பிரபலங்கள்!
சென்னையில் இருந்து மலேசியா செல்வதற்கு விமான நிலையத்தில் இமிகிரேஷன் பாயிண்ட்டில் பணியில் இருந்த நடுத்தர வயது பெண் (சென்னையைச் சேர்ந்தவர்தான்), எனக்கு முன் சென்றவரது (ஆண்) பாஸ்போர்ட் விசா போன்றவற்றை பரிசோதித்துவிட்டு அவற்றை அவரிடம் கொடுத்த பிறகு புன்னகையுடன் ‘எதற்காக மலேசியா செல்கிறீர்கள்…’ என கேட்டுவிட்டு தொடர்ச்சியாக அவர் தன்னை எழுத்தாளர் என்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குச் செல்வதாகவும் சொன்னதால் அது குறித்து கண்களை விரித்து ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போ நீங்க சிறப்பு அழைப்பாளராக செல்கிறீர்கள். வாழ்த்துகள் எனக் கூறி வாழ்த்தினார்.
அவர் நகர்ந்ததும், நான் சென்றேன். என் பாஸ்போர்ட் விசாவை வாங்கிக்கொண்டவுடன் ‘அவர் என்னைப் பற்றி கேட்பார்’ என நினைத்து பதில் சொல்ல வார்த்தைகளை மனதுக்குள் கோர்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் என் பாஸ்போர்ட் விசாவை கையில் வாங்கியவுடனேயே ‘நீங்க மலேசியா மாநாட்டுக்கு பார்வையாளராக செல்கிறீர்களா?’ என கேட்டபோது சுர்ரென கோபம் தான் வந்தது.
‘எதற்காக மலேசியா செல்கிறீர்கள்?’ என கேட்பதற்கு அவருக்கு முழு பணி உரிமை இருக்கிறது. ஆனால் ‘மலேசியா மாநாட்டுக்கு பார்வையாளராக செல்கிறீர்களா?’ என கேட்பது முழுக்க முழுக்க அனுமானம் மட்டுமே.
ஆண் என்றால் சிறப்பு அழைப்பாளர், பெண் என்றால் வெறும் பார்வையாளர் என்பது எப்படி அவர் மனதுக்குள் பதிந்திருந்தது என்று நினைத்து நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகும் நம் பிரஸ்தாபத்தை சொல்லவில்லை என்றால் எப்படி?
அவர் பேசியது முழுக்க முழுக்க தமிழ்தான் என்றாலும், நான் சொல்ல வேண்டியதை ஆங்கிலத்தில் படபடவென சொல்லிமுடித்தேன். கோபமும், டென்ஷனும் வரும்போது ஆங்கிலமும், படபடப்பும் சேர்ந்துகொண்டு வருவது சுபாவமாகிவிட்டது.
அவர் பதில் ஏதும் சொல்லாமல் பாஸ்போர்ட் விசாவை பரிசோதிக்க தலையை குனிந்துகொண்டார்.
அப்படி என்ன சொன்னேன்?
‘உலக அளவில் நடக்கும் ஒரு மாநாட்டில் ஐடி துறை பற்றி பேச நான் மட்டுமே சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். 32 ஆண்டுகள் ஐடி நிறுவன சி.ஈ.ஓ ஆக செயல்படுகிறேன். 32 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஆரம்பித்த நிறுவனம் இன்றும் தொய்வில்லாமல் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது…’ என்பதை ஆங்கிலத்தில் சொன்னேன்.
ஒரு முறை செங்கல்பட்டை அடுத்த 99 கிமீ காபி ஷாப்பில் காபி குடிக்க நானும் என் பெற்றோரும் காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். அப்போது அதன் உரிமையாளர் எங்களை வரவேற்று நன்றாக பேசி உபசரித்தார்.
இந்த காபி ஷாப்புக்கு திரைப் பிரபலங்கள், இலக்கியப் பிரபலங்கள் எல்லோரும் வருவார்கள் என்று சொன்னார்.
பொதுவாக அமைதியாகவே இருக்கும் எனக்கு அன்று ஏனோ வாயைத் திறந்து சற்று காமெடியாக பேசத் தோன்றியது.
‘சார், இப்போது கூட நீங்கள் ஒரு பிரபலத்திடம்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்றேன்.
அதற்கு அவர் கண்களை விரித்து ‘அப்படியா…. சார் என்ன செய்கிறார், எந்தத்துறை…’ என கேள்விகளால் அடுக்கிக்கொண்டே என் அப்பாவின் கைகளை பிடித்துக் குலுக்கினார்.
என் அம்மா சிரித்தபடி ‘இவர் பிரபலம் அல்ல. இவர் பிரபலத்தின் அப்பா. நான் பிரபலத்தின் அம்மா. அதோ அங்கே பாருங்கள் அவர்தான் அந்தப் பிரபலம்…’ என்று என்னை நோக்கி கைக்காட்டினார். அம்மா சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் நகைச்சுவையுடன் சொல்லிவிடுவார். அது அவர் சுபாவம்.
பின்னர் அவர் என்னிடம் என் துறை குறித்தும் சாதனைகள் குறித்தும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததும் கிளம்பும் சமயம் மற்றொரு காபி அவர் செலவில் (அவர்தான் கடையின் உரிமையாளர்) வாங்கிக்கொடுத்தனுப்பியதும் உபகதைகள்.
எப்போதுமே பிரபலம் என்ற கிரீடத்தை சுமந்து செல்வது வேதனைதான். ஆனால் தவறான அல்லது மதிப்பைக் குறைத்து எடை போடும் இடங்களில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வதும் நம் கடமை அல்லவா?
புகைப்படம்: ஜூலை 21-23, 2023 மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற போது என்னை வழி அனுப்ப வந்திருந்த என் அப்பா, அம்மா!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 2023