அடடா இதுவல்லவா தன்னம்பிக்கை!

அடடா இதுவல்லவா தன்னம்பிக்கை!

எனக்குத் தெரிந்த பெண் தன் மகள் மருத்துவப் படிப்பை நல்லபடியாக முடித்து ஹவுஸ் சர்ஜன் சேர்ந்தவுடன் பிரார்த்தனைக்காக மொட்டைப் போட்டுக்கொண்டார், மூன்று மாதங்களுக்கு முன்பு.

அதன் பிறகு இப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன். பாப் வைத்துக்கொண்டதைப் போல தலைமுடி வளர்ந்திருந்தது. நல்ல ப்ரொவஷனல் லுக். ‘ரொம்ப அழகா இருக்கு மேடம் ஹேர் ஸ்டைல்‘ என்றேன்.

‘நான் கூட ஆரம்பத்தில்….’ என்று ஆரம்பித்தார். ‘கூச்சப்பட்டேன் வெளியில் வருவதற்கு’ என்று சொல்வார் என நினைத்து ஆர்வமுடன் அவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்கத் தயாரானேன்.

அவர் சொன்ன பதிலில் ‘அட இதுவல்லவா தன்னம்பிக்கை’ என அசந்து போனேன்.

‘நான் கூட ஆரம்பத்தில் மற்றவர்கள் என்னை பார்க்க சங்கடப்படுவார்கள் என்று யோசித்து விக் வைத்துக்கொள்ளலாமா என நினைத்திருந்தேன். ஆனால் விக் வைத்தால் வளரும் தலைமுடியை பிடித்து இழுக்கும் என பார்லரில் சொன்னதால் அப்படியே விட்டு விட்டேன்’ இதுதான் அவரது தன்னம்பிக்கை பதில்.

எனக்கு மற்றவர்களை பார்க்க சங்கடமாக இருக்கும் தலையில் முடி இல்லாமல் என்பதற்கும், மற்றவர்களுக்கு என்னைப் பார்க்க சங்கடமாக இருக்கும் தலையில் முடியில்லாமல் என்பதற்கும் ஒரு நூலிழை வித்தியாசம்தான்.

நூலிழை வித்தியாசத்தில்தான் அவரவரின் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, துக்கம், கொண்டாட்டம், சோகம், வாழ்க்கை எல்லாமே!!!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 22, 2023 | திங்கள்

(Visited 580 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon