சின்னச் சின்ன விஷயங்களுக்கு!

சின்னச் சின்ன விஷயங்களுக்கு!

நகைக்கடையை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமான வடிவமைப்பில் தமிழகம் முழுவதும் பலகிளைகள் கொண்ட மொபைல் விற்பனை நிலையம். உள்ளே சென்றதும் கைகூப்பி வணக்கம் சொல்லி அழைப்பதில் இருந்துத் தொடங்கி சீருடை அணிந்துகொண்டு துறுதுறுவென வேலை செய்துகொண்டிருந்த இளம் ஆண்களும் பெண்களும் ‘அட’ போட வைத்தார்கள்.

கடை முழுவதும் அடர்ந்த குளிர்ச்சி. பரவலான கூட்டம். எந்த இடத்திலும் எந்த ஒரு வாடிக்கையாளரும் காத்திருக்கவில்லை. எல்லோரையும் யாரேனும் ஒரு விற்பனைப் பையனோ, பெண்ணோ கவனித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் என்ற பாகுபாடு இன்றி யாருமே மாஸ்க் அணியவில்லை என்ற குறையைத் தவிர வேறெந்த குறையையும் காணமுடியவில்லை. நான் மட்டுமே மாஸ்க் அணிந்திருந்தேன்.

நான் வாங்க வேண்டிய மொபைல் பிரண்ட்டைப் பற்றி விவரித்த விற்பனைப் பொறியாளர் மிகப் பொறுமையாக என்னை அந்த மொபைலை வாங்க வைத்துவிட வேண்டிய அணுகுமுறையுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் கேட்ட பிராண்டைத் தவிரவும் மற்ற பிராண்டுகள் குறித்தும் பேசி என்னை தகவல்களால் நிரப்பிக்கொண்டிருந்தார்.

உங்கள் பழைய போனில் இருந்து இதில் மாற்ற வேண்டுமானால் இந்த ஆப்பை பயன்படுத்துங்கள் என மிக விரிவாக தன்னுடைய போனில் செய்துகாண்பித்தார். குழந்தை முதல் பெரியோர் வரை யாருக்கும் அவர் சொல்வது புரியும் என்ற அளவில் இருந்தது அவர் விவரித்தது.

நான் தொழில்நுட்பமே அறியாதவள் போல எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் ஏதேனும் ‘எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டால் அவர் ஏதேனும் சிறப்பு அம்சம் இருந்து அதை சொல்லாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது?

அப்போது திடீரெனெ பக்கத்து கவுண்ட்டரில் இருந்த மற்றொரு இளம் விற்பனையாளர் என்னிடம் ‘உங்களால் செய்ய முடியாது… கொஞ்சம் கஷ்டம்… எப்போது உங்கள் பழைய போனில் இருந்து சிம்மை எடுத்து இந்த போனில் போடப் போகிறீர்களோ அப்போது எங்களிடம் வாங்க… நாங்க செய்து கொடுக்கறோம்’ என்றார்.

எனக்கு வழக்கம்போல் சட்டெனெ கோபம் வந்தாலும் பொறுமையாக அவரை பார்த்தேன். நான் அவருக்கு நன்றி சொல்வதாக நினைத்து புன்னகைத்தார்.

கட்டணம் செலுத்தி மொபைலை பெற்றுக்கொண்டு நன்றி சொல்லி வெளியே வந்தேன்.

மனமோ, ’உங்களால் செய்ய முடியாது. நாங்கள் செய்து தருகிறோம்’ என்பதற்கும் ‘உங்களால் செய்ய முடியவில்லை என்றால் வாருங்கள். நாங்கள் செய்து தருகிறோம்…’ என்று சொல்வதற்கும்தான் எத்தனை வித்தியாசம் என்று யோசித்துக் கொண்டிருந்தது.

இந்த இரண்டுக்குமான இடைவெளியில் என் மனதுக்குள் ஒரு பிசினஸ் ஐடியா. அடுத்த நாள் அதை செயல்படுத்த சென்னையின் மையத்தில் இயங்கிவரும் அந்த மொபைல் விற்பனை நிலையத்தின் நிர்வாக அலுவலகத்தை அணுகினேன். பேசினேன். என் புத்திசாலித்தனம், படிப்பு, அனுபவம் போன்றவற்றை அங்கு காண்பித்தேன். அந்த மொபைல் நிறுவனத்துடன் ஒரு பிசினஸ் ஒப்பந்தத்துக்கு வித்திட்டேன்.

நாம் புத்திசாலி, சாஃப்ட்வேர் துறையில் சாதித்தவள் என்றெல்லாம் அந்த விற்பனைப் பொறியாளருக்குச் சொல்லி என்ன ஆகப் போகிறது. அதை அப்படியே மடைமாற்றி அந்த மொபைல் விற்பனை நிலையத்துக்கே பயன்படும் வகையில் புது ப்ராஜெக்ட் உருவாக்கினேன்.

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் எதிர்வினை ஆற்றாமால் இருந்தால் நமக்குள் இருக்கும் நேர்மறை சிந்தனைகள் பிரமாதமாக வேலை செய்து நமக்கு நன்மையையே செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு உதாரணம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர் 20, 2022 | செவ்வாய்

(Visited 561 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon