திருஷ்டி!
குழந்தைகளை குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்தால், சில குழந்தைகளுக்கு சின்னதாக அனத்தும். காய்ச்சல் வரும். வீட்டுப் பெரியவர்கள் கண்பட்டிருக்கும் என சொல்லி சுத்திப் போடுவார்கள்.
குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. 70 வயதைத் தாண்டிய வீட்டுப் பெரியவர்களுக்கும் கண்படும் என்பதை கண்கூடாக நான் பார்த்திருக்கிறேன்.
அப்பாவும் அம்மாவும் அவர்களுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவரது பேரனின் பூணல் கல்யாணத்துக்குச் சென்றுவிட்டு வந்ததில் இருந்து அப்பா சோர்வாக இருந்தார். அப்பா ஓர் இடத்தில் சோர்வாக அமர்ந்து பார்ப்பதே வெகு அரிது.
மாலையில் நான் காம்கேரில் இருந்து வந்ததும் அப்பாவை உற்சாகப்படுத்த ‘என்ன உன் ஆஃபீஸ் நண்பர்கள் எல்லாம் உன்னைப் பார்த்து எப்படி இப்படி இளமையா இருக்கே….அப்படி இப்படின்னு பேசினார்களா?’ என்று நான் கேட்க, அப்பாவுக்குள் இன்ஸ்டண்ட் எனர்ஜி நுழைந்து கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.
’யாரும் கேட்கலைன்னாலும் மனசுக்குள் நினைத்திருப்பார்கள்…’ என சொல்லிக் கொண்டே அப்பா மாலை விளக்கேற்றியவுடன் வீடு முழுவதும் சூடம் காண்பிக்கும்போது (நித்தியப்படி வழக்கம்), அதை அப்படியே வாங்கி, அவர் பக்கம் திருப்பி, அம்மாவையும் அழைத்து நிற்க வைத்து திருஷ்டி சுத்திப் போட்டேன்.
அப்பா சுறுசுறுப்பானார். நான் இரட்டிப்பு சுறுசுறுப்பானேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
மே 30, 2023 | செவ்வாய்