சக்தி T.K. கிருஷ்ணசாமி விருது – சைதை மகாத்மா காந்தி நூலக நிலையம் (October 9, 2016)

சக்தி T.K. கிருஷ்ணசாமி விருது – பாரதி கண்ட புதுமைப் பெண் – சைதை மகாத்மா காந்தி நூல் நிலையம்

சைதை மகாத்மா காந்தி நூல் நிலையம், மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 64 ஆம் ஆண்டு நூலக விழாவில் 09.10.2016 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு  ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்ற தலைப்பில் சக்தி T.K. கிருஷ்ணசாமி விருது அளித்து கெளரவப்படுத்தினார்கள்! 

நடமாடும் நூலகத்துக்கு 86 வயது!

மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எழுத்துலகச் சிற்பிகளுக்கு விருது கொடுக்க இருப்பதாகவும், அதற்கு

என்னையும் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் மகாத்மா காந்தி நூலகம் சார்பாக திரு. பரமசிவம் என்பவர் போன் செய்தார். அவர் விஜயபாரதத்தில் பணியாற்றியபோது என்னை நன்கறிந்தவர்.

அவர் என்னைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்கச் சொன்னார். இமெயில் முகவரி கேட்டபோது  ‘இமெயில் முகவரி இல்லை, கொரியரில் அனுப்பி வையுங்கள்’ என்று சொன்னார்.

அடுத்த நாள் திரும்பவும் போன் அழைப்பு. ‘எங்கள் லைப்ரரியை நடத்தும் பெரியவருக்கு வயது 86. அவர் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்கிறார்’ என்றவுடன் மகிழ்ச்சியுடன் வரச்சொன்னேன்.

எதற்காக வருகிறார்… என்னை நேரில் சந்தித்து நான் எழுதியுள்ள புத்தகங்களைப் பார்வையிட வருகிறாரோ… என் நிறுவனத்தை நேரில் பார்ப்பதற்காக வருகிறாரோ என்று ஏதேதோ நினைவலைகள்.

என் எதிரில் வெள்ளை வேட்டி, சட்டையில் வந்தமர்ந்த அந்தப் பெரியவர் எனக்கு வணக்கம் சொன்னதோடு சரி. என்னை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. என் நிறுவனத்தையும் சுற்றிப் பார்க்கவில்லை.

தான் கொண்டு வந்திருந்த  மஞ்சள் பையில் வைத்திருந்த தன்னைப் பற்றியக் குறிப்புகளை எடுத்து என்னிடம் கொடுத்து தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

அவர் ஒரு டெய்லர். தனக்கு 3 ஆண் பிள்ளைகள். மனைவி இறந்து விட்டார். மகாத்மா காந்தி மீதுகொண்ட தீராத பற்றின் காரணமாக 1952 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சைதாப்பேட்டையில் சிறிய நூலகம் ஒன்றை ஆரம்பித்தார். அந்த சிறிய நூலகத்திலேயே தையல் இயந்திரத்தைப் போட்டு தைத்துக்கொண்டே நூலகத்தையும் கவனித்து வந்தார். தையல் பணி மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். அவர் மகன்களின் படிப்பில் திரு. காந்திகண்ணதாசன் அவர்களுக்கும் பெரும்பங்குண்டு.

இந்த நூலகம் ஆரம்பித்து 64 வது ஆண்டு விழாவை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 9-ஆம் தேதி நடத்த இருப்பதாகவும், அதில் என்னையும் சேர்த்து 10 பேருக்கு விருது கொடுப்பதாகவும், 64 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கேஷ் அவார்ட் கொடுக்க இருப்பதாகவும் சொன்னார்.

மேலும், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி அவர்கள் விருது வழங்குவார். நூலகம் அமைந்துள்ள சாலையிலேயே மேடை அமைத்து விழா நடைபெறும் என்றார்.

‘நீங்கள் வெளிநாடெல்லாம் சென்று வந்திருக்கிறீர்கள். பெரிய கம்பெனி வைத்திருக்கிறீர்கள். உங்களால் சாலையில் மேடை அமைத்து நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள இயலுமா, இதைக் கேட்கவே நான் நேரில் வந்தேன்…’ என்றார்.

வயது வித்தியாசம் பார்க்காமல் பிறரை மதிக்கும் அவருடைய குணம்,  வயது, சர்வீஸ் போன்றவற்றுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மகிழ்ச்சியுடன் சரி என்றேன்.

நூலகத்தை குழந்தைக்கு அலங்காரம் செய்ததைப்போல அலங்கரித்திருந்தார். விழா மேடை முதற்கொண்டு விருது மற்றும் இதர செலவுகளுக்கு அவரை அறிந்த நண்பர்கள் ஸ்பான்சர் செய்திருந்தார்கள்.

டிபன் காப்பிக்கு ‘கெளரி ஓட்டல்’ ஸ்பான்ஸர் செய்திருந்தார்கள்.

தள்ளாடும் வயதில் வீட்டில் ஓய்ந்து உட்காராமல் புத்தகங்களையும், நூலகத்தையும், மனிதர்களையும் நேசிக்கும் இந்தப் பெரியவர் திரு. கு. மகாலிங்கம் அவர்களின் சேவைக்கு ஒரு பெரிய சல்யூட்.

அவர் கைகளால் எனக்களித்த  ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ என்ற பெயரில் சக்தி T.K. கிருஷ்ணசாமி விருது கம்பீரமாய் என் கண் முன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 9, 2016

(Visited 5,019 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon