குற்ற உணர்ச்சியைத் தூண்டாதீர்!

குற்ற உணர்ச்சியைத் தூண்டாதீர்!

எனக்குத் தெரிந்து அறக்கட்டளை நடத்தி வரும் ஒரு பெண் வருடா வருடம் பிரமாண்டமாக தங்கள் அறக்கட்டளை ஆண்டு விழாவை பிரமாண்டமான அரங்குகளை எடுத்து நடத்துவார்.

அரங்கிற்கே லட்சத்தில் முக்கால் பங்கு கட்டணம் ஆகும், தவிர உணவு, விளம்பரம், போட்டோ வீடியோ அது இது என எப்படியும் சில லட்சங்கள் செலவு பிடிக்கும். எல்லாவற்றுக்கும் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்யும் அவர், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும், அரங்கை சுத்தம் செய்பவர்களுக்கும், பணிப்பெண்களுக்கும் கட்டணம் கொடுக்கும்போது மட்டும் ‘நாங்களே ஏழைக் குழந்தைகளுக்கு உதவறோம். கொஞ்சம் குறைச்சுக்கோங்க…’ என கையை பின்னுக்கு இழுத்துக்கொள்வார்.

இதையே அரங்கிற்கான கட்டணத்தை வாயை மூடிக்கொண்டு கட்டிவிட்டு வருவார். போட்டோ வீடியோ என அனைவருக்கும் மிகப் பெருமையாக பணத்தை எடுத்து வீசுவார்.

அவர் யாரிடம் பணத்துக்கு கொசறுகிறாரோ அவர்கள் குற்ற உணர்ச்சியுடன் ‘சரிம்மா, கொடுக்கிறதைக் கொடுங்க…’ என்று வாங்கிச் செல்வார்கள். அப்படி வாங்கிச் செல்பவர்களிடம் ஒருமுறை நான் பேசி இருக்கிறேன். ‘என்னம்மா செய்யறது. அவங்களே ஏழைக் குழந்தைக்கன்னு சொல்றாங்க… கொடுங்க கொடுங்கன்னு கறாரா எப்படி அடிச்சுக் கேட்கிறது. குற்ற உணர்ச்சியா இருக்குல்ல…’ என்ற அவர்கள் பதிலில் உறைந்தேன்.

ஆம். மற்றவர்கள் குற்ற உணர்ச்சியைத் தூண்டி அதிலும் குளிர் காய்ந்து சேவை(?) செய்து பெருமை(!) சேர்த்துக்கொள்பவர்களை ஒரு துளியும் மதிப்பதற்கு மனம் வருவதில்லை.

ஒரு விஷயத்தை இதில் கவனிக்க வேண்டும். யாருக்கு குற்ற உணர்ச்சியை தூண்ட முடியும் என்பதும் அவர்களுக்குக் கைவந்த கலை. வியாபாரம் செய்பவர்களிடம் அவர்களின் பேரம் செல்லுபடி ஆகாததால் அவர்கள் கைக்கு அகப்படும் ஜீவன்களிடம் மட்டும் பாவமான முகத்தை வைத்துக்கொண்டு ’ஐயா சாமி… அம்மா சாமி…’ என கேட்கிறார்கள். இங்கு ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனியுங்கள். நான் சொல்ல வந்ததை வெகு நாகரிகாமாக சொல்லி இருக்கிறேன்.

எங்களிடமே அவர்கள் டிஜிட்டல் பணிக்காக அணுகியபோது ‘நாங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு…’ என்று ஆரம்பிக்க நான் சொன்ன பதிலால் அவர்கள் வாயைத் திறக்காமல் கட்டணம் செலுத்தி வேலையை முடித்துக்கொண்டு சென்றார்கள்.

நான் அப்படி என்ன பதில் சொன்னேன்?

‘நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அறக்கட்டளை வைத்திருக்கிறோம். நீங்கள் ஏழை குழந்தைகளுக்காக வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுங்கள். நாங்கள் உங்கள் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கிறோம்…’

சேவை செய்பவர்கள் தங்களால் முடிந்தால் செய்ய வேண்டும். அதைவிட்டு ஏழைகளுக்கு உதவுவதற்காக ஏழைகளின் உழைப்பையே சுரண்டக் கூடாது. குறிப்பாக சுரண்டுவதற்கு அவர்களிடம் குற்ற உணர்வை உண்டாக்கக் கூடாது.

நன்றி

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 11, 2022 | வெள்ளி

(Visited 794 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon