நல்லோர்சூழ் உலகு, அதிலோர் நல்லவர் நாமும்!
வேளச்சேரியில் பரபரப்பான தெருவின் முனையில் பள்ளம் தோண்டி அதில் மழை நீரும் நிரம்பி புதைக்குழி போல் ஆகியிருந்த ஓரிடத்தில் அறிவிப்புப் பலகை ஏதும் இல்லாததால் சென்ற வாரம் எங்கள் கார் அதில் மாட்டிக்கொண்டு வெளியே எடுக்க முடியாமல் நின்றது.
தெருவில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், போவோர் வருவோர் என ஒரு கூட்டமே கூடிவிட்டது. எல்லோரும் பின்னால் தள்ளினார்கள். ஏதேதோ யோசனை சொன்னார்கள். ஒரு ஆட்டோ டிரைவர் நான் எடுக்க முயற்சிக்கிறேன் என சொல்லிவிட்டு முயன்றார். பெருமுயற்சிக்குப் பிறகு தெரு முழுவதும் சேரை வாரி இறைத்துக்கொண்டு கார் புதைகுழி சேற்றில் இருந்து சீறிக்கொண்டு புறப்பட்டது. பின்னால் பிடித்துத் தள்ளியவர்கள் தடுமாறி விழப்போனார்கள்.
ஆட்டோ டிரைவரை சக ஆட்டோ டிரைவர்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடாத குறைதான். கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
அந்தக் காட்சி ‘நான் ஆட்டோகாரன்… ஆட்டோகாரன்… நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்’ என்ற ரஜினி பாடலையும் ஆடலையும்தான் நினைவூட்டியது.
அந்த டிரைவர் எங்களிடம் வந்து ‘ஏதேனும் உதவின்னா கூப்பிடுங்க… என் மொபைல் எண்ணை குறிச்சுக்கோங்க… கால் டிரைவர் வேண்டுமானாலும் அழையுங்கள்’ என ஸ்டைலாக சொல்லி சல்யூட் அடித்துவிட்டு நின்றார்.
நாங்கள் அவர் செய்த உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு ஏதேனும் பணம் கொடுக்கலாமா என யோசிக்கும் இடைவெளியில் ‘ஏதேனும் பணம் கொடுங்க… ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன்’ என்று சொன்னதால் ஐநூறு ரூபாய் கொடுத்தோம். வாங்கிக்கொண்டு பெரிய வணக்கம் வைத்து ‘தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பணம் கேட்டதற்காக’ என்று சொல்லிவிட்டு படு வேகமாக நகர்ந்தார்.
எங்கள் கார் சேற்றில் இருந்து வெளியே வர உதவிய மற்றவர்களுக்கு நன்றி சொல்லலாம் என்று திரும்பிப் பார்த்தால் யாரையும் காணோம். துடைத்துவிட்டதைப் போல ஆள் அரவமற்று வழக்கமான போக்குவரத்துடன் அமைதிப் போர்வைக்குள் சென்றிருந்தது அந்தத் தெரு.
உதவி என்றால் கூட்டம் கூடுவதும், கூட்டத்தில் பலர் பிரதிபலன் இல்லாமல் உதவ முனைவதும், ஓரிருவர் பணம் வாங்கிக்கொண்டேனும் உதவி செய்வதும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை கூட்டியது. யாரேனும் வீடியோ எடுக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் எடுக்கவில்லை.
வேறு யாரும் இதுபோல் மாட்டிக்கொண்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், இருப்பிடம் வந்ததும் அந்தத் தெருவின் நிலை குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்ணை வெப்சைட்டில் தேட ஆரம்பித்தோம். புகாரும் அளித்தோம். காரை சர்வீஸுக்குக் கொடுத்தோம்.
நல்லவர்கள் சூழ் வாழ்வதும், நாமும் அதிலோர் நல்லவராக இருப்பதும் எத்தனை சுகமாக உள்ளது.
நல்லோர்சூழ் உலகு, அதிலோர் நல்லவர் நாமும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 13, 2022 | வியாழன்