நம் பெயர்தான், நமக்கு மட்டும்தான்!
CalmCare
KalmCare
ComeCare
CameCare
CompoCare
CombCare
.
.
.
முப்பது வருட உழைப்புக்கான சான்றை ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்டுக்காக கொடுக்க வேண்டி இருந்ததால் அதற்கான ஆவணங்களை தொகுத்து டாக்குமெண்ட்டாக தயாரித்துக் கொடுக்க பழைய ஃபைல்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எங்கள் நிறுவனப் பெயரில் எப்படி எப்படி எல்லாம் (ஸ்பெல்லிங்கை) பிழைகள் செய்து தப்பும் தவறுமாக எழுதி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. போலவே, எத்தனை செக்குகளில் அதே தவறு?
முதலில் தவறான ஸ்பெல்லிங்குடன் கடிதம் / செக். பிறகு எங்கள் நிறுவனப் பெயரை சரி செய்து திரும்ப மறுகடிதம் / செக் அனுப்பச் சொல்லி போராடி பெற்ற கடிதம் /செக், என பெரும்பாலான கடிதங்களிலும் / செக்குகளிலும் இரண்டு இரண்டு காப்பிகள்.
இப்போது அண்மையில் ஓட்டல்களில் சாப்பாடு Combo Offer என கொடுப்பதைப் போல ComboCare என்று பெயரிட்ட கடிதம் கொரியரிலும் இமெயிலிலும். என் இமெயில் முகவரியைப் பார்த்தாலாவது நிறுவனப்பெயரை சரியாக பிழை இல்லாமல் எழுதும் நுண்ணறிவு (!) இல்லாத பணியாளர்கள். எனக்கு எரிச்சலுக்கும் கோபத்துக்கும் பதிலாக அங்கலாய்ப்பு மட்டுமே. வேறென்ன செய்ய?
நானும் அலுக்காமல் சளைக்காமல் பொறுமையாக எடுத்துச் சொல்லி பெயரை சரியாக டைப் செய்து கடிதத்தை திரும்பவும் அனுப்பச் சொல்லி மொபைலை ஆஃப் செய்த அடுத்த நொடி இந்தப் பதிவை எழுதினேன். இதைப் படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும் என்ற நல்லெண்ணம் மட்டுமே.
எதில் வேண்டுமானால் எழுத்துப் பிழையுடன் எழுதலாம். நம் பெயரிலும், நிறுவனப் பெயரிலும் பிழை இருந்தால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவதில்லை. மேலும் இது வணிக ரீதியாக எத்தனை குழப்பங்களை உண்டாக்கும் என சம்மந்தப்பட்டவர்களுக்குப் புரிவதில்லை.
ஒரு P தானே மேடம் விடுபட்டிருக்கு, அதனால் என்ன? ஒரு U தானே சேர்ந்திருக்கு அதனால் என்ன?
நாம் வேண்டுமானால் ‘அதனால் என்ன?’ என உதறித்தள்ளிவிட்டுச் செல்லலாம். ஆனால் அதே ஆவணத்தை வைத்து ஏதேனும் அரசு அல்லது வங்கிப் பரிவர்த்தனை அல்லது சட்ட ரீதியான பணிகளுக்கு அணுகும்போது அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையே. அதையெல்லாம் அவர்களுக்குப் புரியவைத்து பெயரை சரியாக டைப் செய்து திரும்பவும் கடிதங்களை அனுப்பச் சொல்வதற்குள் ஜென் மனநிலைக்கு வந்திருப்பேன்.
நிறுவனப் பெயரைப் பார்த்து புரிந்துகொண்டு அல்லது கேட்டு தெளிவு பெற்று கடிதமோ, செக்கோ, டிடியோ அல்லது டாக்குமெண்ட்டோ தயாரிப்பதில் என்ன சிரமம் பணி புரிபவர்களுக்கு என்று தெரியவில்லை.
அலுவலகக் கடிதங்கள் என்றல்ல, என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில், எனக்கு விருதளிக்கும் ஷீல்டுகளில், பாராட்டு சான்றிதழ்களில் என எங்கும் எதிலும் எழுத்துப் பிழைகள்தான். அதுவும் என் பெயரிலும், எங்கள் நிறுவனப் பெயரிலும்.
அதிலும் இப்போதெல்லாம் டிஜிட்டல் உலகில் ஒரு முறை ஒரு பெயரோ அல்லது செய்தியோ பிழையாக வெளிவந்தால், பின்னாளில் அது சரி செய்யப்பட்டாலும், பிழையான தகவல் டிஜிட்டல் உலகில் எங்கேனும் ஒரு மூலையில் ஒளிந்து வசித்துக்கொண்டே இருக்கும். அதை அப்படியே பிடித்துக்கொண்டு பலரும் அதையே காப்பி செய்துவிடுகிறார்கள். வேண்டுமென்றே செய்ய வேண்டும் என்பதில்லை, அது சரியானதா, தவறானதா என ஆராய யாருக்கும் இங்கு நேரமெல்லாம் கிடையாது. ஆக, ஒரு பிழை நூறு பிழைகளுக்கு காரணமாகிறது.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் மிக சமீபத்தில் நான் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான யு-டியூப் வீடியோவில் என் பெயருக்கு பதிலாக வேறு நபரின் பெயரையே போட்டு அதை மாற்றச் சொல்லி நான் பட்டபாடு?
போன ஜென்மத்தில் நான் யார் பெயரையோ நன்றாக ‘வைத்து’ செய்திருக்கிறேன், அதனால் தான் இந்த ஜென்மத்தில் என் பெயரும் என் நிறுவனப் பெயரும் இந்த பாடுபடுகிறது என தமாஷாக நினைத்துக்கொள்வேன்.
இப்போதெல்லாம் என் பெயரிலோ அல்லது நிறுவனப்பெயரிலோ எந்த குழப்பமும் இல்லாமல் சரியாக டைப் செய்யப்பட்டு அனுப்பப்படும் இமெயில்களையும், கடிதங்களையும், அழைப்பிதழ்களையும் பார்க்கும்போது ‘நனவா, கனவா’ என என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன் அல்லது ‘இது நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கா?’ என எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.
பெயரில் என்ன இருக்கிறது என்பார் பலர். பெயரில்தான் எல்லாமே இருக்கிறது என்பேன் நான்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 20, 2022 | வியாழன்