பழக்கமா? போதையா?
ஒரு டாக் ஷோ. ஒருபக்கம் கணவனை திருத்த முடியும் என்று கூறும் பெண்கள். எதிர்பக்கம் திருத்துவது சாத்தியமே இல்லை என்று கூறும் பெண்கள்.
இதில் பேசுவதற்கு நிறைய வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் அது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களை திருத்துவது முடியுமா முடியாதா என்ற கோணத்தில் சென்றுவிட்டது.
ஒரு பக்கம் குடிபழக்கம் உள்ள கணவர், இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு மூன்றாவதாக டிவின்ஸ். ஆக நான்கு குழந்தைகள். டிவின்ஸ்க்கு 1-1/2 வயது இருக்கும்போது கணவன் இறந்துவிட்டதாகவும், தான் எத்தனையோ திருத்துவதற்கு முயற்சித்தும் திருத்த முடியவில்லை என அழமாட்டாத குறையாகச் சொல்லியும் எதிர்சாரியில் அமர்ந்திருந்த ஒரு பெண் (திருமணம் ஆகாத பெண்) எல்லாம் நாம் சொல்வதில்தான் இருக்கிறது. சொல்லுகிறபடி சொன்னால் திருத்தமுடியும் என்றும் தான் குடிபழக்கம் இருக்கும் ஆணை தனக்குப் பிடித்திருந்து குடி மட்டுமே அவரது குறையாக இருக்கும் பட்சத்தில் அவரை என்னால் மாற்ற முடியும் என்று கூறினார்.
‘எல்லாம் நாம் சொல்வதில்தான் இருக்கிறது…’, ‘எல்லாம் நாம் சொல்லுகிறபடி சொன்னால் திருந்துவான்…’ என்பதெல்லாம் அனுபவம் இல்லாத வாதங்கள்.
எப்படிச் சொன்னாலும் (சாம தான பேத தண்ட) வீட்டு வேலைகளைக் கூட பகிர்ந்துகொண்டு செய்ய வைக்க முடியாது. அவர்களுக்குள் இயல்பாக அந்த குணம் இல்லாதவரை. அப்படி இருக்கும்போது குடிப்பழக்கம் போன்ற போதைகளுக்கு அடிமையானவர்களை திருத்துவது என்பது சாத்தியமா என்பதை யோசிக்க வேண்டும்.
யாரையும் யாரும் திருத்தவே முடியாது. அவரவர்களுக்கு என ஒரு Pattern இருக்கிறது. பிறந்தது முதல் 28,30 வயது வரை (இப்போது 35, 40 என நீள்கிறது. அது வேறு விஷயம்) வீட்டில் ஒரு அம்மாவால், ஒரு அப்பாவால், சகோதரிகளால், சகோதரன்களால் மாற்ற முடியாததை திருமணம் செய்துகொள்ளும் பெண் மாற்றுவதற்கு மிகக் குறைந்த சாத்தியக் கூறுகளே உள்ளன.
அடிப்படையிலேயே நல்லவர்களாக இருந்தால் மட்டுமே தொடர்ச்சியாக அதை தக்க வைத்துக்கொள்ள முடியும். நடுவில் சில காரணங்களுக்காக நல்லவர்களாக மாறுபவர்கள் அதை தக்க வைத்துக்கொள்வது கடினம், Unless otherwise they have taken proper medical treatment.
எனக்குத் தெரிந்து வாயைத் திறந்தாலே தற்பெருமையும் அதன் காரணமாய் பொய்யும் பேசும் கணவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல இருக்கின்றன. அதுவும் ஒருவகை போதையே.
பழக்கம் வேறு, போதை வேறு. பழக்கம் போதையாக மாறினால் அதை அவர்களே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாது. அது குடிப்பக்கம், சிகரெட் பழக்கம், ஆன்லைன் ரம்மி, தற்பெருமை பேசுதல், பொய் சொல்லுதல் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. அவை எல்லாமே போதையின் கீழ்தான் வரும்.
பழக்கத்தை மாற்றலாம். 28, 30 வயது வரை இருப்பது வெறும் பழக்க வழக்கமாக மட்டும் இருக்காது. போதையின் விளிம்பைத் தொட்டிருக்கும்.
எனவே அவற்றை மாற்றுவதற்கு நல்ல மனநல ஆலோசகரை (மருத்துவரை) அணுகுவதே ஒரே வழி.
இன்றும் ஒரு பெண்ணுக்கு நான் கொடுத்த ஆலோசனை இது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 27, 2023 | திங்கள்