வழி நெடுக பன்னீர் குளமும், இளநீர் தொப்பிகளும்!

வழி நெடுக பன்னீர் குளமும், இளநீர் தொப்பிகளும்!

கொழுந்து விட்டு ‘பற்றி’ எறியாத குறையாக சென்னை வெயில். பர்சனல் வேலை ஒன்றுக்கு அவசியமாக மடிப்பாக்கம் வரை நேரடியாக செல்ல வேண்டிய சூழல். வீட்டில் இருந்தபடி கைவினைப் பொருட்கள் செய்து வரும் பெண்மணியிடம் ஆர்டர் கொடுத்திருந்தோம். வேலை முடிந்துவிட்டது, நேரில் வந்து பார்த்து ஓகே சொல்லிவிட்டால் ஃபைனல் டச் செய்துவிடலாம் என்று சொன்னதால் கிளம்ப வேண்டியதாயிற்று.

அப்பா காம்கேருக்கு வந்துவிட தாகத்துக்கு தண்ணீர், வெயிலுக்கு தொப்பி, கோரோனா மற்றும் மாசுவுக்கு மாஸ்க், சுத்தத்துக்கு சேனிடைசர் என காரில் கிளம்பினோம். கூகுள் மேப் போட்டாயிற்று.

நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நெருங்க நெருங்க பிரமாண்ட பிரமாண்டமாக குழி தோண்டி வேலை நடந்து கொண்டே இருந்தது. சினிமாவில் ஹீரோ எந்த பக்கம் ஓடினாலும் ஆங்காங்கே பறந்து வந்து தாக்கும் வில்லன்களைப் போல எந்த வழியைத் தேடிப் பிடித்து சென்றாலும் அங்கே எல்லாம் தோண்டல்கள்தான்.

ஒரு கட்டத்தில் கூகுள் மேப் அமைதியாக நின்றுவிட நாங்களும் நடந்து செல்லலாம் என முடிவெடுத்து, ஒரு இடத்தில் காரை நிறுத்தி நிறுத்திய இடத்தை காருடன் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வழியும் இடமும் நினைவில் இருப்பதற்கும், காணாமல் போனால் சாட்சிக்கும்!

தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு, தலையில் தொப்பியுடன் நடந்து செல்ல ஆரம்பித்தோம். வெயில் தொப்பியைத் தாண்டி எங்கள் தலையிலும், முகத்திலும், செருப்பைத் தாண்டிய கொஞ்சம் தெரியும் காலிலும் இறங்கி தாண்டவமாடத் தொடங்கியது.

நாங்கள் சந்திக்க இருக்கும் பெண்மணிக்கு போன் செய்தால் அவர் எடுக்கவே இல்லை. தொடர்ச்சியாக முயற்சித்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தோம். அப்போது அந்த வழியாக பைக்கில் ஒருவர் வர, அவரிடம் தெருவின் பெயரைச் சொல்லி வழி கேட்டோம். அவரும் கனிவாக ‘அடடா, அதைத் தாண்டி வந்துவிட்டீர்களே… தோண்டி போட்டிருப்பதால் அங்கு செல்ல இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டும்…’ என சொல்லி பொறுமையாக வழி சொன்னார். முப்பது வயதுதான் இருக்கும்.

நாங்கள் நன்றி சொல்லி நடக்க முற்படுகையில் என்ன நினைத்துக் கொண்டாரோ ‘நான் வேண்டுமானால் உங்கள் இருவரையும் என் பைக்கில் ஒவ்வொருவராக அந்த இடத்துக்கு கொண்டு விடட்டுமா?’ என கேட்க நாங்கள் உண்மையிலேயே அந்த கனிவில் நெகிழ்ந்துதான் போனோம்.

’பரவாயில்லை சார்…. மிக்க நன்றி’ என்று மனப்பூர்வமாக மீண்டும் நன்றி சொல்ல அவரும் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

அப்படியே அவர் சொன்ன வழியில் நாங்கள் சென்று கொண்டிருக்க அந்த வழியாக ஒரு பெரியவர், 60, 65 இருக்கும் கையில் ஈபி கார்டுடன் ஒரு மஞ்சள் பையுடன் எதிர்பட நாங்கள் செல்ல வேண்டிய இடம் இந்த வழியில் தானே இருக்கிறது என ஒரு சந்தேகத்துக்காக கேட்டோம்.

அவர் தலை முழுவதும் வியர்த்திருந்தது. முகமும் சிவ சிவவென சிவந்து வயதின் முதிர்ச்சியால் தடுமாறி நடந்து வந்து கொண்டிருந்தார்.

நாங்கள் கேட்ட கேள்விக்கு நின்று நிதானமாக ‘ஆமாம். இப்படித்தான் போகணும்… பார்த்துப் போங்க… குண்டும் குழியுமா இருக்கு…’ என கரிசனத்துடன் சொல்ல எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவரைப் பார்த்த அந்த ஐந்து நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் அவர் தலைக்குத் தொப்பி கூட போடாமல் நடந்து வருவதையும், வேகாத வெயிலில் ஈபி கார்டுடன் நடந்து செல்வதையும், முகத்தில் வெயிலின் கொடுமையைத் தாண்டி வாழ்க்கையின் சோகமும் அப்பிக் கிடக்க அத்தனையையும் நான் மனதுக்குள் படித்துக்கொண்டிருக்க, அவரோ எங்களை பத்திரமாக செல்ல வழி நடத்திவிட்டு அவர் போக்கில் செல்ல ஆரம்பித்தார்.

இடை இடையே நாங்கள் யாரை சந்திக்க செல்கிறோமோ அவரை தொடர்பு கொண்டபடி இருந்தேன். அதற்குள் அங்கிருந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் ஒரு பாட்டி வெளியில் வந்து நாங்கள் இடம் தேடுவதை புரிந்துகொண்டு ‘எங்க போகணும்?’ என கேட்டு ‘அவங்க வீடா…’ என மிகப் பொறுமையாக வழி சொன்னார். அதற்குள் வீட்டின் உள்ளிருந்து ‘போனா போன இடம், வந்தா வந்த இடம்… என்ன பண்றீங்க வாசல்ல…. உள்ள வாங்க…’ என ஒரு இளம் பெண் பெருங்குரல் எடுத்து கத்த பாட்டி தன் வயதை மீறிய ஓட்டத்துடன் உள்ளே ஓடினார்.

நாங்கள் வெயிலுக்காக அப்படியே நிற்க ஒரு ஆட்டோ வந்தது. தெரு பெயரை சொல்லி அங்கு போகணும் என சொல்ல, ‘அது பக்கதில்தான்…’ என சொல்லி ஏற்றிக்கொண்டார். சொன்னபடி இரண்டு சந்து திரும்பியவுடன் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது.

நாங்கள் இறங்கிக்கொண்டு ‘எவ்வளவு?’ என கேட்க, ‘என்னங்க… இப்படி திரும்பி இங்குட்டு கொண்டு வந்து விட்டிருக்கேன்…போற போக்குல… பணம் எதுவும் வேண்டாம்…’ என சொல்லியபடி ஆட்டோவை கிளப்பினார்.

நாங்கள் வெயிலிலும் வியர்வையிலும் வியர்க்கவில்லை. குளிர்ந்தோம்.

கூகுள் மேப்புக்கு இப்போது எங்கிருந்து திடீரென உயிர் வந்தது என தெரியவில்லை. ‘You have reached your destination’ என கம்பீரமாக சொல்லி விட்டு அடங்கியது.

’போனை ஏன் எடுக்கவே இல்லை…’ என கொஞ்சம் வேகமாக குரலை உயர்த்தி நான் கேட்க ‘சாரி மேடம், என் செல்போன் உடைந்துவிட்டதால் வேலை செய்யலை’ என கைவினைப் பொருட்கள் பெண்மணி எங்களுக்கு உட்கார நாற்காலி எடுத்துப் போட்டு தண்ணீர் வேண்டுமா என கேட்டு கோபத்தைக் குறைக்க முயற்சி செய்தார். இதற்குள் அவரிடம் பணிபுரியும் பணிப்பெண் அவருக்கு டீ போட்டு வர, எங்களுக்கும் வேண்டுமா என கேடக, நாங்கள் அந்த நேரத்தில் டீ சாப்பிடுவதில்லை என சொல்லி நாங்கள் வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிய போது ‘காரை நிறுத்திய இடத்துக்கு எப்படிச் செல்வது’ என கேட்டோம். அப்போது அவரிடம் வேலை செய்யும் ஒருவர் ‘கார் எண் சொல்லுங்க, நான் எடுத்து வரேன்’ என சொல்லி கார் கீயை வாங்கிக்கொண்டு போனார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் காருடன் வந்தார். அவருக்கும் ஒரு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம்.

எங்களை தன் பைக்கில் இறக்கி விடுகிறேன் என சொல்லிய முப்பது வயது இளைஞர், வேகாத வெயிலில் தான் நடக்கவே கஷ்டப்படும் பெரியவர் எங்களை பார்த்து நடக்கச் சொன்ன கரிசனம், சரியான வழியைக் காட்டிய பாட்டி, ஆட்டோவில் கட்டணம் இன்றி ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர், எங்கள் காரை எடுத்து வந்து கொடுத்த பணியாளர் என தங்கமான மனிதர்களை ஒரே நாளில் சந்தித்த நினைவலைகளுடன் வீட்டுக்கு வந்தோம்.

வழி நெடுக பன்னீர் குளமும், இளநீர் தொப்பிகளும் நிறைந்திருந்த இடத்துக்குச் சென்றுவிட்டு வந்த திருப்தி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 20, 2023 | சனிக்கிழமை

(Visited 1,884 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon