#கதை: அறை எண் 1011-ல் போதிமரம்!

அறை எண் 1011 –ல் போதிமரம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

அதிகாலை 5.00.

‘அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். அத்தையும் மாமாவும் வந்து பார்த்தால் நல்லது’

அன்றைய காலை இப்படியான வாட்ஸ் அப் தகவலுடன் விடிந்தது அகிலனுக்கு. மாமாவின் மகள் அஸ்வினிதான் தகவல் கொடுத்திருந்தாள்.

அதிகாலை 6.00.

அகிலன் வழக்கம்போல் வாக்கிங் செல்லக் கிளம்பினான். குளிர் காற்று முகத்தில் அடித்தது. வெயில் ஆரம்பித்திருந்த மார்ச் மாதமானாலும் இரண்டு நாட்களாக மழை பெய்திருந்ததால் பூமி கொஞ்சம் குளிர்ந்திருந்தது.

மாமா. அற்புதமான மனிதர். அம்மாவின் உடன் பிறந்த அண்ணன். பாசமலர் சிவாஜி போன்று பாசத்தை நேரடியாகப் பொழியத் தெரியாவிட்டாலும் அம்மா மீது தனிபாசம் உண்டு. அம்மாவுக்கு ஏதேனும் உடம்பு சரியில்லை என்றால்கூட அவருக்கு மூக்கில் வியர்த்துவிடும். ‘இந்தப் பக்கம் வந்தேன். அதான் பார்த்துட்டுப் போலாம்னு…’ என்று ஏதேனும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டு வாசலில் வந்து நிற்பார். இத்தனைக்கும் அவருக்கு வயது சென்ற தைமாதம் 80-ஐ தாண்டிவிட்டது.

அம்மா மீது மட்டும் அல்ல. மைத்துனர் மீதும், அதான் அப்பா மீதும் அதீதப் பிரியம். அப்பாவும் அவரும் நண்பர்கள் போல. அப்பாதான் தன் வலதுகை என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இரண்டு தினங்களுக்கு ஒருமுறை போனில் பேசிவிடுவார். இரண்டு ஆண்கள் அரை மணி நேரம் என்ன பேசுவார்கள், அதுவும் போனில் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? பென்ஷன், ரேஷன், வீட்டு அரசியல், நாட்டு அரசியல் அது இது என பொதுவான விஷயங்களையும் பேசுவார்கள். அப்பா என்ன பேசினாரோ அதை தன் மனைவியிடமும் மகன் அகிலனிடமும் வரிவிடாமல் சொல்லியும் விடுவார்.

அகிலன் மனதுக்கு சங்கடமாக இருந்தது. இன்று எப்படியும் போய் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்.

காலை 7.00

அன்று அலுவலகத்தில் ஏகப்பட்ட மீட்டிங்குகள். ஒரு புதிய ப்ராஜெக்ட் குறித்த ஆலோசனை கூட்டம் வேறு இருந்தது. ஜெர்மனில் இருந்து ஜூம் மீட்டிங்கில் சேர்மேன் கலந்து கொள்ளும் முக்கியமான மீட்டிங். அவன் இல்லாமல் அதை நடத்த முடியாது. என்ன செய்வது என யோசித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க மனம் பரபரத்தது.

லேப்டாப்பை ஆன் செய்து, நேற்று அவன் பார்வைக்கு அனுப்பி இருந்த ப்ராஜெக்ட்டுகளின் கோடிங்கை இயக்கி சரி பார்த்து செய்ய வேண்டிய மாற்றங்களை இமெயில் செய்தான்.

இரண்டு புது டீம்களுக்கான ப்ராஜெக்ட்டுகளுக்கு குறிப்பெழுதி என்ன செய்ய வேண்டும் என வேர்டில் பட்டியலிட்டான். அதையும் மெயில் செய்தான்.

காலை 8.00.

மனைவியிடம் மட்டும் தகவல் சொன்னான். அப்பாவும் அம்மாவுக்கும் காலையிலேயே அதிர்ச்சி செய்தியை சொல்ல வேண்டாம் என நினைத்து அவர்கள் வாக்கிங்கில் இருந்து வந்ததும் பொறுமையாக சொன்னான். ‘அப்ப சரி, காலையிலேயே போய் பார்த்துட்டு வந்துடலாம்…’ என இருவரும் பரபரத்தார்கள்.

