இப்பவும் ஒண்ணும் தாமதமில்லை!

இப்பவும் ஒண்ணும் தாமதமில்லை!

நேற்று ஒரு போன்கால். எங்கள் நிறுவன தயாரிப்புகளை (சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், புத்தகங்கள்…) வாங்குவதற்கான அழைப்பு என்றால் எங்கள் நிறுவனப் பணியாளர்களே பார்த்துக்கொள்வார்கள். ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் என்றால் மட்டும் அழைப்பை என் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள். அதுபோன்று என் கவனத்துக்கு வர வேண்டிய ஒரு அழைப்பு என்பதால் நான் பேசினேன்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகையில் நான் எழுதி வந்த ‘காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்’ என்ற தொடரை படித்து கட் செய்து வைத்திருந்த வாசகர் ஒருவர் மதுரைக்கு அப்பால் உள்ள ஓர் ஊரில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்துகொண்டு பேசினார்.

அதில் நெசவு செய்பவர்கள் கம்ப்யூட்டர் மூலம் துணியில் டிஸைன் செய்யும் நுட்பம் குறித்து நான் எழுதி இருந்ததை ரெஃபரன்ஸாகக் காட்டி ‘அதுபோல நானும் ஏதேனும் பிசினஸ் செய்யலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார்.

‘நல்லது சார். செய்யுங்கள்…’

‘அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்…’

‘சரி, உங்களுக்கு நெசவு பற்றி தெரியுமா?’

‘தெரியாது. நான் வேறு துறை படித்தவன்…’

‘சரி, டிஸைனிங், கிராஃபிக்ஸ் இதாவது தெரியுமா?’

‘இல்ல மேடம். தெரியாது…’

‘சரி கிரியேட்டிவிட்டியாவது இருக்கா…’

‘இல்ல மேடம். நான் வேலை பார்ப்பது ஒரு செராக்ஸ் கடையில். செராக்ஸ் போட மட்டுமே தெரியும்…’

’நெசவும் தெரியாது, அதில் பிரிண்ட் செய்யப்பட்டும் ஓவியங்கள் குறித்தும் தெரியாது. கிரியேட்டிவிட்டியும் இல்லை என்கிறீர்கள். பின் எப்படி அதை வைத்து பிசினஸ் செய்ய முடியும்?’

‘நீங்கள் எழுதி இருக்கிறீர்களே. ‘உங்களிடம் கம்ப்யூட்டர் இருக்கா, பிசினஸ் செய்யலாம்’ என்று’

‘நல்ல படிச்சுப் பாருங்க. பிசினஸ் என்ற வார்த்தைக்கு முன் ‘உங்கள் திறமையை’ என்று எழுதி இருப்பேன்…’

‘அப்படியா…’

‘ஆமாம். உங்களிடம் கம்ப்யூட்டர் இருக்கா, பிசினஸ் செய்யலாம் என்பதற்கும், உங்களிடம் கம்ப்யூட்டர் இருக்கா, உங்கள் திறமையை பிசினஸ் ஆக்கலாம் என்பதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது. கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்ன பிசினஸ் செய்வது என்று யோசிப்பதற்கும், உங்கள் திறமைக்கு கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்குமான வித்தியாசம்தான் அது…’

‘…’

‘என்ன புரியலையா சார், உங்களுக்கு வரையத் தெரிந்தால் கம்ப்யூட்டரில் ஓவியம் வரைந்து சம்பாதிக்கலாம், பேச்சாற்றல் இருந்தால் வீடியோ எடுத்துப்போட்டு யு-டியூபில் சம்பாதிக்கலாம்…’

’…’

‘இப்படி உங்கள் திறமையை வைத்து சம்பாதிக்க கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம்…. மற்றபடி கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு என்ன பிசினஸ் செய்யலாம் என்று யோசிக்கும் காலம் எல்லாம் மலை ஏறிவிட்டன…’

‘அப்ப நான் எந்த பிசினஸும் செய்ய முடியாதா?’

‘ஏன் முடியாது? உங்கள் திறமை, ஆர்வம், இப்போது எந்தத்துறையில் இயங்குகிறீர்கள், என்ன படித்துள்ளீர்கள் இவற்றை வைத்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்…’

‘…’

‘கம்ப்யூட்டரை வைத்து பிசினஸ் என்று சொல்வதுகூட சரியில்லை… இன்றைய காலகட்டத்துக்கு தொழில்நுட்பத்தை வைத்து புத்திசாலித்தனமாக வருமானம் ஈட்டுவது என்று சொல்வதுதான் பொருத்தமாக. இப்போது மொபைலே கம்ப்யூட்டர் போல செயல்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் கைகளில் கட்டிக்கொள்ளும் ஸ்மார்ட் வாட்ச்சுகளில் ஒருசில பிராண்டுகள் கம்ப்யூட்டர்போல செயல்படுகிறது. ஸ்மார்ட் வாட்ச், மொபைல், ஐபேட், ஐபோன், டேப்லெட், லேப்டாப் இப்படி எல்லாவற்றையுமே நம் மக்கள் கம்ப்யூட்டர் போல பயன்படுத்துகிறார்கள்…’

’…’

‘சுருக்கமா சொல்லட்டுமா உங்களுக்குப் புரிவதைப் போல…’

‘சொல்லுங்கள் மேடம்…’

‘Computer for Business என்ற காலம் மலைஏறி Computer for Life… இல்லை இல்லை… Technology for LIFE என்ற காலம் வந்தே பத்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன சார்…’

‘அப்போ நான் ரொம்ப பின்தங்கி இருக்கிறேன் என்கிறீர்களா?’

’நான் அப்படி சொல்லவில்லை. தொழில்நுட்பம் வளர்ந்து உச்சத்துக்கு வந்துவிட்டது என்கிறேன். அவ்வளவுதான்…’

‘…’

‘இதுவரை கற்றுக்கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. இனி அப்டேட் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கே உங்கள் திறமைகள் என்னவென்று தெரியும். ஜமாய்க்கலாம்… வாழ்த்துகள்’

மிக நிறைவான கவுன்சிலிங்காக அமைந்தது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

அக்டோபர் 22, 2022 | சனிக்கிழமை

(Visited 600 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon