பிறந்ததின் நோக்கம் என்ன?

பிறந்ததின் நோக்கம்!

இந்த ஆண்டு என்ன செய்தோம் என்றெல்லாம் என்றுமே நான் திரும்பிப் பார்ப்பதில்லை. காரணம் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ‘நாம் பிறந்ததன் குறிக்கோள் என்ன?’ என்று பொருள்படும் வகையில் வெவ்வேறு கேள்விகள் என் மனதில் தோன்றும் என்பதால் நினைத்துக் கொள்ளும் நேரத்தில் எல்லாம் என் பாதையை திரும்பி பார்த்துக் கொள்வதுண்டு. எனவே கணக்கை அவ்வப்பொழுது பைசல் செய்து விடுவதால் மொத்தமாக ஆண்டு முடிவு என்ற கணக்கில் எல்லாம் பெரிய அளவில் யோசிப்பதில்லை.

இன்று நான் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்த பிறகு ஒரு போன் அழைப்பு.

தான் ஒரு ஆசிரியர் எனவும், சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக பெரம்பூரில் ஒரு பள்ளியில் நிகழ்ச்சி நடத்தியதையும் நினைவு கூர்ந்து, தான் அந்தப் பள்ளி ஆசிரியை என அறிமுகம் செய்துகொண்டார்.

நான் புரிந்துகொண்டதும் ‘என் மகனை அழைத்து வந்திருக்கிறேன் மேடம். உங்கள் அலுவலகம் முன்தான் நின்று கொண்டிருக்கிறோம். உங்களிடம் பேச வேண்டும்’ என்றார் பதட்டமாக.

‘அப்படியா, அச்சச்சோ நான் அலுவலகத்தில் இல்லையே… நாளை ஆங்கிலப் புத்தாண்டு என்பதால் அலுவலகத்திலும் எல்லோரும் சீக்கிரமே கிளம்பி விட்டார்களே…’ என்றேன்.

’சரி, என்ன பேச வேண்டும்?’

‘என் மகன் பி.ஈ முடித்துவிட்டு ஹெச்.சி.எல்லில் தேர்வாகி விட்டான். ஆனால் வேலைக்கு சென்று சேர மறுக்கிறான்…’

‘ஏனாம்? அவரவர்களுக்கு படித்துமுடித்தவுடன் வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் சூழலில் என்ன வேண்டுமாம் உங்கள் மகனுக்கு…’

‘அவன் நண்பர்கள் எல்லாம் ஐடியில் வேலை ரொம்ப கஷ்டம், இரவு ஷிஃப்ட் எல்லாம் வரும், பிழிந்து எடுத்துவிடுவார்கள் என்று சொல்கிறார்களாம். அதனால் இவன் வேலையில் சேர மாட்டேன் என்கிறான்…’ என்றார் நா தழுதழுக்க. கொஞ்சம் விட்டால் அழ ஆரம்பித்துவிடுவார் போல.

நான் கொஞ்சம் யோசித்துக்கொண்டிருக்கும் இடைவெளியில் ‘என்னால் முடியலை மேடம் அவனுடன் மல்லுகட்ட, பேசி பேசி எனக்கு பயித்தியமே பிடிச்சுடும் போல இருக்கு… அதனால் நீங்கள் கொஞ்சம் அறிவுரை சொன்னால் கேட்பான் என்றுதான் அழைத்து வந்தேன்…’ என்று வேதனையுடன் சொன்னார்.

‘சரி, என்னிடம் போனில் அப்பாயின்மெண்ட் வாங்காமல் பெரம்பூரில் இருந்து இத்தனை தூரம் ஏன் வந்தீர்கள்… இப்போது பாருங்கள் என்னை பார்க்க முடியாமல் திரும்பப் போகப் போகிறீர்கள்…’

‘சரி மேடம் நீங்கள் ஒருநாள் சொல்லுங்கள், வருகிறோம்…’ என்றார்.

‘நேரில் தான் வர வேண்டும் என்பதில்லை. போனிலேயே நான் உங்கள் மகனிடம் பேசுகிறேன். முடிந்த வரை எடுத்து சொல்கிறேன். பிறகு தேவைப்பட்டால் நேரில் வரலாம்..’ என்றதும் மகிழ்ந்தார். நன்றி சொல்லி விட்டு கிளம்பினார்.

இந்த வருடத்தின் கடைசி நாளின் மாலை நேரம் இப்படியாக கடந்தது.

ஒவ்வொரு தாயும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அல்லாடுவதை நினைத்துக்கொண்டே முக்கியமான வீடியோ ஒன்றை எடிட் செய்ய ஆரம்பித்தேன். பின்னணியில் ‘நாம் பிறந்ததன் பயன் என்ன?’ என்ற என் கேள்விக்கான விடையும் கிடைத்தது.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். Welcome 2023!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 31, 2022 | சனிக்கிழமை

(Visited 4,812 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon