#AI: ஆக்மென்டட் ரியாலிட்டியில் ஆஜானுபாகு உயரம்!

ஆக்மென்டட் ரியாலிட்டியில் ஆஜானுபாகு உயரம்!

பாத்ரூமில் டைல்ஸ் மாற்றினோம். இரண்டு நாட்கள் இரண்டு பேர் வேலை செய்தார்கள். எங்கள் வீட்டு பில்டரிடமே அந்த வேலையை கொடுத்திருந்ததால், அவரிடம் வேலை செய்யும் இருவரை அனுப்பி இருந்தார். வேலை மிக நேர்த்தி.

ஒரு முதன்மைப் பணியாளர். மற்றொருவர் அவருக்கு உதவியாளர். உதவியாளர் முதன்மைப் பணியாளரைவிட வயதில் மூத்தவர். வயது ஐம்பது இருக்கும். முதன்மைப் பணியாளருக்கு நாற்பது இருக்கும். வீட்டு மேல்கூரையை தொடும் அளவிற்கு ஆஜானுபாகு உயரம், தோற்றம் . அத்தனை உயரமும் அதற்கேற்ற உடல்வாகும் கொஞ்சம் வித்தியாசமாய் உணர வைத்தது.

வேலை செய்வதற்கு முன் எங்களிடம் பெரிய துணி ஒன்றை வாங்கி அதன் மீது அவர்கள் வேலைக்கான பொருட்களை வைத்துக் கொண்டார்கள். இதனால் தேவையில்லாத குப்பைகள் தரையில் சேராமல் இருந்தன.

வேலை செய்த பிறகு வாசலுக்கும் பாத்ரூமிற்குமான இடைவெளியில் படர்ந்திருக்கும் கல், மண், தூசி இவற்றை தடம் தெரியாத அளவுக்கு சுத்தமாக பெருக்கி அள்ளி துடைத்தார்கள். வீட்டு வாசலிலும் அப்படியே செய்தார்கள்.

தங்கள் வேலைகளில் கூட இத்தனை நேர்த்தியை காண்பிக்காதவர்களையே பார்த்திருந்த எனக்கு வேலைக்கு முன்பான Pre Preocessing, வேலைக்குப் பிறகான Post Processing பணி நேர்த்தி வியப்பை கொடுத்ததுடன் அவர்கள் மீது தனி மரியாதை உண்டானது.

வேலை முடிந்து கிளம்பும்போது இருவருக்கும் ஊக்கமாக இருக்கட்டுமே என டிப்ஸ் கொடுத்தோம். கண்களில் ஒற்றிக்கொண்டு வாங்கி சட்டைப் பையில் போட்டுக் கொண்டார்கள்.

சனிக்கிழமை என்பதால் அவரது பில்டர் கட்டிக் கொண்டிருக்கும் புது கட்டிடத்துக்குச் சென்றார்கள் வார சம்பளம் வாங்குவதற்கு.

இதற்கிடையில் நாங்கள் டைல்ஸ் போட்ட பாத்ரூமை திறந்து பார்த்தோம். நன்றாக காய்ந்திருந்தது. நட்ட நடுவில் ஒரு டைல்ஸில் பிளவு இருந்ததைப் போல் தெரிய உள்ளே சென்று டார்ச் அடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்து கொண்டோம். உடனே பில்டருக்கு போன் செய்தோம். அவரும் நேரடியாக வந்து பார்த்துவிட்டு அதை போட்டோ எடுத்து அந்த பணியாளருக்கு வாட்ஸ் அப் செய்தார். இன்றைக்குள் முடித்துத்தர சொல்கிறேன் என உறுதி அளித்துவிட்டு சென்றார்.

அவர் சொன்னபோது மணி 3.30. எங்கே இன்று நடக்கப் போகிறது. இதற்கு மேல் வந்து வேலை செய்ய மாட்டார்கள். நாளை ஞாயிறு. திங்கள்தான் வேலை நடக்கும் என சற்றே அலுத்துக்கொண்டு எங்கள் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டோம்.

மாலை 6 மணிக்கு அழைப்பு மணி அடிக்க, அந்த ஆஜானுபாகு பணியாளர் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார்.

விரைவாக உள்ளே நுழைந்து கீழே போட்டுக்கொள்ள ஒரு பெரிய காகிதத்தை வாங்கி அதில் தன் பொருட்களை வைத்துக்கொண்டு உடைந்த டைல்ஸை கொஞ்சம் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டே, முன்பே தெரிந்திருந்தால் அப்போதே செய்திருக்கலாம் என சொல்லியபடி அதை ஜக்கிரதையாகக் கொத்தி எடுத்துவிட்டு புது டைல்ஸ் ஒட்டினார்.

இடையில் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ஒரு மகன், மகள். மனைவி ஹவுஸ் மேக்கர் என்றார் ஆங்கிலத்தில். அட என வியந்து ‘என்ன படிச்சிருக்கீங்க?’ என்றோம்.

பத்தாவதுதான் மேடம் என்று சொல்லிக்கொண்டே கருமமே கண்ணாயிரமாக வேலை செய்து முடித்தார்.

‘பொதுவாக நான் 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை. ஆனால் இந்த உடைந்த டைல்ஸை அப்படியே விட்டுச் சென்றால் திங்கள் அன்று நான் வரும் வரை எனக்கு நிம்மதியாக தூக்கம் வராது…’ என்று சொல்லிக்கொண்டே தான் வேலை செய்த இடத்தை சுத்தம் செய்தபடி கிளம்ப ஆயத்தமானார்.

என்னையும் அறியாமல் ‘உங்களுக்கும் தூக்கம் வராதா?’ என்று கேட்டு விட்டேன்.

தான் செய்த வேலையில் சிறு குறை இருப்பதாக தெரிந்ததும் அதை அன்றே சரி செய்ய நினைத்த அவரது குணத்தினாலும், அப்படி சரி செய்யாமல் விட்டால் நிம்மதியாக தூக்கம் வராது என்று சொன்ன இயல்பினாலும் அவரது ஆஜானுபாகு உயரம் இன்னும் ஆஜானுபாகு உச்சத்தைத் தொட்டது.

இப்போது நாங்கள் மெட்டாவெர்ஸில் ஆக்மென்டட் ரியாலிட்டி ஆப் ப்ராஜெக்ட் வேறு செய்து கொண்டிருக்கிறோமா, அதே ஃபீலிங்கில் அவரது ஆஜானுபாகு உயரம் பலமடங்கு ஆஜானுபாகு உயரத்தை தொடுவதை உணர்வது அப்படி ஒன்றும் சிரமமாக இல்லை, மாறாக ஒருவிதமான சந்தோஷ நறுமணத்தை வீடு முழுவதும் பரப்புவதைப் போல இருந்தது.

நேற்றைய மாலை இப்படியாக!

குறிப்பு: ஆக்மென்டட் ரியாலிட்டி என்றால் என்ன கேட்பவர்களுக்கு சிறு விளக்கம். நிஜ உலகில் உள்ள ஒரு சூழலில், ஒரு புகைப்படத்தையோ, வீடியோவையோ, ஆடிவையோ அல்லது வேறெங்கோ இருக்கும் மிருகங்கள், பறவைகள், செடி கொடி இவற்றை இணைத்து வெளிப்படுத்துவதை ஆக்மென்டட் ரியாலிட்டி என்பர். உதாரணத்துக்கு நாம் விமான நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாகக் கொள்வோம். அப்போது அந்த இடத்தில் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் ஒரு உயிரியல் பூங்கா தோன்றி அங்குள்ள மிருகங்கள் நடமாடுவதை நம்மால் பார்த்து ரசிக்க முடியும். நாம் நின்று கொண்டிருப்பது விமான நிலையத்தில். ஆனால் தொழில்நுட்பம் மூலம் Zoo வில் இருப்பதைப் போல உணர முடியும். இது சிறு விளக்கமே. விரிவாகச் சொல்ல ஏராளமாக உள்ளன.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
மே 7, 2023 | ஞாயிறு

(Visited 1,693 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon