வெயில் மழை!
உடலைக் கருக்கும் சென்னை வெயில். இரண்டு தினங்கள் முன் ஒரு சோஃபா ஆர்டர் செய்திருந்தோம். அதை டெலிவரி செய்ய வருவதாக சொல்லி இருந்ததால், மதிய இடைவேளையில் காம்கேரில் இருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். சொன்ன நேரம் தப்பாமல், 20, 22 வயதில் இரண்டு இளைஞர்கள் வியர்வைக் குளியலுடன் வீட்டிற்குள் கொண்டு வந்து அசம்பிள் செய்தார்கள். வழியும் வியற்வையை சட்டை செய்யாமல் கருமமே கண்ணாயினராக இருந்தனர். முடித்தவுடன் பில்லில் கையொப்பம் இட்டு வாங்கிக் கொண்டு, டிப்ஸுக்காக காத்திருக்காமல், கிளம்ப ஆயத்தமானார்கள்.
நான்தான் பேச்சுக் கொடுத்தேன். அம்மா கொடுத்த தண்ணீரை குடித்தபடி பேசினார்கள்.
‘வெயில் ரொம்ப கடுமையா இருக்கு இல்ல…’
’ஆமாங்கா… முடியல…’
‘தினமும் இப்படி டெலிவரி இருக்கும் இல்ல…’
‘ஆமாங்கா… தினமும் 10 டெலிவரி செய்யணும்…’
இருவரில் வயதில் சிறியவராய் தெரிந்த இளைஞர் தான் எல்லாவற்றுக்கும் பதில் பேசினார்.
இதற்குள் அப்பா டிப்ஸ் கொடுப்பதற்காக பணம் எடுத்துவர ‘தினமும் டீ காபிக்கு பதிலா இளநீர் குடிங்க’ என்றேன் இயல்பாய்.
‘ஆமாங்கா, தினம் தயிர் சாதம் தான் எடுத்துட்டு வரோம்… கூடவே பாட்டில்ல மோரும்…’
இப்போதுதான் மற்றொரு இளைஞர் பேசினார் சிரித்தபடி.
‘தேங்யூ, டேக் கேர்…’ என்று சொன்னேன் இருவரையும் பார்த்து.
அவர்கள் கிளம்பிச் சென்றவுடன், மழை வர ஆயத்தம் ஆவதைப் போல, வானம் கருத்துக்கொண்டு வந்தது.
ரைமிங்காக எழுதுவதற்காக இந்த வரியை சேர்க்கவில்லை.
உண்மையிலேயே வானம் கருத்துக்கொண்டு வந்தது. நான் கிளம்பியதும் இரண்டு தூரலும் போட ஆரம்பித்தது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 16, 2023 | செவ்வாய்