சவால் விட வேண்டாமே!
சிலர் சவால் விடுவார்கள். ‘நாங்கள் வாழ்ந்து காட்டுகிறோம்… அவர்கள் மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படும் அளவுக்கு வளர்ந்து காட்டுகிறோம்’ என்று சீறிக்கொண்டு பேசுவார்கள்.
அவர்களை பகையாய் நினைப்பவர்கள் என்றுமே அவர்கள் வளர்ச்சியைக் கொண்டாடப் போவதில்லை. அந்த வளர்ச்சிக்கும் ஏதேனும் அவதூறு சொல்லிக்கொண்டுதான் இருக்கப் போகிறார்கள்.
அவர்களை நட்பாய் நினைப்பவர்களுக்கு நிரூபணம் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. சொல்லாமலேயே புரிந்துகொள்வார்கள் அவர்கள் இயல்பை.
மற்றவர்களுக்கோ, அவர்களும் அவர்களின் செயல்பாடுகளும் புதிது.
பிறகு யாருக்கு எதற்கு ஏன் நிரூபணம் எல்லாம் செய்ய வேண்டும்?
நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம். யாருக்கும் எதற்காகவும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒரு கமிட்மெண்ட்டை மண்டைக்குள் ஏற்றிக்கொண்டால் நம் வளர்ச்சியுடன் சேர்ந்து நம்மை அறியாமல் உள்ளுக்குள் ஸ்ட்ரெஸ்ஸும் ஜோடி போட்டுக்கொண்டு வளரும்.
இழப்பும், வலியும் நமக்கு மட்டும்தான்.
சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்வது என்பது நம் பாதையில் நாம் போய்க்கொண்டே இருப்பதுதான். மற்றவர்களுக்கு நிரூபிப்பதற்காக வாழ ஆரம்பித்தால் அவர்கள் வாழ்க்கையையும் சேர்த்து நாம் சுமப்பதைப் போல்தான். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பதே பெரும் சுமைதான். அதை புரிந்துகொண்டு வாழ்பவர்களுக்கு வாழ்க்கை என்றென்றும் சுகமே!
That’s All. அவ்ளோ தான்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 26, 2022 | திங்கள்