‘கொஞ்சம் பொறுங்கள். காலையில் இருவரும் டிபன் சாப்பிட்டுவிட்டுக்  கிளம்பலாம். நீங்கள் இருவரும்கூட வயதானவர்கள். மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள சாப்பாடு நேரத்துக்கு இருக்க வேண்டும் அல்லவா?’ என அவர்களை ஆசுவாசப்படுத்தினான்.

சமையல் அறையில் டிபனும், சாப்பாடும் தயாராகிக் கொண்டிருந்தது. ஹாலில் மனைவியும் மகளும் ஆஃபீஸுக்கும், பள்ளிக்கும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

காலை 9.00.

மனைவியும் மகளும் ஆஃபீஸுக்கும், பள்ளிக்கும் கிளம்பிச் செல்ல, போனில் டீம் லீடரையும், சில புரோகிராமர்களையும் அழைத்து அன்று மதியத்துக்குள் முடிக்க வேண்டிய வேலைகளை இமெயில் செய்திருப்பதாகச் சொல்லிவிட்டு தான் வருவதற்கு மாலை மூன்று மணி ஆகிவிடும் என தகவல் கொடுத்தான். ஜெர்மனில் இருக்கும் சேர்மேனுக்கு போன் செய்து மீட்டிங்கை ஒருநாள் தள்ளி வைத்துக்கொள்ள முடியுமா என கேட்டான். இரவு 7 மணி ஆனாலும் பரவாயில்லை. இன்றே பேசிவிட்டால் நல்லது என சொல்ல அவனும் ஒத்துக்கொண்டான். மாலை மூன்று மணிக்கான மீட்டிங் ஏழு மணிக்குத் தள்ளிப் போனது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

காலை 9.30

அப்பா அம்மாவுடன் தானும் டிபன் காபி சாப்பிட்டு இருவருக்கும் ஃப்ளாஸ்க்கில் வெந்நீர், முன் பசிக்கு பிஸ்கட், மதியம் தாமதமாகிவிட்டால் சாப்பிட தயிர்சாதமும், கொஞ்சம் பொறியலும் என சகலத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு தயாரானான்.

காலை 10.00

மனதுக்குள் நிறைய வேலைகள் ஓடிக்கொண்டிருந்ததால், செல்ஃப் டிரைவ் செய்ய வேண்டாம் என நினைத்து அலுவலக டிரைவரை வரச் சொல்லி இருந்தான்.

பகல் 11.00

டிரைவர் வருவதற்கு 10.30 ஆனது. கார் ஜி.எஸ்.டி சாலையில் பறந்து கொண்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் மாமா குறித்து ஏதேதோ பேசிக்கொண்டே வந்தார்கள்.

அகிலன் மனசு முழுவதும் ஜெர்மன் மீட்டிங்கிற்கான சிந்தனைகளே. லேப்டாப்பில் ஜூனியர் லோகசுந்தர் அனுப்பி இருந்த பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை எடுத்து அதில் மாற்றங்கள் செய்தபடி வந்தான்.

லோகசுந்தர் நல்ல உழைப்பாளி. அறிவாளிதான். ஆனால் ஆங்கிலம் மட்டும் சொதப்பி விடுவான். என்ன செய்வது ஒன்றில்லை என்றால் மற்றொன்று. எனவே அவனை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருந்தான். போனில் லோகசுந்தர் டீமிற்கு போன் செய்ய அவர்கள் டீமில் இருவர் ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டிருக்கிறார்கள் என்றார்கள். திரும்பவும்   லோகசுந்தருக்கே போன் செய்து பவர்பாயிண்ட் பிரசண்டேஷனில் இணைக்க வேண்டிய ஆடியோ ஸ்கிரிட்டை குறித்து விளக்கம் சொன்னான்.

‘மாலை 4 மணிக்கு ஜெர்மன் மீட்டிங்கிற்கான ப்ரிவியூ பார்ப்போம். டீமில் அனைவரையும் தயாராக இருக்கச் சொல்லவும்’ என பேசி முடித்து லேப்டாப்பை மூடினான்.

