என் உரை குறித்தும், எங்கள் காம்கேர் குறித்தும்!
எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பலர் முன் பேசுவது மற்றொரு கலை. இரண்டும் ஒன்றல்ல.
எழுதும்போது எழுதுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். எந்த சூழலிலும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்துகொண்டு எழுதமுடியும். குறிப்பாக எந்த உடை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். எழுதும்போது நாமாக வீடியோ எடுத்தாலே தவிர நம் உடல் மொழி குறித்து யாரும் கவலைப்படப் போவதில்லை. கைகளால் காகிதத்தில் எழுதலாம், வாயால் பேசி மொபைலில் எழுதலாம், லேப்டாப்பில் எழுதலாம் இப்படி பல செளகர்யங்கள் எழுதுவதில் உள்ளன.
ஆனால், பேசும்போது நிறைய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நம் சிந்தனை சீராக இருக்க வேண்டும். இடையில் அன்றைய தினம் நாம் சந்தித்த சர்ச்சைகள் நினைவுக்கு வரக்கூடாது. பார்வையாளர்களின் அசைவுகள் நமக்கு எரிச்சலை உண்டு செய்யக் கூடாது. அப்படியே உண்டு செய்தாலும் அதை அடக்கிக்கொண்டு புன்சிரிப்புடன் பேச வேண்டும். நம் உடல் மொழியிலும், அணியும் உடையிலும் அதிக கவனம் எடுக்க வேண்டும். இந்த இரண்டுமே பார்வையாளர்களை உறுத்தக் கூடாது.
பார்வையாளர்களை நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் கட்டிப்போட வேண்டும். அத்தனை வசீகரமாக நம் உரை இருக்க வேண்டும்.
அதுவும் உலக அரங்கின் முன் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் மக்கள் முன்னிலையில் சரியாகவும் தெளிவாகவும் பேசுவதற்கு இறை அருளும், இயற்கையின் கருணையும் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.
இத்தனை வியாக்கியானம் இப்போது எதற்கு?
வருகின்ற ஜூலை 21-23 வரை மலேசியாவில் நடைபெற உள்ள 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்துப் பேசுவதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன்.
அதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் உதித்த நற்காலை சிந்தனையின் விளைவே இந்தப் பதிவு.
மாநாட்டில் காட்சிப்படுத்த என்னைப் பற்றிய சுய அறிமுகம் கேட்டிருந்தார்கள். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் எதிர்நோக்கி இங்கு பகிர்கிறேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் மற்றவை.
நன்றி
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 10 2023