்.

தொழில்நுட்பப் புத்தகங்களை எழுதுவதற்கும் நேரம் எடுக்கும், டைப் செய்வதற்கும் நேரம் எடுக்கும், லே அவுட் செய்வதற்கும் நேரம் எடுக்கும், எழுத்துப் பிழைகளை சரி பார்த்தல், தொழில்நுட்ப வார்த்தைகளை ப்ரூஃப் பார்க்கும் பணி, படங்களுக்கு ஏற்ப தகவல்கள் மாறாமல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கும் பணி என வேலை பின்னி எடுக்கும். அச்சுக்குப் போவதற்குள் ‘அப்பாடா’ என்றிருக்கும்.

இந்தப் பணியை எடுத்துச் செய்பவர்கள் குறைவு என்பதாலும் என் எழுத்து நடையை நன்கறிந்தவர்கள் என்பதாலும் ‘சிவா கிராஃபிக்ஸ்’ அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார்கள். இப்போதும் சிவா கிராஃபிக்ஸ், எஸ்.எஸ். கிராஃபிக்ஸ் என இரண்டு பெயர்களில் டிடிபி செய்து வருகிறார்கள். சென்னையில் இருந்து இடம் பெயர்ந்து காரைக்குடி சென்று செட்டில் ஆகிவிட்டார்கள்.

ஒருமுறை என்னைப் பற்றி அதிகம் அறியாத பதிப்பாளர் ஒருவர் திரு செந்தில்குமாரிடம் ‘மேடம் எப்படி?’ என பொதுவாக விசாரித்திருக்கிறார்.

அதற்கு இவர் சொன்ன ஒற்றைத் தகவல் என்ன தெரியுமா? ‘100 சதவிகிதம் பர்ஃபக்‌ஷனிஸ்ட்’. இவர் இப்படிச் சொன்னதாக அந்தப் பதிப்பாளரே என்னிடம் சொல்லி ஆச்சர்யப்பட்டார்.

ஆமாம். உண்மைதான். சிறு பிசிறுகூட வராத அளவுக்கு என்னுடைய புத்தகங்கள் லேஅவுட் செய்யப்பட வேண்டும் என நினைப்பேன். அந்த அளவுக்கு புத்தக ஆக்கத்தில் இணைந்திருக்கும் அத்தனை பேரிடமும் தொடர்பில் இருந்து நான் நினைக்கும் நேர்த்தி வரும்வரை வேலையை சரிபார்ப்பேன். அதனால்தான் அவர் அப்படி என்னைப் பற்றிய நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக என்னுடைய டீமில் வேலை செய்பவர்கள் ஒரு கட்டத்தில் சோர்ந்துவிடுவார்கள். பலர் மனதுக்குள் ‘நச்சு’ எனவும் சபித்திருக்கலாம். ஆனால் இவரோ…

எழுத எழுத சிவா கிராஃபிக்ஸ் / எஸ். எஸ். கிராபிஃக்ஸ் செந்தில்குமார் அவருடைய மறைவு செய்தி மனதை விட்டு அகலாமல் அழுத்துகிறது.

எட்டாம் வகுப்பு படிக்கும் அவருடைய மூத்த மகள்தான் அப்பாவின் ஈமச் சடங்குகள் அத்தனையையும் செய்திருக்கிறார்.

‘பெண் குழந்தைகளை நல்லபடியாக வளருங்கள். உத்வேகத்துடன் வாழ்ந்து காட்டுங்கள். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ என ஆறுதல் சொல்லி போனை வைத்தேன்.

ஓம் சாந்தி!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர் 4, 2022 | ஞாயிறு

(Visited 466 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon