100-ஐ நெருங்கும் புத்தகங்கள், பார்வையற்றோருக்கும் சாஃப்ட்வேர்!
நேர்காணல் செய்தவர்: பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்
கம்ப்யூட்டரில் முதுநிலை பட்டமும், எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர். காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர். பிராஜெக்ட்டுக்காகப் பலமுறை அமெரிக்கா சென்று வந்தவர். தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாகவும் விளங்குகிறார். முன்னணிப் பத்திரிகை ஒன்றில், ஆசிரியரின் ‘கம்ப்யூட்டர் ரெசிப்பி’ நூல் விமர்சனத்தில் இவரின் 80-வது புத்தகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரை சந்தித்தோம்.
உங்கள் பூர்வீகம், பெற்றோர் பற்றி…
நான் பிறந்தது கும்பகோணம். அப்பாவின் பூர்வீகம் மயிலாடுதுறை. அம்மாவின் பூர்வீகம் செஞ்சி. அப்பா திரு. வி.கிருஷ்ணமூர்த்தி, அம்மா திருமதி. கே. பத்மாவதி இருவருமே தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்ததால் பணி இட மாற்றல் காரணமாக மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விருதாச்சலம், சீர்காழி, திருவாரூர், திருச்சி எனப் பல்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிர்பந்தம். எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. இருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிகிறார்கள்
12 வயதில் நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதை கோகுலம் இதழில் வெளியானது. இதன் பிறகு நிறைய எழுத ஆரம்பித்தேன். பல முன்னணிப் பத்திரிகைகளில் என் படைப்புகள் வெளிவந்ததோடு விருதுகளையும் பெற்றுத் தந்தது.
எப்படி பிசினஸுக்கு வந்தீர்கள்?
1992-ம் ஆண்டு M.Sc., முடித்த பின்னர் ‘நாமே ஏன் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கக் கூடாது?’ என்ற எண்ணம் எழ பெற்றோர் ஆதரவோடு ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் என் நிறுவனம் பிறந்தது.
வங்கிகள், பள்ளிகள், மளிகைக்கடை, மெடிகல்ஷாப் என நம்மைச் சுற்றியுள்ள நிறுவனங்களுக்காக சாஃப்ட்வேர் தயாரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். தேவைப்படுபவர்களுக்கு தமிழிலும் அவை இயங்குமாறு வடிவமைத்துக்கொடுக்க ஆரம்பித்தோம்.
ஆங்கிலத்தில் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைத் தமிழிலும் கொண்டுவந்தபோது அமோக வரவேற்பு கிட்டியது.
‘தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்’ – இது தமிழில் வெளியான என் முதல் தொழில்நுட்பப் புத்தகம். ‘An Easy Way to Learn C Language’ – என் முதல் ஆங்கிலத் தொழில்நுட்பப் புத்தகம். அப்போது என் வயது 25.
இன்று, என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்கள் வடிவமைத்தல், ஆவணப் படங்கள் வெளியிடுதல், புத்தக வடிவமைப்பு என நான்கு துறைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு துறை மூலமும் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை, புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகிறேன்.
கம்ப்யூட்டர் ரெசிப்பி – தலைப்பே புதுமையாக உள்ளதே? அது குறித்து சொல்லுங்களேன்.
உங்கள் முன் உள்ள ஒரு கம்ப்யூட்டருடன், நான் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டால்போதும். புத்தகத்தில் படங்களுடன் நான் வழிகாட்டியபடி கம்ப்யூட்டரில் செய்துபார்த்துக்கொண்டே வரலாம். ஆசிரியர் இல்லாமலேயே எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் மாஸ்ட்டராகிவிடலாம். ஏராளமான விளக்கப்படங்களுடன், செயல்முறை வழிகாட்டுதல்களோடு மல்டிமீடியா புத்தகம் போல எழுதுவதே என் எழுத்தின் அடையாளம்.
கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டுமென்றாலே தமிழிலும், ஆங்கிலத்திலும் டைப் செய்யவும், சின்ன சின்ன கணக்குகள் மற்றும் அட்டவணை போடவும், பிரசன்டேஷன்களை வடிவமைக்கவும் தெரிந்திருப்பது அவசியம். அடுத்து, இன்டர்நெட்டில் கூகுளில் தேவையானதைத் தேடவும், இமெயில் அனுப்பவும், ஆன்லைனில் அனைத்துவிதமான கட்டணங்களையும் கட்டவும் தெரிந்திருக்க வேண்டும். இதைத்தவிர ஃபேஸ்புக், டிவிட்டர், யு-டியூப், பிளாக், சவுண்ட் கிளவுட் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி நம் திறமைகளை உலகம் முழுக்க பரைசாற்ற கற்றுக்கொண்டு விட்டால் தொழில்நுட்ப உலகில் நாம் அனைவருமே முடிசூடா மன்னர்தான்.
உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?
என் நிறுவன சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும், ஆவணப்படங்களும் நான் எழுதிய புத்தகங்களும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ளன. தமிழகமெங்கும் உள்ள அனைத்து நூலகங்களிலும் நான் எழுதிய புத்தகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் இலங்கை, சவுதி, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் இருந்து என் புத்தகங்களைப் படித்து பயன்பெற்ற வாசகர்கள் என்னைத் தொடர்புகொண்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்போது அவை எனக்கு உற்சாக டானிக்காக அமைகின்றன.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தாங்களாகவே கம்ப்யூட்டரில் டைப் செய்து தேர்வை எழுத உதவும் ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ தயாரித்து ட்ரையல் வெர்ஷன் வெளியிட்டுள்ளோம். அடுத்த கல்வி ஆண்டில் அவர்கள் இந்த சாஃப்ட்வேர் மூலம் தாங்களாகவே தேர்வை எழுதலாம்.
எத்தனை நூல்கள் எழுதி உள்ளீர்கள்?
ஜூன் மாதம் நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கும் புத்தகங்களோடு சேர்த்து புத்தகங்களின் எண்ணிக்கை 100-த் தொட உள்ளது.
இதைச் சொல்லும்போதுகூட அவர் குரலில் ஒருதுளியும் கர்வமோ, அகம்பாவமோ இல்லை. புறப்படும் முன்னர், You are not only an Entrepreneur, But also Anthropologist என்று பாராட்டியபோது தன்னம்பிக்கையோடு புன்னகைத்தார்.
– பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன்