ஏவிசி கல்லூரியின் வைரவிழா (Diamond Jubilee) நிகழ்ச்சி 28-03-2016 அன்று நடைபெற்றது. கல்லூரி வளாகமே பரவசத்தோடு விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களில் 7 நபர்களைத் தேர்ந்தெடுத்து கெளரவித்தார்கள். அதில் காம்கேர் கே. புவனேஸ்வரியும் ஓர் அங்கம். ஏவிசி கல்லூரியில் 1990-1992 எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு Outstanding Alumni Award அளித்து பெருமைப்படுத்தினார்கள்.
மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரின் வைரவிழாவில் என் நினைவலைகள்!
என்னுடைய அம்மா இப்போது யு.எஸ் சென்றிருப்பதால், நானும் அப்பாவும் விழாவிற்கு சென்றிருந்தோம். எங்களுக்குக் கிடைத்த வரவேற்பும், விருந்தோம்பலும் எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திப் பரவசமடையச் செய்தது. விழா அமைப்பாளர்களுக்கும், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அப்பா, அம்மா இருவருக்கும் தொலைபேசித் துறையில் பணி. அப்பாவின் பூர்வீகம் மயிலாடுதுறையாக இருந்தாலும், பணியிடமாற்றல் காரணமாக கும்பகோணம், திருவாரூர், சீர்காழி, கடலூர், விருதாச்சலம், திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் வசிக்கின்ற சூழல். எந்த ஊரில் வசிக்கிறோமோ அந்த ஊரே பிடித்த ஊர் என்றானது. ஒழுக்கத்துக்கும், தரத்துக்கும் பெயர்போன ஏ.வி.சி. கல்லூரியில், எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் (1990-1992) சேர்ந்தேன். 26 மாணவர்கள் உள்ள வகுப்பில் என்னையும் சேர்த்து 5 மாணவிகள்தான்.
அப்போது அக்கல்லூரியில் திரு.பாலசுப்ரமணியன் என்பவர் பிரின்சிபாலாக இருந்தார். கம்பீரமான தோற்றம். கண்ணியமான பார்வை. பார்ப்போரைப் பணிய வைக்கும் பண்பாளர்.
எனவே, ஆண், பெண் இருபாலரும் படிக்கின்ற அந்தக் கல்லூரியில் அவர் பிரின்சிபாலாக இருந்த காலகட்டங்களில் ஒழுக்கமும், சுயகட்டுப்பாடும், கண்ணியமும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே இருந்தன. ஸ்ட்ரைக் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே தெரியாத அளவுக்கு மாணவர்களை நெறிபடுத்தினார். நிர்வாகம் செய்வதை அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு அவரின் ஆளுமை இருந்தது.
மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மன்னம்பந்தலில் அமைந்துள்ள நான் அந்தக் கல்லூரியில் படித்த 2 வருடங்களும் சைக்கிளில் தான் செல்வேன். கிராமியச் சூழலில், மரங்கள் அடர்ந்த அழகான அமைதியான தார் சாலையில் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்று வருவதே நல்ல உடற்பயிற்சி செய்வதைப் போல இருக்கும். உடலும், உள்ளமும் லேசாகி, மிதப்பதைப் போல பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன். சைக்கிள் கல்லூரியின் நுழைந்தவுடன் கல்லூரியின் அமைதியான சூழல் என மனதுக்கும் அமைதி கொடுத்து, வந்த களைப்பே தெரியா வண்ணம் படிப்பில் நாட்டம் செலுத்த முடிந்தது.
இந்தச் சூழலில் மாணவர்கள் மத்தியில் ஒரு நாளும் எந்த ஒரு சிறு கமெண்ட்டையும் என் காதுபட கேட்டதில்லை. அத்தனை ஒழுக்கமான சீரான நிர்வாகம் அந்தக் கல்லூரியில்.
‘மன்னன் எவ்வழியோ அவ்வழியில் தானே மக்களும்’ என்ற கூற்றுக்குச் சான்றே எங்கள் பிரின்சிபால் தான். தன் மாணவ, மாணவிகள் எப்படி இருக்க வேண்டும் நினைத்தாரோ, அப்படியே தானும் வாழ்ந்து காட்டினார். அது தான் அவரது வெற்றிக்குக் காரணம்.
இந்தக் கல்லூரியின் வைரவிழா (Diamond Jubilee) நிகழ்ச்சி 28-03-2016 அன்று நடைபெற்றது. கல்லூரி வளாகமே பரவசத்தோடு விழாக்கோலம் பூண்டிருந்தது. பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களில் 7 நபர்களைத் தேர்ந்தெடுத்து கெளரவித்தார்கள். அதில் நானும் ஒரு அங்கம்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசித்துவரும் ஏ.வி.சி. கல்லூரி மாணவர்களின் பார்வைக்காக புகைப்படங்களை இணைத்துள்ளேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
மார்ச் 28, 2016