மெட்டாவெர்ஸ்
இன்டர்நெட்டில் ஒரு புதிய உலகம். அந்த உலகை நாம் நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். நம் அலுவலகமாகவோ, வீடாகவோ, திரை அரங்காகவோ, பூங்காவாகவோ, திருமண மண்டபமாகவோ, கல்லூரியாகவோ இப்படி எதுவாக வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அங்கே நம் உறவினர்களை, நண்பர்களை, அலுவகப் பணியாளர்களை யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம், விருந்தளிக்கலாம், பணி ஆலோசனை நடத்தலாம், வியாபார ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்ளலாம், திருமண வைபவங்கள் நிகழ்த்தலாம், மொய் எழுதலாம்.
ஆம். நிஜத்தில் என்னவெல்லாம் செய்கிறோமோ அவற்றை எல்லாம் அங்கு செய்து மகிழலாம். இன்னும் சொல்லப் போனால் நிஜத்தில் சாத்தியமில்லாதவற்றைக் கூட அங்கு அரங்கேற்றிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு இறந்துபோன நம் தாத்தா பாட்டி அல்லது அப்பா அம்மா இவர்களை காண வேண்டும் என நினைத்தால் அதற்கும் அங்கு சாத்தியக் கூறுகள் உண்டு.
உண்மைதான். இன்டர்நெட்டில் மெட்டாவெர்ஸில் நாம் உருவாக்கும் உலகத்தில் நாம் அங்கு செல்லப் போவது நமக்கான அவதார்கள் (Avatar) மூலம். நம் பிரதிநிதியாக அங்கு செல்வது நமக்காக நாம் உருவாக்கிக் கொள்ளும் உருவங்கள். அந்த உருவங்களுக்கு அவதார்கள் என்று பெயர். நாம் சந்திக்க இருக்கும் நபர்களும் அவர்களுக்கான அவதார்கள் மூலம்தான் அங்கு நடமாடிக்கொண்டிருப்பார்கள்.
ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யு-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் நமக்கான அக்கவுன்ட்டை உருவாக்கிக் கொள்வதைப் போல மெட்டாவெர்ஸ் உலகிலும் நமக்கான அக்கவுன்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
ஜூம் மீட்டிங், கூகுள் மீட், ஸ்கைப் போன்றவற்றில் நாம் நமக்கான யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து சைன் இன் செய்து கொண்டு கம்ப்யூட்டர், லேப்டாப், செல்ஃபோன், ஐபேட், டேப்லெட் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் மூலம் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுகிறோம் அல்லவா? இவற்றில், நாம் டிஜிட்டல் சாதனங்களுக்கு வெளியே நின்று கொண்டு, அந்த சாதனங்களின் திரையில் தெரியும் வீடியோ உருவங்களை சந்தித்து உரையாடுகிறோம். எழுத்து, படம், ஆடியோ, வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறோம்.
ஆனால், இதற்கும் அடுத்த நிலையான மெட்டாவெர்ஸில், இன்டர்நெட் உலகில், நாம் ஒருவருக்கொருவர் நேரிலேயே சந்தித்துப் பேசப் போகிறோம். கை குலுக்கப் போகிறோம். நட்பாக பழகப் போகிறோம், விருந்துண்ணப் போகிறோம், மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம், துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். இது ஒரு புதுவிதமான உணர்வை கொடுக்க இருக்கிறது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மே 1, 2023 | திங்கள்