மங்கும் மனிதமும், ஏங்கும் மனிதர்களும்!
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள், அதாவது சென்ற வருடத்தின் கடைசி நாளன்று, என் அப்பாவும் அம்மாவும் புது செடி வைக்கவும் மண்ணும், உரமும் வாங்கவும் எங்கள் பகுதியில் பல வருடங்களாக இருக்கும் நர்சரிக்கு சென்றார்கள்.
அவர்களிடம் வருடத்துக்கு ஒருமுறை ஏதேனும் வாங்குவோம். ஆனாலும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு குசலம் விசாரித்தார்கள் அந்த நர்சரியை நிர்வகிக்கும் 65+ வயதிருக்கும் அந்த தம்பதியினர்.
என் அப்பா அம்மா செடி கொடிகள் பற்றியும், உரம் பற்றியும் விரிவாக பேசிய பிறகு தேவையானதை வாங்கிக்கொண்டு, எதேச்சையாக அங்கு வந்த அவர்கள் மகனிடம் பணம் கொடுக்க முற்பட்ட போது ‘அம்மா வியாபாரம் செய்தால் அவரிடம் கட்டணம் கொடுத்துவிடுங்கள்…’ என்று சொல்லி சிரித்தபடி அங்குள்ள தொட்டிகளை சரி செய்யப் போய்விட்டாராம்.
அதற்குள் அவர் அம்மா, ‘எங்களுக்குள் ஓர் ஒப்பந்தம். யார் வியாபாரம் செய்கிறோமோ, அவர்கள் கைகளால் கட்டணம் வாங்கி கல்லாப் பெட்டியில் போட்டு விடுவது…’ என்று சொல்லிவிட்டு தனக்கு இரண்டு மகன்கள் எனவும் அவர்களை பி.எச்.டி, எம்.பி.ஏ என படிக்க வைத்துள்ளதாகவும், அவர்கள் கல்லூரியில் பணிபுரிவதாகவும், வேலையில் இருந்து வந்த பிறகு நர்சரியை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தங்களைப் பற்றி விளக்கமாக சொல்லி இருக்கிறார்.
பிறகு என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. ‘எங்களுக்கு பொம்பள புள்ளையே இல்லை…’ என ஏக்கமாக சொல்லிவிட்டு என் அப்பா அம்மாவிடம் ‘உங்களுக்கு பொம்பள புள்ளைங்க இருக்குதுங்களா?’ என்றாராம்.
‘ம்… இருக்காங்க!’ என்ற போது ‘அப்படியா….’ என முகமலர்ச்சியுடன் கேட்டுவிட்டு ‘நல்லா இருங்க… கொடுத்து வச்சவங்க….’ என்று சொல்லி மண் கொத்தியை எடுத்து தோட்ட வேலை செய்ய கிளம்பியவர் என்ன நினைத்துக்கொண்டாரோ காரில் ஏறப் போன என் அப்பா அம்மாவிடம் ‘செடி கொடி வாங்கலைன்னாலும் பரவாயில்லை. அப்பப்ப வந்து போயிட்டு பேசிட்டுப் போங்க… ஆறுதலா இருக்கு…’ என்றாராம் நா தழுதழுக்க!
மனிதர்கள் மனிதத்துக்காக ஏங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. மெல்ல மெல்ல நம்மை நோக்கி நம் அருகாமையில்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 4, 2023 | புதன்