காலம் செய்யும் மாயம்!
எங்கள் சிறு வயதில் வீட்டுக்கருகில் வசித்த, தற்போது பதினைந்து பதினாறு வயதில் மகன் இருக்கும் என்னுடன் படித்த ஒரு மாணவி, வீட்டுக்கு வந்திருந்தாள், திருமண செய்தியுடன்.
அப்போது அவள் எங்கள் குடும்ப உறுப்பினர் போல நன்றாக பழகுவாள். எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். என் பெற்றோரின் பணி நிமித்த இடமாற்றல் காரணமாக பல ஊர்களில் வசிக்க நேரிட்டதால் எப்போதோ அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டாள்.
கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு இப்போது என் தொலைபேசி எண்ணை எப்படியோ தெரிந்துகொண்டு தொடர்பில் வந்தாள். எங்கள் காம்கேர், என் தங்கை தம்பி குறித்தெல்லாம் ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டாள்.
என் பெற்றோருடன் அவள் தன் பழைய கதைகளை நினைவு கூர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது வெகு இயல்பாய் அவள் சொன்ன ஒரு கருத்து என் பெற்றோருக்கு மகுடம் சூட்டியது.
‘உன்னைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் உங்க அப்பா அம்மா டிசிப்ளின், டிசிப்ளின், டிசிப்ளின் என வளர்த்ததுதான் நினைவுக்கு வருகிறது…’ என்ற போது என் அப்பாவின் கண்கள் கசிந்தன.
அப்படி ஒன்றும் அவர்கள் ‘டிசிப்ளின்’ என்ற வார்த்தையை ஒருநாளும் சொன்னதில்லை. அவர்கள் இருவரும் ஒழுக்கமாக வாழ்ந்து காட்டினார்கள். நாங்கள் வளர்ந்தோம். அவ்வளவுதான்.
சுயசார்புடன் வாழவும் கற்றுக்கொடுத்தார்கள். ஆண், பெண் பேதமின்றி அங்கள் மூவருக்கும் வீட்டு வேலை, வெளி வேலை, சைக்கிள் பைக் என இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தல் என அனைத்தையும் பழக்கப்படுத்தினார்கள்.
இந்த வளர்ப்புமுறைதான் மற்றவர்கள் பார்வையில் ‘டிசிப்ளின்’ எனப்படுகிறது என நினைக்கிறேன்.
‘உங்கள் வீடுகளில் எல்லாம் மட்டும் என்ன?’ என்று அவள் வாயைக் கிளறினேன்.
‘நாங்கள் எல்லோரும் அவுத்துவிட்ட கழுதையாய் ஜாலியாக இருந்தோம்… உனக்குத்தான் தெரியுமே?’ என்றாள்.
அப்போதெல்லாம் என் சக வயதினர்களின் செயல்பாடுகளை அதிசயமாக பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் அப்போதெல்லாம் அவர்களுக்கு என்னை கவனிக்க நேரம் இல்லை. இப்போது என் சின்னச் சின்ன அசைவைப் பார்த்தும் அதிசயிக்கிறார்கள்.
‘வாயைத் திறந்து பேசவே காசு கொடுக்க வேண்டும் என்ற அளவில் அமைதியின் சொரூபமான நீ எப்படி மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலக்குகிறாய்… டாக்குமெண்டரி படங்கள் எல்லாம் எடுக்கிறாய்…’ என்று அதிசயித்தாள். அவளுக்கு நான் சொன்ன பதிலை தனிப் பதிவாக எழுதுகிறேன்.
எல்லாம் பேசிவிட்டு கிளம்ப தயாரானபோது ‘எல்லாம் சரி யாருக்குத் திருமணம்… வந்த செய்தியை மறந்துவிட்டாயே’ என்று கேட்டதற்கு அவள் சொன்ன பதிலில் உறைந்தேன்.
‘எனக்குத்தான். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. இப்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். கோயிலில் வைத்து எளிமையாகத் திருமணம்…’ என்று வெகு இயல்பாய் பேசியவளை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என்னை அவளுடைய பதினாறு வயது மகன் கவனித்துக்கொண்டிருந்தான். நான் அனிச்சையாக என் வியப்பின் சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
எனக்கு என்னவோ நான் 35 வருடங்களுக்கு முன் சென்று என் சகவயதினர்களை அதிசயமாக பார்த்த காலத்துக்குள் நுழைந்து விட்டதைப்போல் இருந்தது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 14, 2022 | புதன் கிழமை