மெட்ராஸ் பேப்பருக்கு வாழ்த்துகள்!
மெட்ராஸ் பேப்பருக்கு (Madras Paper dot com) நாளை (ஜூன் 1, 2023)முதல் பிறந்த நாள். இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் படித்த போது, மகளிர் தின சிறப்பிதழில் (மார்ச் 8, 2023) ‘இருநூறு புத்தகங்களின் ஆசிரியர்’ என்ற தலைப்பில் என்னை கெளரவித்து பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். அது நினைவுக்கு வந்து சென்றது.
என் பேட்டியை படித்த 25 வயது இளம் பெண் ‘ரமீஜா பர்வீன்’ மெட்ராஸ் பேப்பரில் வெளியான என் பேட்டி குறித்து தொலைபேசியில் மகிழ்ந்து பாராட்டிப் பேசினார். நான்தான் அதை அப்படியே எழுதி அனுப்பச் சொல்லி இருந்தேன்.
அந்த வாழ்த்து செய்தியில் மெட்ராஸ் பேப்பர் குறித்தும் இருந்ததால் இதையே மெட்ராஸ் பேப்பருக்கு வாழ்த்தாக சமர்ப்பிக்கிறேன்.
ஒரு பத்திரிகையோ, ஒரு பேட்டியோ, ஒரு எழுத்தோ, ஒரு பேச்சோ எதுவாக இருந்தாலும் அது யாரோ ஒருவரது இதயத்தைத் துளைத்து மனதைக் குடைந்து அவர்களை வாழ்க்கையில் ஒரு படி மேலே உயரச் செய்ய வேண்டும். அந்த வகையில் மெட்ராஸ் பேப்பரும், அதில் வெளியான என் பேட்டியும் அமைந்திருக்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
மெட்ராஸ் பேப்பருக்கு காம்கேரின் மனமார்ந்த வாழ்த்துகள்.
இனி விமர்சனம்:
//
என் பள்ளிக் காலத்திலிருந்தே நான் வியந்து பார்க்கும் ஒரு பெண்மணி காம்கேர் புவனேஸ்வரி மேம். இளம் வயதில் இவர்களை பேட்டி எடுக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை என் தந்தை போட்டு காட்டும் போது, அதை ஆர்வமோடும் இதைப்போன்று நானும் ஒரு நாள் சாதிக்கவேண்டும் என்ற கனவோடும் பார்த்த அனுபவம் இன்னும் என் மனதில் இருக்கிறது. இன்றைய இந்த 2K கிட்ஸ் generations க்கு பெண்கள் ஒரு நிறுவனத்திற்கே முதலாளி ஆக முடியும் என்பது பெரிய வியக்கத்தக்க விஷயமாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், என்னைப் போன்ற 90’s கிட்ஸிற்கு நாங்கள் வளர்ந்த சூழலில் ஒரு பெண் வேலைக்கு போவது வேண்டுமென்றால் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் தன்னந்தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதில் பல ஆண்டு காலமாக நிர்வாகம் செய்ய முடியும் என்று சொன்னால் அது எங்களுக்கு சிறகை விரித்து விண்ணில் பறக்க ஆர்வமூட்டும் ஒரு பெரிய உத்வேகம் தான்.
இன்று 25 வயதில் நான் சுயமாக ஒரு அக்கவுன்ட்டிங் பயிற்சி நிறுவனம் துவங்கி பெண்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது என் கனவு. அதற்கான முயற்சியில் இருக்கும் சமயத்தில் மறுபடியும் மெட்ராஸ் பேப்பரில் காம்கேர் புவனேஸ்வரி மேடம் அவர்களை கோகிலா பாபு என்பவர் எடுத்த பேட்டியை வாசித்தேன்.
அதில் எனக்கு மிகவும் பிடித்தது காலையில் அவர்கள் 3.30 மணிக்கெல்லாம் எழுந்து அவர்களின் நாளைத் துவங்கிவிடுவார்கள் அதனால் மற்றவர்களை விட ஒரு நாளில் அதிக நேரம் கிடைக்கும் என்று சொன்னது. இந்த பரபரப்பான ஃபாஸ்ட் ஃபுட் காலத்தில் time management என்பது மிக முக்கியமான ஒன்று.
காம்கேர் புவனேஸ்வரி மேமின் பேட்டியை படித்தவுடன் இவர்களைப் போல சாதிக்க நினைத்தால் மட்டும் பத்தாது, அவர்களை போல உழைக்கவும் கற்க வேண்டும் என எனக்கு மறுபடியும் நினைவூட்டியது.
இன்னும் இந்த பேட்டியை வாசிக்கும் போது, இப்பேற்பட்ட ஒரு சாதனைப் பெண்மணியை என் தந்தை மூலம் ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டு அவர்கள் அலைப்பேசி எண் வாங்கி என் பள்ளி நாட்களில் துள்ளிக் குதித்து மேடமிடம் போனில் பேசிய நினைவுகளும் வந்து போனது.
நம் 24 மணி நேரம் நம் கையில் தான். அதை முழுமையாக உபயோகம் செய்தால் எந்த எல்லைக்கும் போக முடியும் என்பதற்கு நம் கண் எதிரே உள்ள உதாரணம் காம்கேர் புவனேஸ்வரி மேடம்.
ரமீஜா பர்வீன்
//
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 31, 2023 | புதன்