பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார்!
ஒருவரை நேர்காணல் செய்யும்போது நேர்காணல் செய்பவரும் சேர்ந்தே கவனிக்கப்படுகிறார். அவரது அறிவாற்றலும் கணிக்கப்படுகிறது. அவரும் சேர்ந்தே போற்றப்படுகிறார். அவரும் சேர்ந்தே உயர்கிறார்.
இப்போதுதானே சோஷியல் மீடியாக்கள். உடனுக்குடன் பேட்டி எடுத்தவருக்கும் நன்றி சொல்லி எல்லாம் பாராட்டுகள் கிடைக்கின்றன.
1992-ல் ஏது சோஷியல் மீடியாக்கள். அன்றில் இருந்து இன்று வரை வெளியான 165-க்கும் மேற்பட்ட பேட்டிகளை யார் பேட்டி எடுத்தார்கள் என்ற குறிப்பு எனக்கு தெரியும். என் சேகரிப்பில் என் பேட்டிகள் மட்டுமில்லாமல் பேட்டி எடுத்தவரின் குறிப்பும் சேர்ந்தே இருக்கும். எப்படி நினைவில் வைத்திருப்பீர்கள் என கேட்க்கிறீர்களா?
என்னை யார் பேட்டி எடுத்தாலும் அவர் குறித்த அறிமுகத்தை டைப் செய்து டாக்குமெண்டாக பதிவு செய்து வைத்துக் கொள்வேன்.
பேட்டி கொடுப்பவர் மட்டுமில்லாமல் பேட்டி எடுப்பவரும் சேர்ந்தே உயர்கிறார் என்பதை உணர்ந்தாலே அவர்களின் அணுகுமுறையை, யாரை பேட்டி எடுக்கிறாரோ அவரது துறை சார்ந்த அடிப்படை அறிவை, அவை குறித்த தேடலை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
அப்போதுதான் அந்த பேட்டி சிறப்பாக அமையும்.
அப்படி இல்லாமல் பேட்டி கொடுப்பவர் சொன்ன ஆழமான விஷயங்களை எல்லாம் விட்டு விட்டு பேட்டி எடுப்பவருக்கு என்ன தெரிகிறதோ அல்லது புரிகிறதோ அந்த அளவில் பேட்டி எடுத்து, பேட்டி கொடுப்பவரின் பிரமிக்கத்தக்க திறனை எல்லாம் வெகு சாதாரணமாக்கி விடுகிறார்கள்.
கேட்டுத் தெரிந்துகொள்ளும், அறிந்துகொள்ளும் நபர்கள் குறைந்து வருகிறார்கள். அப்போதைக்கு என்ன தேவையோ அதை அறையும் குறையுமாக அறிந்துகொண்டு வெளிப்படுத்திச் செல்வதால் உண்டாகும் பிரச்சனைகள் அவை. இது எல்லா துறைகளிலும் வியாபித்துள்ளது.
பேட்டி அளித்தவர் தன் மனதில் உள்ளதை நாசூக்காக எடுத்துச் சொன்னாலும்கூட ‘அவங்க… ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்ற பட்டத்தை தங்கள் வட்டத்தில் பரப்பி முத்திரை குத்திவிடுகிறார்கள்.
நல்ல விஷயங்களில் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதில் தவறில்லையே!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மார்ச் 30, 2023 | வியாழன்