சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக்காட்சி, இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியாகவும் விரிவடைந்துள்ளது.
பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் பதிப்பாளர்களுடன் நமது பதிப்பாளர்கள் ஒப்பந்தமிடவும் வாய்ப்பாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.
உறுதியாக ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும், அவர்களின் புத்தக வடிவமைப்புகள் நிச்சயம் பிரமிப்பை ஏற்படுத்தும். எப்படி இத்தனை உறுதியாக சொல்கிறேன் என்றால், நான் செல்லும் வெளிநாடுகளில் எல்லாம் அவர்களின் இருப்பிடம் எந்த அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த அளவுக்கு அவர்களின் புத்தகங்களும், அவற்றின் வடிவமைப்பும், காட்சிப்படுத்தலும் அந்தந்த ஊர் மக்களின் வாசிக்கும் பழக்கமும் என்னை அதிசயப்படுத்தும். அந்த அனுபவத்தை பலமுறை அனுபவித்திருப்பதால், பன்னாட்டு புத்தகக் காட்சி நிச்சயமாக பார்வையாளர்களுக்கு பிரமிப்பை உண்டாக்கும் என சொல்கிறேன்.
நான் இன்னும் செல்லவில்லை. ஆனால் என்னை அங்குப் பார்த்ததாக பலரும் சொல்கிறார்கள்.
வேறு யாரையேனும் பார்த்துவிட்டு என்னைக் கண்டதாகச் சொல்கிறார்களா?
அதுதான் இல்லை. என்னைத்தான் பார்த்திருக்கிறார்கள்.
எப்படி? இப்படித்தான்.
விகடன் பிரசுரம் ஸ்டாலுக்குச் சென்ற ஒருவர் ஒரு பக்கம் முழுவதும் என் புத்தகங்களை காட்சிப்படுத்தி இருப்பதை பிரமிப்பாகச் சொன்னார். மேலும், அதை ஒட்டி என்னிடம் பேட்டி வேண்டும் எனச் சொல்லி அதற்கான தேதியை சொல்லச் சொன்னதுடன், சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய் போல என்னைப் பாராட்டும் விதமாக அவர் மனதில் தோன்றிய ஒரு கருத்தையும் சொல்லி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். அவர் அனுமதியுடன் அவரது வாய்ஸ் மெசேஜை கொடுத்துள்ளேன். அப்படி என்னதான் சொல்லிப் பாராட்டியுள்ளார் என தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் அந்த ஆடியோவைக் கேட்கலாம்.
நான் ஒப்புதல் அளித்து, நேர்காணலும் முடிந்தாயிற்று. வீடியோ நேர்காணல். எந்த மீடியா என்று நேர்காணல் வெளியாகும்போது அறிவிக்கிறேன்.
மற்றொருவர் நியூ சென்சுரி புக் ஹவுஸில் நான் எழுதிய வாழ்வியல் நூல்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள் என்று தகவல் அனுப்பி இருந்தார்.
இரண்டு பேருமே ஊடகத்துறை சார்ந்தவர்கள்.
சூரியன் பதிப்பகத்தில் இந்த வருடம் 5 நூல்கள் வெளிவருகின்றன. அத்தனையும் வாழ்வியல் நூல்கள். இந்தப் புத்தகக் காட்சி முடிவடைவதற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என சொல்லி, ‘வாழ்க்கையின் OTP’, ’வாழ்க்கையின் அப்லோடும், டவுன்லோடும்’ என்ற இரண்டு நூல்களின் அட்டைப் படத்தை அனுப்பி இருந்தார்கள்.
நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 200-ஐத் தொட்டு விட்டாலும் ஒவ்வொரு முறையும் புதுப் புத்தகம் வெளியாகும்போது சந்தோஷமாகத் தானே உள்ளது. எங்கள் நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புகளை லைவ் ஆகும்போதும், இம்ப்ளிமெண்ட் செய்யும்போதும் எந்த அளவுக்கு மனநிறைவு கிடைக்குமோ, அதே அளவு மன நிறைவு புத்தகங்கள் வெளியாகும்போதும் உண்டாகிறது.
தேவை இருப்பவர்கள் நேரில் புத்தகக் காட்சியிலும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கொடுத்தால் அனுப்ப ஏற்பாடு செய்யலாம்.
இப்படித்தான் நான் (இன்னும்) புத்தகக் காட்சி செல்லாமலேயே, என்னைக் கண்டதாக சொல்வதன் ரகசியம்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software