‘என்னவோ போங்க!’
கும்பகோணத்தை அடுத்த சிறு ஊரில் வசிக்கும் எங்கள் உறவினரின் மகள் அவர் படிக்கும் கல்லூரியில் நடந்த காம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலையில் சேர இருக்கிறார். பொருளாதாரத்தில் ஆஹா ஓஹோ கிடையாது. ஆனாலும் பிள்ளைகள் இருவரையும் நன்றாக படிக்க வைத்துவிட்டார்கள். ஒரு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு.
வாழ்த்துகள் என ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லாமல் ‘படித்தவுடன் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேரும் வாய்ப்பு கிடைத்தமைக்கு வாழ்த்துகள். நன்றாக படித்திருக்கிறாய்…’ என வாழ்த்தினேன்.
இளைஞர்களுடன் நட்பாவது அத்தனை ஒன்றும் கடினம் கிடையாது. அவர்கள் செயலை ஊக்கப்படுத்த இப்படி சின்ன சின்ன வார்த்தைக் கோர்வைகளால் வஞ்சப் புகழ்ச்சி இன்றி மனதார பாராட்டினாலே போதும்.
நான் பாராட்டியவுடன் அந்த பெண் முகம் மலர்ந்து அவள் கல்லூரியில் நடந்த நேர்காணலை விவரித்தாள். எல்லா தேர்வுகளிலும் படிப்படியாக வெற்றி பெற்று குழு விவாதம் வந்தபோது திணறிவிட்டதாகவும், இரண்டு மணி நேரம் ஐந்து தேர்வாளர்கள் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டார்கள் என்றும், ஏசி அறையிலும் வியர்வை கொட்டியபடி இருந்ததாகவும் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
‘சூப்பர்… அப்படி துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்டிருந்தாலும் நீ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாய் எனில் உண்மையில் நீ புத்திசாலிதான்…’
‘நான் செல்கட் ஆவேன்னு நினைக்கலே…’ என்றாள் சிரித்தபடி.
‘அப்படியா?’
‘ஆமாம். மற்றவர்கள் இன்னும் பயந்து பயந்து மோசமாக பேசியிருக்கிறார்கள் போல… அதனால நான் பேசியது நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்… என்னை விட அவர்கள் நன்றாக படிப்பார்கள்…’ என்றாலே பார்க்கலாம். நானோ அவள் பேசிய வார்த்தைகளின் அழகில் வியப்பின் உச்சியில்.
இன்றைய இளைஞர்களில் இப்படி விகல்பமில்லாமல் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களையாவது தக்க வைத்துக்கொள்வது நம் கடமை. விட்டு விடக் கூடாது. எதிர்கால நம்பிக்கையின் நல்விதைகள் இவர்கள்.
‘என்னவோ போங்க, இன்றைய இளைஞர்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ள முடிவதில்லை… கொஞ்சம் கூட பொறுப்பில்ல’ என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்.
என்னவோ 30+, 40+, 50+, 60+ வயதினர் ‘எல்லோருமே’ பொறுப்பாகவும் பண்பாகவும் ஒழுங்காகவும் நடந்துகொள்வதைப் போல நினைத்து நன்றாக வளர்ந்து வரும் இளைஞர்களையும் இப்படி விட்டேத்தியாக பேசிப்பேசி கசக்கி தூர எறிந்துவிட வேண்டாம்.
அப்படி செய்தால் எதிர்காலத்தில் நல்மரமாக வளரத் தேவையான நல்விதைகளை நாம் தொலைத்துவிட்டு நிற்போம். கவனம்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 25, 2022 | செவ்வாய்