வேலையும், பக்தியும்!
சென்ற வாரம், பட்டுக்கோட்டைக்கு திடீர் பயணம்.
திருப்பட்டூரில் உள்ள A2B -ல் டிபன் சாப்பிட்டு செல்லலாம் என நினைத்துச் சென்றோம்.
சாப்பிட்டு முடித்ததும் ரெஸ்ட் ரூம் பயன்படுத்தச் சென்றேன். அந்த ஓட்டல் பெயர் பொறித்த சீருடை அணிந்துகொண்டிருந்த பெண் ஒருவர், கருமமே கண்ணாயினராக சுத்தம் செய்து கொண்டிருந்தார். கழிவறைகள் சுத்தமோ சுத்தம்.
அந்த பெண்ணைப் பார்த்து சிரித்தபடி, குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என பேச்சுக் கொடுத்தபடி, இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்.
அவரும் வாங்க மறுக்காமல், ‘ரெண்டு பெண் குழந்தைகள். காலேஜ் படிக்கிறாங்க மேடம்…’ என்று சொல்லிக் கொண்டே காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை சொல்லாமல் உணர்த்தினார்.
நான் கொடுத்தது பொன்னோ, பொருளோ, ஆயிரக்கணக்கில் பணமோ அல்ல. ஆனாலும் தான் செய்கின்ற பணிக்காக கிடைக்கின்ற சிறு வெகுமதியைக் கூட பக்திமயமாக பெற்றுக்கொண்டதில் அவர் வெகு உயரத்தில் நின்றார்.
‘உங்கள் குழந்தைகள் நன்றாக வருவார்கள்’ என வாழ்த்துவிட்டு விடைபெற்றேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஏப்ரல் 16, 2023 | ஞாயிறு