பகல் 12.00

நிமிர்ந்தபோது அப்பா கர்சீப்பால் கண்களை துடைத்துக்கொண்டிருந்தார். அம்மா கார் ஜன்னலுக்கு வெளியே வெறிச்சென பார்த்தபடி. அப்பா கொஞ்சம் சென்சிட்டிவ், ஓடி ஓடி உதவி செய்வார். யாருக்கேனும் ஏதேனும் என்றால் தனக்கு வந்ததைப் போல் துடிப்பார். அம்மா ப்ராக்டிகல். நடப்பது நடந்துத்தான் ஆகும் என்ற தெளிவு இருக்கும்.

‘என்னப்பா, ரொம்ப டயர்டா இருக்கா, இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்துவிடும்.’ என சொல்லிவிட்டு இருவரையும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் சொன்னான். தானும் குடித்தான்.

தண்ணீர்தான் எத்தனை விஷயங்களுக்கு வலிநிவாரணமாக இருக்கிறது. அதுவும் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும் நேரத்தில் குடிக்கும் ஒருவாய் தண்ணீர் உடல் முழுவதையும் சமநிலைக்குக் கொண்டு வருகிறதே என நினைத்தபடி அப்பாவையும் அம்மாவையும் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொன்னான்.

மதியம் 12.15

கார் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தபோது நேரத்தைப் பார்த்தான் அகிலன்.  10.45 க்கு கிளம்பி 12.15 மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் ஆகி இருக்கிறது. முக்கால் மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய தொலைவுதான். ஜனப் பெருக்கம். வாகனப் பெருக்கம். இரண்டு இடங்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரித்துள்ளது என நினைத்துக் கொண்டான்.

சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு நிற்கும் ஆஞ்சநேயர் கம்பீரமாய் வரவேற்றார்.

அப்பாவும் அம்மாவும் பத்திரமாக இறங்க வசதியாக ஆஸ்பத்திரிக்குள் செல்ல வேண்டிய இடத்துக்கு மிக அருகில் காரை நிறுத்திய டிரைவரிடம் விடைபெற்றான். ‘உள்ளே பார்க்கிங் இல்லைன்னா வெளியே நிற்கிறேன் சார். போன் செய்யுங்கள் வருகிறேன்’ என பவ்யமாக சொன்ன டிரைவருக்கு நன்றி சொல்லிவிட்டு ரிசப்ஷனில் மாமாவை சேர்த்திருக்கும் அறை எண் 1011-க்கு வழி எப்படி என விசாரித்துக்கொண்டு லிஃப்ட்டில் ஏறினான்.

அதற்குள் அலுவலகத்தில் இருந்து வாட்ஸ் அப்பில் வரிசையாக சில கேள்விகள், சந்தேகங்கள். அதற்கு பதிலை டைப் செய்தான். அதற்குள் இறங்க வேண்டிய தளம் வர அப்பா அம்மாவுடன் இறங்கிக்கொண்டான். இருவரையும் ஓரமாக இருந்த நாற்காலிகளில் அமர சொல்லிவிட்டு வாட்ஸ் அப்பில் பாதி அனுப்பிக் கொண்டிருந்த தகவலை முழுமையாக டைப் செய்யத் தொடங்க, அதற்குள் மாமா பெண் அஸ்வினி ஓடி வர அப்பா அம்மாவை அவளுடன் அனுப்பி வைத்தான். 5 நிமிடத்தில் தான் வருவதாகச் சொன்னான்.

மதியம் 1.00

அப்படியே அங்கிருந்த சேரில் அமர்ந்து வாட்ஸ் அப் அனுப்பி, அலுவலகத்தில் போன் செய்ய வேண்டியவர்களுக்கு போன் செய்து, அங்கு அன்று ஏற்பட்டிருந்த பிரச்சனைகளை தீர்த்துவைத்துவிட்டு நிமிர்வதற்குள் மற்றொரு கிளையிண்ட்டிடம் இருந்து அழைப்பு. அவருடைய அழைப்பை தவறவிடக் கூடாது என்பதால் அவருடனும் பேசினான்.

இதற்குள் ஏதோ ஒரு அமைப்பில் இருந்து அவனுடைய சர்வீஸுக்காக விருதளிக்க இருப்பதாகவும் அதற்கு அவன் ஒப்புதல் தேவை எனவும் கேட்க அது குறித்து என்ன ஏது என விசாரித்தான்.

