உணர்வுகளை பங்கீடு செய்ய வேண்டாமே!
யாரேனும் உங்களிடம் ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் அணுகுமுறை நன்றாக உள்ளது’ என்று சொன்னால் ‘என்னை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும்…’ என்று பெருமைப்பட ஆரம்பிக்க வேண்டாம். ஏன் என்றால் பொதுவாகவே ஒருவரின் தனிப்பட்ட உணர்வினை பொதுப்படையாக்கினால் அந்த உணர்வின் வீச்சு நீர்த்துப் போகும்.
‘அப்படியா, ரொம்ப சந்தோஷம்.’ என்ற பதில்தான் எதிராளியின் உணர்வுக்கு நீங்கள் கொடுக்கும் ஆகச் சிறந்த மரியாதை.
எதிராளியின் உணர்வினை பங்கீடு செய்யாமல் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும்போது உங்களுள்ளும் நேர்மறையின் அளவு கிடுகிடுவென உயர்வதை நீங்களே உணர முடியும்.
போலவே, யாரேனும் ஒருவர் தனது கஷ்டத்தை பகிர்ந்துகொண்டால், இதெல்லாம் என்ன கஷ்டமா என்பதைப் போன்ற தோரணையில் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? இவருக்கு என்ன நடந்தது தெரியுமா? என அவர்களின் கஷ்டங்களை விவரித்து எதிராளியின் மனக்கஷ்டத்தைப் பொதுப்படையாக்கினால் அது அவரை மேலும் காயப்படுத்துவதுபோல்தான்.
’அடடே, இவ்வளவு கஷ்டமா, விரைவில் தீர வேண்டும். என்னால் ஏதேனும் செய்ய முடிந்தால் சொல்லுங்கள், செய்கிறேன்…’ என்றோ, ‘உங்கள் கஷ்டம் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும்… இறைவனை பிராத்திக்கிறேன்’ என்றோ உங்கள் பதில் அமைந்தால், அதுதான் அவருடைய வேதனையான மன உணர்வுக்கு நீங்கள் கொடுக்கும் அதிகபட்ச மரியாதை.
எதிராளியின் உணர்வினை பங்கீடு செய்யாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டு அவருக்கு ஆறுதலாக பேசும்போது அவருக்குள்ளும் ஒரு நேர்மறை உணர்வு பரவத் தொடங்கும்.
முயற்சிப்போமே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 16, 2023 | திங்கள்