புத்தகமே அழைப்பிதழாகவும், நன்றிக் கடிதமாகவும்…
பெற்ற குழந்தைகள் வெளியிட, பேரக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வித்தியாசமான புத்தக வெளியீடு…
விஜயபாரதம் பத்திரிகை வடிவிலேயே வாசிக்க: Appa Amma BOOK Review
ஜூலை மாதத்தின் முதல் நாள், நங்கைநல்லூர் கணேஷ் மண்டலியில் பீமரத சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 70-வது வயது தொடக்கத்தை ஸ்ரீபீமரத சாந்தியாக பெற்ற பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் இணைந்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். அப்படித்தான் அந்த தம்பதிகள் பிள்ளைகளோடும், பேரக் குழந்தைகளோடும் இணைந்து மகிழ்ந்திருந்தார்கள். இதில் என்ன அதிசயம் என்று வியக்கிறீர்களா?
அன்றைய நிகழ்வில், குழந்தைகள் விரும்புகின்ற நல்ல பெற்றோர்களாகத் திகழ்வது எப்படி என்ற கான்செப்ட்டின் அடிப்படையில் அந்த தம்பதிகளின் பிள்ளைகள் மூவரும் இணைந்து தங்கள் அப்பா, அம்மா தங்களை வளர்த்த விதத்தை ‘அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு…’என்ற புத்தகமாகத் தயாரித்து, இன்றைய இளம் தலைமுறை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டார்கள். அது, பெற்ற குழந்தைகள் வெளியிட பேரக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வித்தியாசமான குடும்பப் புத்தகம் (Family Book) வெளியிடப்பட்டு, புதுமையான புத்தக வெளியீடாக அமைந்தது.
அப்புத்தகத்தில் அழைப்பிதழ் மற்றும் நன்றி கடிதத்தை பிரின்ட் செய்து, மல்டிமீடியா அனிமேஷன் மூலம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரின் கண்களுக்கும் விருந்தளித்தார்கள், பரிசளித்தார்கள்.
மேலும் அவர்கள் அப்பா, அம்மா அவர்களை வளர்த்த விதத்தை 1-1/2 மணி நேரம் ஓடக் கூடிய ‘அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு…’என்ற ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டார்கள். https://youtu.be/k0CFnRpqjnk
வாழும் காலத்தில் பெற்றோர்களை மதித்து அவர்கள் நமக்காக செய்த அத்தனை தியாகங்களையும் உற்றார் உறவினர் கூடி இருக்கும் அரங்கில் அவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக அந்நிகழ்ச்சி அமைந்தது, அனைவரையும் மனம் கரையச் செய்தது.
தவிர, ஒவ்வொரு வீட்டிலும் இதுபோல ஒரு ‘குடும்பப் புத்தகம்’ (Family Book) இருக்க வேண்டும் என்பதையும் அந்நிகழ்ச்சியின் மூலம் இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொண்டார்கள் என்பதை ‘இப்படி நாமும் நம் அப்பா, அம்மாவைப் பற்றி எழுதணும்’ என்று இளைஞர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக் கொண்டதில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது. மாற்றத்தை உண்டாக்க நாம்தான் முதலில் முயல வேண்டும் என்பதற்கு பெற்றோர்களுக்காக இப்புத்தகத்தை எழுதி, பப்ளிஷ் செய்த காம்கேர் புவனேஸ்வரி முன்னுதாரணம் ஆவார்.