நிமிர்ந்த போது மணி 1.00 என காட்டியது. ‘முக்கால் மணி நேரமாகவா ஆஃபீஸ் காலில் இருந்தோம்?’ என பதறியபடி அறை எண் 1011-ஐ நோக்கிச் சென்றான்.

மதியம் 1.15

உள்ளே நுழைந்ததும் மனம் ஆஃபீஸ் வாசத்தில் இருந்து ஆஸ்பத்திரி வாசத்துக்கு மாறத் தொடங்கியது. அத்தையும், அவருடைய மூத்த மகனும், மருமகளும் அப்பா அம்மாவுடம் மாமாவின் உடல்நிலை குறித்து பேசிக்கொண்டிருக்க, மாமா பெண் அஸ்வினி அவனை நோக்கி வந்தாள். கையைப் பிடித்துக்கொண்டு விசும்பினாள். அருகே அவளுடைய பத்து வயது மகன். மொபைலில் எதையோ விளையாடிக்கொண்டு.

மாமா சுய நினைவில்லாமல் படுத்திருந்தார். மூக்கிற்கும் வாய்க்கும் மட்டுமல்ல சிறுநீர், மலம் என அத்தனைக்கும் டியூப் வைத்திருந்தார்கள். இரவு முழுவதும் தொடர் விக்கல். கை வைத்தியமாக ஏதேதோ செய்து பார்த்திருக்கிறார்கள். கூடவே கூகுள், யு-டியூப் வைத்தியங்களும். காலையில் பாத்ரூம் செல்ல எழுந்திருக்க முயற்சிக்கையில் அப்படியே சரிந்துவிட்டிருந்தார்.

முதல் கட்ட பரிசோதனையில் மூளையில் ரத்தக் கசிவு. அரை கோமா நிலை. கண் திறக்கவில்லை. உடல் உறுப்புகள் அசைவில்லை. ஆனால் பேசினால் ‘ம்…ம்’ என்ற மெல்லிய முனகல் மட்டும் வருகிறது.

மதியம் 1.30.

வாட்ஸ் அப் குரல் கொடுக்க, அகிலன் மொபைலை மியூட்டில் போட்டான். அத்தையிடம் ஆறுதல் சொன்ன போது ‘பாருடா அகிலா, மாமா எப்படி படுத்துட்டார்னு…. ஓடி ஓடி உழைப்பார்… வீட்டில் சமையல் அறையில் ஒரு பாத்திரம் சிங்கில் இருக்கக் கூடாது தேய்க்கறேன்னு போயிடுவார், மொட்டை மாடியில் மாலை 4 மணிக்கு மேல் ஒரு துணி காயக் கூடாது. ஓடிச் சென்று எடுத்து வந்து மடித்து வைப்பார்… துறுதுறுவென ஓடிக்கொண்டிருந்தவர் எப்படி சாஞ்சுட்டார்னு பாருடா…’ என அழத் தொடங்கினார்.

அதற்கும் டாக்டர் உள்ளே வர, அவர் அதிர்ந்துபோய் ‘என்ன இங்கே இவ்வளவு கூட்டம், சப்தம்… ஒரே ஒரு அட்டண்டர் மட்டும் இருங்க…. மத்தவங்க வெளியே போங்க…’ என்று கடிந்துகொள்ள மாமா பையனைத் தவிர அனைவரும் வெளியே வந்தார்கள்.

அத்தை சொல்வது சரிதான். மாமா ஓரிடத்தில் சும்மா உட்கார மாட்டார். பல் இல்லா வாயும், சுருங்கிய தோலும் மட்டும்தான் வயதைச் சொல்லுமே தவிர அவர் செயல்பாடுகள் அத்தனையும் அதிரடி சரவெடிதான். தோட்ட வேலை, வீட்டு வேலை என அத்தனை சுறுசுறுப்பு.

கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா அம்மாவிடம் கண்களாலேயே ‘கிளம்பலாமா?’ என கேட்டான் அகிலன்.

