கற்றதும், பெற்றதும், கொடுத்ததும்!
என் பெற்றோருடன் ஒரு வேலையாக வெளியில் சென்றுவிட்டு அப்படியே ஐபோனில் லேட்டஸ்ட் வெர்ஷன் வாங்குவதற்கு ஷோ ரூம் சென்றிருந்தேன்.
பில் போட்டு பணம் செலுத்தி ஐபோன் கைக்கு வந்ததும், பழைய போனில் இருந்து ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்து கொடுக்கிறேன் என சொல்லி வாங்கிய ஆப்பிள் அட்வைஸராக பணியில் இருந்த இளம் பெண், எனக்கு போனை எப்படி மியூட் போடுவது, மியூட்டை எப்படி எடுப்பது என மிக அடிப்படையான விஷயங்களை சொல்லிக் காட்ட ஆரம்பித்தார்.
கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் என சொல்லி என் பெற்றோருக்கு நாற்காலி போட்டு அமரச் சொல்லிவிட்டு, எனக்கு உதவுவதற்காக வந்தார்.
எடுத்த உடனேயே அவர் மனதை நோகடிக்க வேண்டாம் என பேசாமல் என்ன சொல்கிறார் என கேட்க ஆரம்பித்தேன்.
ஆனால், அவர் அடிப்படையை விட்டு வெளியே வரவே இல்லை. ஐபோனில் அடிப்படையான ஐகிளவுட் பற்றியெல்லாம் மூச்சு கூட விடவில்லை.
பொறுக்க முடியாமல், நானே வீட்டுக்குச் சென்று செய்துகொள்கிறேன் என சொல்லிவிட்டு புறப்பட எத்தனித்தேன்.
அப்போது அவர், ‘வீட்டில் யாராவது செய்துகொடுக்க இருக்கிறார்களா மேடம்?’ என்றார்.
உடனே தன்னிச்சையாக நானும் என் பெற்றோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு புன்னகைத்தோம்.
அந்த பணியாளருக்கு புரிந்ததோ புரியவில்லையோ தெரியவில்லை தட்டையாகப் புன்னகைத்தார்.
நான் என் போனில் இருந்து இந்த டிஸைனை எடுத்துக் காண்பித்தேன். அப்போதும் அவர் சரியாக புரிந்துகொள்ளாமல் ‘இவங்க உங்களுக்கு சொல்லித் தருவாங்களா, யார் மேடம் இவங்க…. உங்க சிஸ்டரா?’ என கேட்க என் அப்பாவும் அம்மாவும் பொறுக்க மாட்டாமல் எழுந்து வந்தனர்.
என் அம்மா ‘இந்த டிஸைனில் இருப்பது இவள் தான், She is running an IT Company’ என சொல்ல, என் அப்பா ‘200 புத்தகங்கள் டெக்னாலஜிக்காக எழுதி இருக்கா!’ என ஆமோதித்தார்.
அவர் திகைத்து நின்றார்.
அம்மாவின் ஆங்கிலத்திலா?
அப்பாவின் பூரிப்பிலா?அல்லது
என்னைப் பார்த்தா?
தெரியவில்லை. ஆனால் நான் கிளம்பிச் செல்லும்வரை அவர் திகைப்பு அடங்கவில்லை.
இந்தப் பதிவை நான் ஃபேஸ்புக்கில் எழுதிய போது அந்த இளம் பொறியாளர் மற்றவர்களை ‘உருவு கொண்டு எள்ளல் செய்கிறார்’ என்றும் ‘குறைவாக எடை போடுகிறார்’ என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் நான் அந்தக் கோணத்தில் சொல்லவில்லை. அவருக்கு விஷயமே தெரியவில்லை. அடிப்படை கூட தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளேன். சவுண்ட் ஆன், மியூட் இவற்றைத்தாண்டி வரவே இல்லை. நான் கேட்ட சில அடிப்படை விஷயங்களைக் கூட (எனக்குத் தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றேதான் கேட்டேன்) சொல்லத் தெரியவில்லை. லேட்டஸ்ட் வெர்ஷனில் இப்படித்தான், அப்படித்தான் என தவறாகவும் கூறினார்.
மேலும், கஸ்டமர் சர்வீஸில் இருப்பவர் எதிரில் இருப்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர்களுக்கு அடிப்படையில் இருந்து ஆழம் வரை எல்லாவற்றையும் ஒரு முறை சொல்ல வேண்டும்.
சரி ஐபோன் பற்றி டெக்னாலஜிதான் தெரியவில்லை, பொதுவான சூட்சுமத்திலாவது அதாவது ஒரு புகைப்படத்தில் உள்ளவருக்கும் நேரில் நிற்பவருக்கும் கூடவா ஒற்றுமை காண முடியாது அவரால்?
இத்தனைக்கும் அவர் பி.ஈ படித்துள்ளார் என்பதையும் பேச்சின் ஊடே கேட்டறிந்திருந்தேன்.
சவுண்ட் ஆன் ஆஃப் தாண்டி ஐபோனின் உச்சகட்ட தொழில்நுட்பத்தை விவரித்துக்கொண்டே சென்றிருந்தால் அவரது புலமையை கொண்டாடி இருக்கலாம். அதுதான் அவர் பணியும் கூட. ஆனால் அதை அவர் செய்யவில்லை.
கல்வியிலும், பணியிலும், பொது அறிவிலும் அவரது இம்மெச்சூரிடியை நான் கொஞ்சம் ரசித்தேன். அதனால் விரிவாக எழுதினேன்.
That’s All.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 10, 2023 | செவ்வாய்