அவர்கள் ஒப்புதல் கொடுத்தவுடன் சீஃப் டாக்டரிடம் சென்று மாமாவின் உடல்நிலை குறித்து பேசி விட்டு வந்தான். மூளையில் கட்டி. அது வெடித்து இரத்தக் கசிவு. நிற்பதற்கு மருத்துவம் செய்துகொண்டிருப்பதாக சொன்னார். வயதாகிவிட்டதால் ஆபரேஷன் செய்ய முடியாது. இரத்தம் தானாக நின்று சரியாக வேண்டும் என்ற கூடுதல் அதிர்ச்சியையும் கொடுத்தார்.

மதியம் 1.45.

மாமாவை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் என நினைத்து உள்ளே செல்ல, அப்போது அவருக்கு கஞ்சியை டியூபில் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நிமிடம் சர்வமும் அடங்கிப் போனது அகிலனுக்கு.

மாமா நன்றாக சமைப்பார். அதனால் நன்றாக சுவைத்து சாப்பிடவும் செய்வார். கொஞ்சம் ருசி குறைந்தாலும், அது தான் சமைத்ததாகவே இருந்தாலும் முகம் சுருங்கிவிடும். இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாம், பெருங்காயம் கொஞ்சம் அதிகமா போச்சு, உப்பு குறைத்திருக்கலாம் என அத்தனை ரசனையாக பேசியபடி சாப்பிடுவார்.

அத்தை அடிக்கடி மாமாவின் சாப்பாட்டு ரசனை குறித்து ஒன்று சொல்வார். ‘உங்க மாமாவுக்கு நாக்கு மட்டும் இல்ல மூக்கும் நீளம்தான்… மூக்கால் சாப்பிட்டாக் கூட ருசி சரியா இருக்கா இல்லையான்னு சொல்லிடுவார்… என்ன இது வாசனையாவே இல்லையே என நாக்கோடு சேர்ந்து மூக்கும் ருசி சொல்லும் அவருக்கு’ என செல்லமாகச் சொல்வார்.

இன்று மூக்கினால் உணவு இறங்கிக் கொண்டிருக்கிறது. ருசி தெரியுமா மாமாவுக்கு. உடலில்தான் ஸ்மரனையே இல்லையே.  இனி நினைவு திரும்பும் வரை அத்தனையும் படுக்கையில்தான்.

அகிலனுக்கு என்னவோ மாமா எழுந்து உட்கார்ந்து ‘கஞ்சியை சரியா கொதிக்கவிடலை’, ‘கஞ்சியில் உப்பு ஏன் போடலை?’ என்று கேட்பதைப் போல இருந்தது.

மதியம் 2.00

கார் வீடு நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. அப்பாவையும் அம்மாவையும் காரிலேயே டிபன் பாக்ஸை திறந்து சாப்பிடச் சொன்னான். முதலில் மறுத்தவர்கள் அவன் வற்புறுத்தியதால் சாப்பிடத் தொடங்கினார்கள்.

மொபைலை மியூட்டில் இருந்து எடுத்தான். ஜெர்மன் சேர்மேனுக்கு ‘இரவு 7 மணி மீட்டிங்கை தவிர்க்க முடியாத காரணத்தால் மறுநாள் காலை 11 மணிக்கு வைத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டதுடன் ‘அப்படி அந்த நேரம் உங்களுக்கு வசதியாக இல்லை என்றால் எப்போது வைத்துக்கொள்ளலாம்?’ என கேட்டு தகவல் அனுப்பினான்.

காலை 5 மணியில் இருந்து மதியம் 1.15 வரை அலுவலகம், நிர்வாகம், ப்ராஜெக்ட், விருது, மீட்டிங் என மனம் முழுக்க பரபரப்பு.

இப்போதோ, இறக்கும் வரை சுயநினைவுடன் வாயால் சாப்பிடும் அளவுக்கான தேக ஆரோக்கியம் மட்டும் இருந்துவிட்டால்போதும் என்ற ஆசுவாசம் மட்டுமே அவன் மனதுக்குள்.

1.15 மணி முதல் 2.00 மணி வரையிலான இடைவெளியில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் மனித மனங்களுக்குள்!

ஆம். அறை எண் 1011 நிச்சயமாக ஒரு போதிமரம்தான்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

மார்ச் 27, 2023 | திங்கள்

(Visited 206 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon